கோலாலம்பூர் – நேற்று அரசாங்கத் தலைமை வழக்கறிஞர் டான்ஸ்ரீ முகமட் அபாண்டி அலி விடுத்த அறிக்கையில், நஜிப் எந்தக் குற்றமும் இழைக்கவில்லை எனத் தெரிவித்துள்ளதைத் தொடர்ந்து, தேர்தல் சீர்திருத்தத்திற்காகப் போராடும் சமூக இயக்கமான பெர்சே 9 கேள்விகளை எழுப்பியுள்ளது.
நாட்டின் மிகப் பெரிய நாணயப் பரிமாற்ற ஊழல் என இந்த விவகாரத்தை வர்ணித்துள்ள பெர்சே எழுப்பியுள்ள அந்த 9 கேள்விகள் பின்வருமாறு:-
- 2.03 பில்லியன் ரிங்கிட் அரேபிய நன்கொடையாளரிடம் திரும்பக் கொடுக்கப்பட்டதென்றால், எஞ்சிய தொகை எங்கே? அந்தப் பணம் எங்கே சென்றது? வால் ஸ்ட்ரீட் ஜர்னல் அமெரிக்கப் பத்திரிக்கை கூறியுள்ளபடி, 13வது பொதுத் தேர்தலின் வெற்றியை “வாங்குவதற்காக” இந்தப் பணம் செலவழிக்கப்பட்டதா?
- 2.03 பில்லியன் திரும்பக் கொடுக்கப்பட்டு விட்டதென்றால் – குற்றம் எதுவும் இழைக்கப்படவில்லை என்றால் – முன்னாள் அரசாங்கத் தலைமை வழக்கறிஞர் அப்துல் கனி பட்டேல் ஏன் அவரது பதவியிலிருந்து நீக்கப்பட்டார்?
- நஜிப் தனது வங்கிக் கணக்கில் செலுத்தப்பட்ட 2.6 பில்லியன் ரிங்கிட் தொகையை தவறுதலாகப் பயன்படுத்தப்படவில்லை என்றால், ஏன் அந்தக் குற்றச்சாட்டுகளை எழுப்பிய வால் ஸ்ட்ரீட் ஜர்னல் பத்திரிக்கை மீது இதுவரை நஜிப் ஏன் வழக்கு தொடுக்கவில்லை?
- குற்றம் எதுவும் இல்லையென்றால், இந்த விவகாரத்தை எழுப்பிய துணைப் பிரதமர் டான்ஸ்ரீ மொகிதின் யாசின் ஏன் பதவி நீக்கம் செய்யப்பட்டார்? ஏன் அமைச்சரவை மாற்றம் நிகழ்ந்தது? இது குறித்து கேள்வி எழுப்பிய அமைச்சர்கள் பதவி நீக்கம் செய்யப்பட்டது ஏன்? இந்த பணப் பரிமாற்றத்தை விளக்குவது என்ன அவ்வளவு சிரமமா?
- இந்த விளக்கத்தை வழங்க ஏன் நஜிப்புக்கு இத்தனை காலம் பிடித்தது? ஏன் வெவ்வேறு விதமான விளக்கங்கள் தரப்பட்டன? நன்கொடை தந்தது ஒரு நன்கொடையாளரா? அல்லது ஒன்றுக்கும் மேற்பட்டவர்களா? இப்போது 2.03 பில்லியன் திரும்பச் செலுத்தப்பட்டது என்றால் யார் கூறுவது உண்மை?
- சந்தேகத்திற்குரிய பணப் பரிமாற்றங்கள் இல்லையென்றால் ஏன் நஜிப்பின் சொந்த வங்கிக் கணக்கு மூடப்பட்டது?
- 2.03 பில்லியன் ரிங்கிட் திரும்பச் செலுத்தப்பட்டது என்றால் அதற்கான ஆதாரங்கள் என்ன? அதற்காக இன்னும் ஓராண்டுக்கு நாம் காத்திருக்க வேண்டுமா?
- நஜிப் 2.03 பில்லியன் பணத்தை அரேபிய நன்கொடையாளர்களிடம் 2013இல் திரும்பச் செலுத்தியதாகக் கூறப்படுகின்றது. ஆனால், 42 மில்லியன் ரிங்கிட்டை 2014 அல்லது 2015இல் பெற்றதாகவும் கூறப்படுகின்றது. ஆனால், இந்த 42 மில்லியன் ரிங்கிட் எங்கிருந்து வந்தது – அந்த 2.6 பில்லியன் ரிங்கிட் பணத்தின் ஒரு பகுதியா இது என்பது எனக்குத் தெரியாது என நஜிப் கூறியிருக்கின்றார். இவ்வளவு பெரிய பணப் பரிமாற்றத்தை பேங்க் நெகாரா எவ்வாறு கவனிக்கத் தவறியது?
- இத்தகைய மிகப் பெரிய பணப் பரிமாற்றங்களை நடத்துவதற்கு – அதாவது பணத்தைப் பெறுவதற்கும், மீண்டும் திருப்பி அனுப்புவதற்கும் – பேங்க் நெகாராவிடம் அனுமதி கேட்டு விண்ணப்பங்கள் சமர்ப்பிக்கப்பட்டனவா? இவ்வாறு மிகப் பெரிய பணப் பரிமாற்றங்கள் வெளிநாட்டில் இருந்து மேற்கொள்ளப்பட்டதன் காரணமாக, வெளிநாட்டு நாணயப் பரிமாற்ற சட்டங்கள் ஏதும் மீறப்பட்டுள்ளனவா?
மேற்கூறப்பட்ட இந்த 9 கேள்விகளுக்கும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளும், அரசாங்கத் தரப்பும், பிரதமர் நஜிப்பும் பதில் வழங்க வேண்டுமென பெர்சே வேண்டுகோள் விடுத்துள்ளது.