கடந்த 2014-ம் ஆண்டு, உட்கட்சிப் பூசல் காரணமாக கட்சியில் இருந்து மு.க. அழகிரி நீக்கப்பட்டார். அவரின் நீக்கத்தினை கருணாநிதியே நேரடியாக ஊடகங்களை அழைத்து அறிவித்தார். கட்சியில் நீக்கப்பட்ட சில மாதங்கள் வரை ஸ்டாலின் குறித்தும், திமுக குறித்தும் கடுமையான விமர்சனங்களை தெரிவித்து வந்த அழகிரி, அதன் பிறகு அமைதி காத்தார்.
இந்நிலையில், சட்டமன்றத் தேர்தல் நெருங்குவதால், தென் மாவட்டங்களின் தேர்தல் பணிகளுக்கு அழகிரியின் அசுர பலம் திமுகவிற்குத் தேவைப்படுகிறது. அதனைக் கருத்தில் கொண்டு, அவரை மீண்டும் திமுகவில் இணைக்க முயற்சிகள் நடந்து வருவதாகக் கூறப்பட்டது.
அதனை உறுதிப்படுத்தும் விதமாக, வரும் ஜனவரி 30-ம் தேதி அன்று, அழகிரியின் பிறந்தநாளில் கட்சியில் மீண்டும் அவர் இணைவது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்று நம்பத்தகுந்த திமுக வட்டாரங்களில் இருந்து செய்திகள் வெளியாகி உள்ளன.
இந்த தகவல்கள் அழகிரி ஆதரவாளர்களுக்கு மகிழ்ச்சியையும், ஸ்டாலின் ஆதரவாளர்களுக்கு கலக்கத்தையும் ஏற்படுத்தி உள்ளது.