கோலாலம்பூர் – 2.6 பில்லியன் நன்கொடை விவகாரத்தில் சவுதி அரச குடும்பத்தின் உதவியோடு, நஜிப் தன் மீதான குற்றச்சாட்டுகளில் இருந்து வெளியே வந்துவிட்டார். சட்டப்பூர்வமாக தன்னைக் குற்றமற்றவர் என்று நிரூபித்துவிட்டார். ஆனால் மக்கள் நீதிமன்றம் என்று ஒன்று உள்ளதல்லவா? அதில் நிரூபிக்க இயலுமா? என்பதே அரசியல் வல்லுநர்கள் அனைவரின் கேள்வியாக உள்ளது.
அடுத்தப் பொதுத்தேர்தலுக்கு இப்போதே தயாராக வேண்டிய சூழலில், தனது அரசியல் பிதாமகரான முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதீர் உட்பட பெரும்பாலான செல்வாக்குள்ள தலைவர்களிடம் கெட்ட பெயர் எடுத்துவிட்டார் நஜிப்.
“நஜிப் பதவி விலகாமல் தான் ஓயப்போவதில்லை” என்று ஆணித்தரமாகக் கூறியுள்ள மகாதீர், தொடர்ந்து அவரைக் கடுமையாக விமர்சித்து வருவதோடு, நஜிப் பதவி விலகினால் மட்டுமே நாட்டிற்கும், அம்னோவிற்கும் நல்லது என்று கூறி வருகின்றார்.
நஜிப் தன் மீதான விமர்சனங்களுக்கு மௌனம் மட்டுமே பதிலாகத் தந்து, இத்தனை நாட்களாக தொடர்ந்து பதவியில் இருந்து வந்ததற்குக் காரணம், அவர் தனது அதிகாரத்தை விட்டுக் கொடுத்தால், தன் சொந்தக் கட்சியில் இருந்தே ஆதரவாளர்கள் தனக்கு எதிராகத் திரும்பிவிடக்கூடும் என்றும், எதிர்கட்சிகள் அதனை சாதகமாக்கிக் கொள்ளும் என்ற எண்ணத்தில் தான் என்பது பெரும்பாலான அரசியல் வல்லுநர்களின் கருத்து.
இந்நிலையில், நஜிப் தற்போது ஒரு பாதுகாப்பு வட்டத்திற்குள் வந்துவிட்டதால், இனி அடுத்தக்கட்ட நடவடிக்கைகளை மேற்கொள்வார் என எதிர்பார்க்கப்படுகின்றது. அதாவது, ஒன்று அடுத்த பொதுத்தேர்தலுக்கு இப்போதே தயாராகி குறுகிய காலத்தில் மக்களிடம் மீண்டும் நல்ல பெயர் எடுப்பது. அல்லது அம்னோவில் வேறு ஒரு தலைவரை பிரதமராக்குவது. இதில் ஏதாவது ஒன்று நடப்பதற்கான வாய்ப்புகள் உள்ளதாகக் கூறப்படுகின்றது.
இதனிடையே, அம்னோவின் மூத்த தலைவர்களுள் ஒருவரான துங்கு ரசாலி ஹம்சா வெளியிட்டுள்ள கருத்தில், நஜிப் மீது எந்தக் குற்றமும் இல்லை என சட்டத்துறை தலைவர் மொகமட் அபாண்டி அலி அறிவித்துவிட்டார். ஆனால் மக்கள் கருத்து வேறுமாதிரி உள்ளது என்று தெரிவித்துள்ளார்.
“இந்த விவகாரத்தில் சட்டத்துறையின் பதில், நடப்பு சூழ்நிலையைத் திருப்தி படுத்தலாம். காரணம், பதிலளிக்கும் வகையில் எந்த ஒரு வழக்கும் இல்லை.”
“சட்டப்படி, அது தான் தற்போதைய நிலை ஆனால் மக்கள் நீதிமன்றத்தில் கருத்துகள் முற்றிலும் மாறுபடுகின்றன” என்று தெரிவித்துள்ளார்.
இதனிடையே, இந்த விவகாரம் முடிவுக்கு வந்துவிட்டது இது குறித்து இனி யாரும் பேச வேண்டாம் என நஜிப் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றார்.
என்றாலும், மக்களும், அரசியல் தலைவர்களும் ஓயப் போவதில்லை என்றே தெரிகின்றது.
தொகுப்பு: செல்லியல்