Home Featured கலையுலகம் 55 மணி நேர இடைவிடாத தைப்பூச நேரலை; பார்த்தது 119 மில்லியன் முகநூல் பயனர்கள் –...

55 மணி நேர இடைவிடாத தைப்பூச நேரலை; பார்த்தது 119 மில்லியன் முகநூல் பயனர்கள் – “அஸ்ட்ரோ”வுக்கு கின்னஸ் உலக சாதனை விருது!

1231
0
SHARE
Ad

????????????????????????????????????கோலாலம்பூர் – உலகின் பல பகுதிகளிலும் கொண்டாடப்படும் தைப்பூச திருவிழாக்களை இரசிகர்கள் அனைவரும் பார்க்க வேண்டும் என்ற உன்னத நோக்கத்துடன், அந்தத் தைப்பூசத் திருவிழா நிகழ்ச்சிகளை ஒருங்கிணைத்து, இணையம் வழி இடைவிடாது ஒளிபரப்ப ஆஸ்ட்ரோ எடுத்த அரிய முயற்சி அதற்கு கின்னஸ் உலக சாதனை விருதை பெற்றுத் தந்திருக்கின்றது.

55 மணி நேரம் 7 நிமிடம் இடைவிடாது ‘ஆஸ்ட்ரோ உலகம்’ இணையத் தளம் வழி ஜனவரி 22 முதல் 25ஆம் தேதி வரை ஒளிபரப்பப்பட்ட தைப்பூச நிகழ்ச்சிகளை உலகம் எங்கும் உள்ள 119 மில்லியனுக்கும் மேற்பட்ட இரசிகர்கள் முகநூல் பக்கங்களின் வழி பார்த்து மகிழ்ந்திருக்கின்றனர்.

????????????????????????????????????

#TamilSchoolmychoice

இவர்களில் 35% அமெரிக்கர்கள், 28% இந்தியர்கள், 16% மலேசியர்கள், 5% பிரிட்டன் நாட்டவர்கள் எஞ்சியவர்கள் பிற நாட்டவர்கள் என புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.

இந்த தகவல்கள் அதிகாரபூர்வமாக உறுதிப்படுத்தப்பட்ட பின்னர், உலகிலேயே அதிக நேரம் நேரலையாக ஒளிபரப்பட்ட திருவிழா நிகழ்ச்சி என்ற அடிப்படையில் கின்னஸ் உலக சாதனை விருது இன்று ஆஸ்ட்ரோவுக்கு வழங்கப்பட்டது.

கின்னஸ் உலக சாதனைகளுக்கான புத்தகத்தின் பிரதிநிதி சுவப்னில் டங்காரிகார் (Swapnil Dangarikar) இந்த விருதுக்கான சான்றிதழை இன்று ஆஸ்ட்ரோ தலைமையகத்தில் நடைபெற்ற ஒரு விழாவில் ஆஸ்ட்ரோ குழுவினருக்கு வழங்கினார். இந்த சாதனைக்காக அயராது உழைத்த ஆஸ்ட்ரோ உலகத்தின் தொழில் நுட்பக் குழுவினர் இந்த விருதை ஆஸ்ட்ரோ சார்பாக பெற்றுக் கொண்டனர்.

????????????????????????????????????“தைப்பூசத்திற்காக நாங்கள் செய்த பணிக்காக எங்களுக்கு கின்னஸ் சாதனை உலக விருது கிடைத்திருப்பதும், அதுவும் முருகப் பெருமானுக்கு உகந்த மற்றொரு திருநாளான பங்குனி உத்திரப் பெருநாளான இன்று கிடைத்திருப்பது, பொருத்தமானதும், முருகப் பெருமானின் அருளைக் காட்டுவதாகவும் அமைந்திருக்கின்றது” என இன்றைய நிகழ்ச்சியில் உரையாற்றியபோது ஆஸ்ட்ரோவின் தமிழ்ப் பிரிவுக்கான தலைவர் டாக்டர் இராஜாமணி கூறினார்.

இந்த நிகழ்ச்சியில், மலேசியாவுக்கான மொரிஷியஸ் தூதர், ஆஸ்ட்ரோவின் தலைமைச் செயல் அதிகாரியான ஹென்ரி டான் ஆகியோரும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

????????????????????????????????????
(நிகழ்ச்சியில் டாக்டர் ராஜாமணியோடு, ஹென்ரி டான்)

2016ஆம் ஆண்டுக்கான தைப்பூசக் கொண்டாட்ட நேரலை மலேசியாவிலிருந்து பத்துமலை, பினாங்கு தண்ணீர்மலை, ஈப்போ கல்லுமலை, தமிழகத்தின் பழனி, இலங்கையிலிருந்து நல்லூர்,இணுவில், கதிர்காமம் ஆகிய முருகன் தலங்களிலிருந்து நேரலையாக ஒளிபரப்பப்பட்டது.

உலகச் சாதனைக்கான கின்னஸ் சாதனை சான்றிதழ் என்பது பல்வேறு கடுமையான நிபந்தனைகள், பரிசோதனைகளுக்குப் பின்னரே வழங்கப்படுவதாகவும், அதனால்தான் கின்னஸ் சாதனை சான்றிதழ்கள் உலகப் புகழ் பெற்றவையாகவும், மதிப்பு மிக்கதாகவும் கருதப்படுகின்றது என்றும் நிகழ்ச்சியின்போது தெரிவிக்கப்பட்டது.

அடுத்த ஆண்டுக்கான முன்னேற்பாடுகள் இப்போதே தொடங்கிவிட்டன

இதற்கிடையில், இந்த சாதனையைத் தொடர்ந்து, அடுத்த வருடம் மீண்டும் உலக மக்களை பக்தியில் திளைக்க வைக்க, தைப்பூசம் 2017 ‘பஞ்சாமிர்த வர்ணம்’ என்ற கருப்பொருளை தாங்கி வரவிருக்கிறது.

அடுத்த ஆண்டு தைப்பூச நேரலைக்கான முன்னேற்பாடுகள் இப்போதே தொடங்கப்பட்டுவிட்டதாகவும் ஆஸ்ட்ரோ குழுவினர் அறிவித்துள்ளனர்.

????????????????????????????????????
(ஆஸ்ட்ரோ வர்த்தகப் பிரிவின் உதவி துணைத் தலைவர் ரவிக்குமார் கிருஷ்ணன்)

2016ஆம் ஆண்டுக்கான கருப்பொருள் “திருமுருகாற்றுப்படை” என இருந்தது. 2017ஆம் ஆண்டுக்கான கருப்பொருளாக ‘பஞ்சாமிர்த வண்ணம்” என்பது தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.

2016ஆம் ஆண்டுக்கான ஹேஷ்டேக் – அதாவது டுவிட்டர் தொடர்புக் குறியீடு “வெற்றிவேல்” என இருந்தது. 2017ஆம் ஆண்டுக்கான ஹேஷ்டேக் ‘வீரவேல்’ என்பதாக இருக்கும் எனவும் ஆஸ்ட்ரோ குழுவினர் அறிவித்துள்ளனர்.

????????????????????????????????????
(நியூ மீடியா பிரிவின் உதவி துணைத் தலைவர் முகிலன் சிதம்பரம்)

அடுத்த ஆண்டுக்கான தைப்பூச திருவிழாக் கொண்டாட்ட நேரலைகளில் மொரிஷியசும் இணைந்து கொள்ளும் என்றும் அமெரிக்காவையும் இணைத்துக் கொள்ள பேச்சு வார்த்தைகள் நடந்து வருகின்றன என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

படங்கள் – ஃபீனிக்ஸ்தாசன்