புதுடெல்லி – நாளை குடியரசு தினத்தை முன்னிட்டு நாட்டின் உயரிய விருதுகளில் ஒன்றான பத்மவிபூஷண் விருதை நடிகர் ரஜினிகாந்த், வாழும்கலை இயக்கத்தின் நிறுவனர் ஸ்ரீஸ்ரீ ரவிசங்கர் ஆகியோர் பெறுகின்றனர்.
பல்வேறு துறைகளில் குறிப்பிடத்தக்க சேவைகள் வழங்கியவர்களுக்கு குடியரசு தினத்தை முன்னிட்டு பத்ம விருதுகள் வழங்கப்படுவது வழக்கம்.
அந்த வரிசையில் ரஜினி, ரவிசங்கர் தவிர, திரைப்பட, ஊடக அதிபர் ராமோஜிராவ், ஜம்மு காஷ்மீர் முன்னாள் ஆளுநர் ஜக்மோகன், திருபாய் அம்பானி ஆகியோருக்கு பத்மவிபூஷண் விருது வழங்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் பிரபல பாலிவுட் நடிகர் அனுபம் கெர், பின்னணிப் பாடகர் உதித் நாராயணன், பூப்பந்து வீராங்கனை சாய்னா நேவால், டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சா, பாலிவுட் நடிகர் அஜய்தேவ்கன், நடிகை பிரியங்கா சோப்ரா ஆகியோருக்கும் பத்ம பூஷண் விருது வழங்கப்படுகிறது.
இந்தியாவின் இரண்டாவது உயரிய விருதாக பத்மவிபூஷண் விளங்குகின்றது. தற்போதுள்ள தமிழ் நடிகர்களில் நடிகர் ரஜினிகாந்த் மட்டுமே பத்ம விபூஷண் விருதைப் பெறப்போகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
ரஜினிகாந்த் கடந்த 2000–ம் ஆண்டு பத்ம பூஷண் விருது பெற்றார். அடுத்த 5 ஆண்டுகளில் அவருக்கு பத்ம விபூஷண் விருது வழங்கப்படுகின்றது.
இந்தியாவின் மிக உயரிய விருதான பாரத ரத்னாவைப் பெற்ற ஒரே நடிகராக எம்ஜிஆர் மட்டுமே திகழ்கின்றார்.