Home Featured நாடு நினைவஞ்சலி: “அலையோசை” எழுப்பி, கவிதையில் “கணைகள்” தொடுத்த கவிச்சுடர் காரைக்கிழார்!

நினைவஞ்சலி: “அலையோசை” எழுப்பி, கவிதையில் “கணைகள்” தொடுத்த கவிச்சுடர் காரைக்கிழார்!

2277
0
SHARE
Ad

கோலாலம்பூர் – (மறைந்த கவிச்சுடர் காரைக்கிழாரின் தமிழ்ப் பணிகள், கவிதைப் படைப்புகள், நினைவுகள் குறித்து செல்லியல் நிர்வாக ஆசிரியர் இரா.முத்தரசன் வரையும் நினைவஞ்சலி)

Karaikilarகவிச்சுடர் காரைக்கிழார் மரபுக் கவிதை வடிவில் கதை சொல்லிய ‘அலையோசை’ நூல்தான், நான் இளம் வயதில் முழுமையாகப் படித்து முடித்த கவிதை நூல்.

அதுவரை கவிதைகளை பத்திரிக்கைகளிலும், தொகுப்பு நூலாகவுமே படித்து வந்த எனக்கு அலையோசை அந்த இளம் வயதில் பிரமிப்பை ஊட்டியது. அப்போது முதல் காரைக்கிழாரின் மீதான அபிமானமும் பெருகியது.

#TamilSchoolmychoice

காலப்போக்கில் அலையோசை அளவுக்கு நூல் வடிவத்தில் கவிதை சொல்லிய கவிஞர்கள் தமிழகத்தில் கூட மிகவும் குறைவு என அறிந்தபோது காரைக்கிழாரின் மீதிருந்த மதிப்பும், அவரது கவிதைப் புலமை மீதான மரியாதையும் மேலும் அதிகரித்தது.

அதன் பின்னர் அவரது கவிதைகள் எப்போது வந்தாலும் அதனை முழுமையாகப் படித்துவிடும் வழக்கத்தைக் கொண்டிருந்தேன்.

பின்னர், பல்வேறு சந்தர்ப்பங்களில் அவருக்கும் எனக்கும் நிகழ்ந்த சந்திப்புகளின் காரணமாக அவருடன் நட்பும், பரிச்சயமும் ஏற்பட்டது. நெருக்கமான நட்பு என்றில்லாவிட்டாலும், பார்க்கும் போதெல்லாம், “எப்படி இருக்கீங்க” எனத் தவறாமல் நலம் விசாரித்து சிறிது நேரம் அளவளாவும், நல்ல குணத்தைக் கொண்டிருந்தவர் காரைக்கிழார்.

மலேசியத் தமிழ் இலக்கிய உலகில் கவிதை என்று வரும்போது, முதல் மகுடம் காரைக்கிழாருக்குத்தான் என்பதை மற்ற கவிஞர்களே மறுப்பில்லாமல் ஒப்புக் கொள்வர். அவர்களுக்கும்கூட காரைக்கிழாரின் கவிதை மீது காதலும், ஈர்ப்பும் இருந்தது என்பதோடு, அவரது சம கால கவிஞர்கள் அனைவரும் அவரோடு மிகவும் நெருங்கிய நட்பு பாராட்டினார்கள் என்பதும் மலேசியத் தமிழ்க் கவிதை உலகம் பெருமைப்பட்டுக்கொள்ளக்கூடிய ஓர் அம்சம்.

காரைக்கிழாரின் நற்பண்புகளுக்கான மற்றொரு உதாரணமும் அதுதான்!

தமிழ் நேசனில் தொடங்கிய தமிழ்ப்பணி

தமிழ் நேசனில் தொடங்கிய அவரது தமிழ்ப்பணி பின்னர் பல நாளிதழ்களுக்கு விரிவடைந்தாலும், தொடர்ந்து கவிதைகள் எழுதி மலேசியத் தமிழ்க் கவிதை  உலகுக்கு செழுமையும் சிறப்பும் ஊட்டி வந்தார் அவர்.

Karaikilar-Kanaigal-book coverபுதிய பாணியில் அவர் எழுதிய ‘கணைகள்’ கவிதைத் தொகுப்பு நூலும், அவரது கவிதை ஆற்றலுக்கு முத்திரை பதித்தது என்பதோடு, தமிழ் நாடு வரை பல கவிஞர்களை அவரை நோக்கியும், அவர் சார்ந்திருந்த மலேசியத் தமிழ் இலக்க உலகை நோக்கையும் திரும்பிப் பார்க்க வைத்தது.

1960ஆம் ஆண்டுகளில் மலேசியாவில் தமிழ் இலக்கியத்திற்கும், கலாச்சாரத்திற்கும் புத்துயிர் ஊட்டிய தமிழர் திருநாள் நிகழ்ச்சிகள் மறக்கப்பட்டு விட்ட ஒரு காலகட்டத்தில், காரைக்கிழார் தனது தலைமையில் மீண்டும் ஒரு குழுவை உருவாக்கி கோலாலம்பூரில் தமிழர் திருநாள் நிகழ்ச்சிகள் நடத்தி வந்தார். வெறும் பாட்டாலேயே அனைத்தையும் கூறிவிட்டு ஒதுங்கிக் கொள்ளும் கவிஞர்களின் மத்தியில் காரைக்கிழாரின்  சமூக அக்கறைக்கு எடுத்துக் காட்டாய் விளங்கியவை அவர் நடத்திய தமிழர் திருநாள் விழாக்கள்.

கவிதையோடு தொடர்பு கொண்ட சில இயக்கங்களுக்கு தலைமையேற்றும், தனது பங்களிப்பை வழங்கியும் வந்தவர் காரைக்கிழார்.

பின்னர் கொஞ்ச காலம் சொந்த அச்சகமும் நடத்தினார்.

வானொலியிலும் ஏராளமான பாடல்களை எழுதியிருக்கின்றார்.

அரசியல் தலைவர்களுடன் தொடர்புகள்

அந்தக்கால துன் சம்பந்தன், டான்ஸ்ரீ மாணிக்கவாசகம் தொடங்கி, அவர்களைத் தொடர்ந்து வந்த  டத்தோஸ்ரீ சாமிவேலு, டான்ஸ்ரீ சுப்ரமணியம், டத்தோ பத்மநாபன், டான்ஸ்ரீ எம்.ஜி.பண்டிதன் முதல் இன்றைய தலைவர்களான டத்தோஸ்ரீ டாக்டர் ச.சுப்ரமணியம், டத்தோ சரவணன் வரை அனைவரிடமும் நட்புப் பாராட்டியவர் காரைக்கிழார். அனைத்து நிலையிலான அரசியல், சமூகத் தலைவர்களும் காரைக்கிழார் மீதும் அவரது கவிதைப் புலமையின் மீதும் அபிமானம் கொண்டிருந்தார்கள்.

Karaikilarஅவரது மறைவு குறித்து சுகாதார அமைச்சரும், மஇகா தேசியத் தலைவருமான டாக்டர் சுப்ராவும் இரங்கல் செய்தி வெளியிட்டிருந்தார்.

இருப்பினும், எந்த நெருக்கடியான அரசியல் கால கட்டத்திலும் தனது சொந்த அரசியல் விருப்பு, வெறுப்புகளை காரைக்கிழார் பகிரங்கமாக வெளிப்படுத்தியதே கிடையாது.

அந்த அளவுக்கு அரசியல் விவகாரங்களில் பண்புநலம் காத்தார் காரைக்கிழார். இதனை நான் நேரடியாகவே பல வேளைகளில் அறிந்திருக்கின்றேன்.

உதாரணமாக, மறைந்த ஆதி.குமணனுக்கும் அப்போதிருந்த தேசியத் தலைவர் டத்தோஸ்ரீ சாமிவேலுவுக்கும் இடையில் இருந்த அரசியல் போராட்டங்களின் நெருக்கடிகளுக்கிடையிலும், ஆதி.குமணனுடன் நெருக்கம் பாராட்டி, வணிகத் தொடர்புகளும் வைத்திருந்த காரைக்கிழார், அதே வேளையில் சாமிவேலுவுடன் பல நிகழ்ச்சிகளில் ஒன்றாகக் கலந்து கொள்வார்.

சாமிவேலு – (டான்ஸ்ரீ) சுப்ரமணியம் அரசியல் போராட்டங்கள் உச்சகட்டத்தில் இருந்தபோதும், சுப்ரமணியத்தை மரியாதை நிமித்தம் பலமுறை சந்தித்திருக்கின்றார். அவரது நிகழ்ச்சிகளிலும் கலந்து கொள்வார்.

காரைக்கிழாரின் குணமறிந்து, அந்த அரசியல் தலைவர்களும், சமூகத் தலைவர்களும் எல்லாக் காலத்திலும் காரைக்கிழாருக்கு மரியாதை கொடுத்து வந்தனர்.

காரைக்கிழாருக்கு செய்ய வேண்டிய அஞ்சலி

எதிர்காலத்தில் மலேசியத் தமிழ் இலக்கிய உலகின் செழுமையும், பெருமையும் குறித்து ஆய்வுகள் நடந்தால், அதன் உருவாக்கத்தில் – குறிப்பாக கவிதை உலகில் – முக்கிய பங்கு வகித்தவர் காரைக்கிழார் என்பதை வரலாறு எடுத்துக் கூறும்.

அந்த வகையில் அவருடன் நெருங்கிப் பழகியவர்கள், அவரது கவிதா உலக நண்பர்கள், மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கம், அவரது குடும்பத்தினர் என அனைவரும் ஒன்றிணைந்து அவருக்கு செலுத்தக் கூடிய உண்மையான அஞ்சலி எதுவாக இருக்கும் என்றால், அவரது அனைத்துப் படைப்புகளையும் முறையாகத் தொகுப்பதுதான்.

குறிப்பாக, அவரது வானொலிப் பாடல்கள் ஆயிரத்துக்கும் மேல் இருக்கும் என ஒரு கட்டுரையில் படித்தேன். இப்படியாக அவரது படைப்புகள் அனைத்தையும் முழுமையாக வெளியே கொண்டு வந்து எதிர்கால சந்ததியினருக்கு விட்டுச் செல்வதால், அவரது பெயரும் புகழும், என்றென்றும் நிலைத்திருக்கும் என்பதோடு, அவரது படைப்புகளால் மலேசியத் தமிழ் இலக்கிய உலகம் எவ்வாறு செதுக்கப்பட்டு, செறியூட்டப்பட்டது என்பதை எடுத்துக் காட்டும் வரலாற்றுக் குறிப்பாகவும் அத்தகைய முயற்சி திகழும்.

இன்றைய நவீன தொழில் நுட்ப யுகத்தில், அவரது அத்தனை படைப்புகளையும், மிகக் குறைந்த செலவில், இணையத் தளங்களுள் ஒருங்கே சேகரித்து அடக்கி விட முடியும். ஒரே நொடிக்குள் உலகில் எந்த மூலையில் உள்ளவருக்கும் அவரது கவிதைகளைக் கொண்டு சென்று சேர்க்க முடியும்.

தேவை, ஒரு சிலரின் முயற்சி – அவ்வளவுதான்!

எழுத்தாளர்கள் தங்களின் படைப்புகளை தாங்களே பாதுகாக்க வேண்டும்

காரைக்கிழாரின் நினைவுகளை நாம் பகிர்ந்து கொள்ளும் இந்தத் தருணங்களில், அவரது படைப்புகள் அனைத்தும் முறையாகப் பதிவு செய்யப்படவில்லை என்ற குறைபாடுகளும் பத்திரிக்கைகளில் வெளிவந்த சில செய்திகள், கட்டுரைகளில் காணப்பட்டது.

இதனை இன்றைய மலேசிய எழுத்தாளர்கள் ஒரு படிப்பினையாகக் கொள்ள வேண்டும். உங்களுக்குப் பிறகு இன்னொருவர் வந்து உங்கள் படைப்புகளைப் பாதுகாப்பார் – என்ற மனப்போக்குக்கு முற்றுப்புள்ளி வையுங்கள். உங்கள் படைப்புகள் தரமானவை என்றால், காலத்தை வென்று நிலைத்து நிற்கக் கூடியவை – நிற்க வேண்டியவை – என நீங்கள் கருதினால், நீங்கள் வாழும் காலத்திலேயே அவற்றை முறையாகப் பதிவு செய்யும் முயற்சிகளில் ஈடுபடுங்கள்.

இணையத்தின் வழி, அகப்பக்கங்களின்வழி அவற்றை ஒருங்கிணைத்து சேகரிப்பதும், பாதுகாக்க முடிவதும், இன்றைய நவீன தொழில் நுட்ப யுகம் நமக்குவழங்கியுள்ள வரப்பிரசாதம்.

அதனைப் பயன்படுத்திக் கொள்வோம்.

மலேசியத் தமிழ் இலக்கிய உலகை தனது படைப்பாற்றலாம் மெருகூட்டிய, மிளிரச் செய்த காரைக்கிழாரின் பங்களிப்பை, நன்றியுடன் நினைவு கூர்வோம். அவரது படைப்புகள் அனைத்தையும் நிரந்தரமாக எதிர்கால சந்ததியினருக்கு விட்டுச் செல்லும் வழிமுறைகளை சம்பந்தப்பட்டவர்கள் இந்தத் தருணத்தில் சிந்திக்க வேண்டும் – ஆராய வேண்டும்.

-இரா.முத்தரசன்