புதுடெல்லி – தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தலுக்கான தேதிகள் இம்மாத இறுதியிலோ அல்லது அடுத்த மாதத்தின் முதல் வாரத்திலோ அறிவிக்கப்படலாம்.
இந்நிலையில், தமிழக அரசியல் கட்சிகள் யாவும் கூட்டணி குறித்து மும்முரமாக கலந்தாலோசித்து வருகின்றன.
முன்னணி கட்சிகளான திமுக, தேமுதிக ஆகியவை பாஜக-வுடன் இணையும் எண்ணத்தில் இருப்பதாகவும் பேசப்பட்டு வருகின்றது.
இதனிடையே, பாஜக மூத்தத் தலைவர் சுப்பிரமணியன் சுவாமி இன்று தனது டுவிட்டரில் வெளியிட்ட கருத்தில், திமுக, விஜயகாந்தின் தேமுதிக ஆகிய கட்சிகள் பாஜக-வுடன் கூட்டணி அமைக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.
மேலும், திமுக தலைவர் மு.கருணாநிதி முதலமைச்சர் பதவியை நிராகரித்து, அந்த இடத்தில் ஸ்டாலினை அமர வைப்பார் எனத் தான் நம்புவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதுவரையில் கூட்டணி குறித்து எதுவும் கருத்துத் தெரிவிக்காமல் இருந்தார் தேமுதிக தலைவர் விஜயகாந்த். ஆனால் இன்னும் சில தினங்களில் டெல்லியில் பாஜக தலைவர்களை சந்திக்கும் அவர் கூட்டணி குறித்து பேசுவார் எனத் தற்போது தகவல்கள் கசிந்து வருகின்றன.