Home Featured நாடு சர்ச்சைக்குள்ளாகும் தாபோங் ஹாஜி இயக்குநராக முகமட் அபாண்டி அலி நியமிக்கப்பட்டார்!

சர்ச்சைக்குள்ளாகும் தாபோங் ஹாஜி இயக்குநராக முகமட் அபாண்டி அலி நியமிக்கப்பட்டார்!

690
0
SHARE
Ad

கோலாலம்பூர் – லெம்பாகா தாபோங் ஹாஜி எனப்படும் மெக்காவிற்கான புனித யாத்திரை செல்பவர்களுக்கான சேமிப்பு நிதி வாரியத்தின் இயக்குநர்களில் ஒருவராக அரசாங்கத் தலைமை வழக்கறிஞர் டான்ஸ்ரீ முகமட் அபாண்டி அலி (படம்) நியமிக்கப்பட்டிருக்கின்றார்.

Mohamed Apandi Ali-AGஏறத்தாழ 8.8 மில்லியன் உறுப்பினர்களைக் கொண்ட தாபோங் ஹாஜி, அந்த உறுப்பினர்களின் சேமிப்பின் மீது இலாப ஈவு வழங்குவதில் சிரமம் ஏற்படலாம் என தகவல்கள் வரத் தொடங்கியதைத் தொடர்ந்து அபாண்டியின் நியமனம் அறிவிக்கப்பட்டிருக்கின்றது.

மலேசிய மத்திய வங்கியான பேங்க் நெகாராவின் ஆளுநர் டான்ஸ்ரீ செத்தி அக்தார் அசிஸ் கடந்த டிசம்பர் 23ஆம் தேதியிட்டு, தாபோங் ஹாஜி தலைவர் டத்தோஸ்ரீ அப்துல் அசிஸ் அப்துல் ரகிம் – மற்றும் சமய விவகாரங்களுக்கான பிரதமர் துறை அமைச்சர் டத்தோஸ்ரீ ஜாமில் கிர் பகாரோம் – ஆகியோருக்கு அனுப்பியுள்ள கடிதங்களின் அடிப்படையில், தாபோங் ஹாஜி வாரியம் நிதிப் பிரச்சனைகளை எதிர்நோக்குவதாக தகவல்கள் கசியத் தொடங்கின.

#TamilSchoolmychoice

தாபோங் ஹாஜி தலைவரும் பாலிங் நாடாளுமன்ற உறுப்பினருமான அப்துல் அசிஸ் இந்த விவகாரம் குறித்து பத்திரிக்கை அறிக்கை ஒன்று வெளியிடப்படும் என அறிவித்திருக்கின்றார்.

சமய விவகாரங்களுக்கான துணையமைச்சரான டத்தோ டாக்டர் அஷ்ராஃப் வாஜ்டி டுசுக்கி “இந்தக் கடிதங்கள் தவறுதலாகப் புரிந்து கொள்ளப்பட்டிருக்கின்றன” எனத் தெரிவித்திருக்கிறார்.

முன்னாள் அரசாங்கத் தலைமை வழக்கறிஞரான டான்ஸ்ரீ கனி பட்டேலிடம் இருந்து அந்தப் பொறுப்பை ஏற்றுக் கொண்டுள்ள டான்ஸ்ரீ அபாண்டி, நேற்று பிரதமர் நஜிப் மீதான ஊழல் விசாரணைகள் முடிவுக்கு வருவதாக அறிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.