கோவை – நேற்று கோயம்பத்தூரில் மருத்துவமனை ஒன்றைத் துவக்கி வைக்க வருகை புரிந்த மோடியை, நடிகர் கமல்ஹாசன் சந்திக்கவுள்ளதாக செய்திகள் வெளியாகின. ஆனால் கடைசி நேரத்தில் அந்த சந்திப்பு இரத்து ஆனதாகக் கூறப்பட்டது.
இந்நிலையில், அதற்கான காரணம் என்னவென்பது பற்றி பாஜக -வைச் சேர்ந்தவர்கள் மூலமாக பிரபல செய்தி நிறுவனமான விகடனுக்குத் தெரிய வந்துள்ளது.
தென்னிந்திய நடிகர் சங்கத்தின் கட்டிடத் திறப்பு விழாவில் கலந்து கொள்ளுமாறு மோடிக்கு அழைப்பு விடுக்கவே கமல்ஹாசன் தரப்பில் இருந்து சந்திக்க நேரம் கேட்டதாகக் கூறப்படுகின்றது.
ஏற்கனவே ‘கிளீன் இந்தியா’ திட்டத்தில் கமல்ஹாசனையும் முக்கிய உறுப்பினராக மோடி இணைத்திருப்பதால், அந்த ஒரு நட்புறவை அடிப்படையாக வைத்து, இந்த அழைப்பு விடுக்க கமல்ஹாசன் மோடியை சந்திக்க விரும்பியதாக பாஜக முக்கியப் புள்ளிகள் தெரிவித்துள்ளனர்.
என்றாலும், கோவையை மையப்படுத்தியே மோடியின் நேற்றைய திட்டங்கள் இருந்ததால், சென்னை விவகாரங்களை வேறு ஒரு சந்திப்பில் வைத்துக் கொள்ளலாம் என மோடி தரப்பில் கூறியதால் நேற்றைய மோடி – கமல் சந்திப்பு இரத்தாகியுள்ளது.
நடிகர் சங்க கட்டிடத் திறப்பு விழாவிற்கு ஏற்கனவே தமிழக முதல்வர் செல்வி. ஜெயலலிதா உட்பட முக்கியத் தலைவர்கள் அழைக்கப்பட்டிருப்பதால், விரைவில் மோடிக்கும் அழைப்பு விடுக்க வாய்ப்புகள் உள்ளதாகவும் தெரிய வருகின்றது.