கோலாலம்பூர் : நீண்ட காலமாக பல்வேறு ஊழல் சர்ச்சைகளில் சிக்கி வந்திருக்கும் தபோங் ஹாஜி எனப்படும் மலேசிய ஹாஜ் யாத்திரிகர்களுக்கான நிதி வாரியம் தொடர்பான விவகாரங்களை விசாரிக்க அரச விசாரணை ஆணையம் ஒன்று அமைக்கப்படும்.
இதற்கான அனுமதியை மாமன்னர் சுல்தான் அப்துல்லா சுல்தான் அகமட் ஷா வழங்கியுள்ளார் என பிரதமர் துறை அமைச்சர் வான் ஜூனாய்டி துவாங்கு ஜாபார் அறிவித்தார். வான் ஜூனாய்டி பிரதமர் இலாகாவின் சட்ட விவகாரங்களுக்கான அமைச்சருமாவார்.
2014 முதல் 2020 வரையிலான அனைத்து விவகாரங்களையும் இந்த அரச விசாரணை ஆணையம் விசாரிக்கும்.
இந்த ஆணையத்தில் 6 உறுப்பினர்கள் இடம் பெற்றிருப்பர். முன்னாள் தலைமை நீதிபதி முகமட் ராவுஸ் ஷாரிப் ஆணையத்திற்குத் தலைமையேற்பார்.
ஆணையத்தின் உறுப்பினர்கள் அனைவரும் தாபோங் ஹாஜி அமைப்புடன் நேரடியாகவோ, மறைமுகமாகவோ தொடர்பில் இல்லாதவர்கள் என்பதும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.