கோலாலம்பூர் – நேற்று அகால மரணமடைந்த கவிச்சுடர் காரைக்கிழார் மறைவு குறித்து சுகாதார அமைச்சரும் ம.இ.கா தேசியத் தலைவருமான டத்தோஸ்ரீ டாக்டர் ச.சுப்பிரமணியம் தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொண்டுள்ளார்.
நேற்று வெளியிட்ட பத்திரிக்கை அறிக்கையில் “விபத்தொன்றில் மரபுக் கவிஞர் கவிச்சுடர் காரைக்கிழார் அவர்கள் இம்மண்ணை விட்டுச் சென்றது மிகவும் வேதனை அளிக்கிறது. மலேசிய நாட்டில் பினாங்கு மாநிலத்தில் பிறந்த கவிச்சுடர் அவர்களின் மறைவானது மரபு கவிதை உலகிற்கு மாபெரும் இழப்பாகும்” என்று சுப்ரா தெரிவித்துள்ளார்.
“அழிந்து போன அல்லது உயிரற்ற ஒரு பொருளைக் கூட மனிதனின் படைப்பாற்றலின் வழி மீண்டும் இவ்வுலகிற்குக் கொண்டு வர முடியும் என்பதை கவிஞர் அவர்கள் அவருடைய “மாசத்தி” எனும் கவிதையில் சுட்டிக்காட்டியிருப்பார். அவ்வகையில், இன்று இவ்வுலகை விட்டுச் சென்றது கவிஞரின் உடல் மட்டுமே தவிர, காலத்தால் அழியாத அவருடைய படைப்பாற்றல் அல்ல” என்றும் சுப்ரா காரைக்கிழாருக்கு புகழாரம் சூட்டினார்.
“மறைந்த கவிஞரின் புகழ் கவிதை உலகில் நிலையானது. கவிச்சுடரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனை இறைஞ்சுகின்றேன். அன்னாரை இழந்து துயருறும் அவர்தம் குடும்பத்தினருக்கு எனது ஆழந்த இரங்கலையும் தெரிவித்துக் கொள்கிறேன்” என சுப்ரா மேலும் தனது பத்திரிக்கை அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.