கோலாலம்பூர்: நேற்று காலை சிரம்பான் நெடுஞ்சாலையில் கார் ஒன்று மோதியதில் 3 பேர் பலியான சம்பவத்தைக் கேள்விப்பட்டதும் மஇகா தேசியத் தலைவரும், சுகாதார அமைச்சருமான டத்தோஸ்ரீ டாக்டர் ச.சுப்ரமணியம், உடனடியாக செராசிலுள்ள எச்.யு.கே.எம் (HUKM) மருத்துவமனைக்கு விரைந்து சென்று பாதிப்படைந்தவர்களை நேரில் கண்டார்.
மருத்துவமனைக்கு நேற்று சனிக்கிழமை பிற்பகல் 2.30 மணியளவில் வந்தடைந்த சுப்ரா, நடந்த விவரங்களை நேரடியாகக் கேட்டறிந்த பின்னர்,கார் மோதியதால் கடுமையான காயங்களுக்கு இலக்கான மூவரின் உடல்நிலை குறித்தும் அந்த மருத்துவமனையின் மருத்துவர்களிடம் விசாரித்து தெரிந்து கொண்டார்.
சுப்ராவின் வருகையின்போது, மஇகா மத்திய செயலவை உறுப்பினர் டத்தோஸ்ரீ வேள்பாரியும், மஇகா இளைஞர் பகுதித் தலைவர் சிவராஜூம் உடனிருந்தனர்.
இதற்கிடையில் தைப்பூசத் திருவிழாவை சோகமயமாக்கிய,தைப்பூச பக்தர்களைப் பலிவாங்கிய கார் விபத்துக்குக் காரணமான கார் ஓட்டுநரை காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.