சென்னை – திமுக தலைவர் கலைஞர் மு.கருணாநிதி நேற்று சென்னையிலிருந்து இரயிலில் திருவாரூர் சென்றடைந்தார். அவருடன் திமுகவின் முன்னாள் அமைச்சர்கள் துரை முருகன், பொன்முடி ஆகியோருடன் பயணம் செய்தனர்.
திருவாரூர் சென்ற இரயிலில் தான் சென்று கொண்டிருக்கும் புகைப்படத்தை தனது டுவிட்டர், முகநூல் பக்கங்களில் நேற்று கருணாநிதி பதிவேற்றினார். இளைஞர்களுக்கு நிகராக 90 வயதைத் தாண்டிய கலைஞர் உடனுக்குடன் தனது நடவடிக்கைகளை சமூக வலைத் தளங்களில் பதிவேற்றம் செய்வதுதான் தமிழக அரசியலில் தற்போது அதிகம் பேசப்படும் ஒரு விஷயமாகும்.
சமூக வலைத்தளங்களில் பலர் இது குறித்து பாராட்டு தெரிவிப்பதும், ‘மீம்ஸ்’ என்ற பெயரில் பலர் கேலி செய்வதும் தொடர்கதையாக தொடர்ந்து கொண்டிருக்கின்றது.
திருவாரூரில் ஒரு பொதுக் கூட்டத்தில் கலந்து கொள்ளப் போவதாகவும், தனது தொகுதி வாக்காளர்களைச் சந்திக்கப் போவதாகவும் கலைஞர் தெரிவித்திருப்பதால், எதிர்வரும் தமிழக சட்டமன்றத் தேர்தல்களில் அவர் மீண்டும் திருவாரூர் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிடுவார் என எதிர்பார்க்கப்படுகின்றது.
திருவாரூர், கலைஞரின் பூர்வீக இடம் என்பதால், அங்கு அவர் போட்டியிட்டால் மீண்டும் எளிதாக வெல்வார் என்றும் எதிர்பார்க்கப்படுகின்றது.
அவ்வாறு அவர் மீண்டும் திருவாரூரில் போட்டியிட்டால் 1957ஆம் ஆண்டிலிருந்து தொடர்ந்து சட்டமன்றத் தேர்தல்களில் போட்டியிட்டு வென்று வரும் சாதனையை அவர் படைப்பார்.
அதுமட்டுமல்லாமல், 90 வயதைத் தாண்டியும், தமிழக சட்டமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்படும் சாதனையையும் அவர் படைப்பார்.
.