Home Featured நாடு நஜிப்பின் முடிவு சரியா? மகாதீர் மகன் இனி அமைதி காக்கப் போவதில்லை!

நஜிப்பின் முடிவு சரியா? மகாதீர் மகன் இனி அமைதி காக்கப் போவதில்லை!

683
0
SHARE
Ad

mukriz-najib-mahathirகோலாலம்பூர் – 2.6 பில்லியன் ரிங்கிட்டிற்கு கணக்குக் காண்பித்தாகிவிட்டது என்றாலும், அடுத்ததாக சுவிஸ் விவகாரம் விஸ்வரூபம் எடுத்துள்ளது.

இப்படியாக ஒன்று மாற்றி ஒன்று என அடுக்கடுக்காக குற்றச்சாட்டுகளில் சிக்கித் தவிக்கும் பிரதமர் நஜிப், தற்போது கெடா மந்திரி பெசார் விவகாரத்தில் எடுத்திருக்கும் முடிவு அவருக்கு மேலும் நெருக்கடியையே ஏற்படுத்தும் என்று அரசியல் வட்டாரங்களில் பேச்சு நிலவுகிறது.

ஏற்கனவே, முக்ரிசின் தந்தையான முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதீர் முகமட், நஜிப்பை பதவி விலக வைக்காமல் ஓயப்போவதில்லை என்று துரிதமாகச் செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்.

#TamilSchoolmychoice

இந்நிலையில், மகாதீரின் மகனையும் பகைத்துக் கொண்டுவிட்டது தான் நஜிப்புக்கு கூடுதல் நெருக்கடியை அளிக்கப் போகிறது என்கிறார்கள் அரசியல் வல்லுநர்கள்.

இன்று பதவி விலகுவதாக அறிவித்த முக்ரிஸ், அந்த செய்தியாளர்கள் சந்திப்பிலேயே, நஜிப்பின் தலைமைத்துவத்தினால் அம்னோ தொடர்ந்து வலுவிழந்து வருகின்றது என்று கூறி தனது முதற்கட்டத் தாக்குதலைத் துவங்கியிருக்கிறார்.

நஜிப் செய்த காரியத்தினால் வெளிநாடுகளுக்குச் செல்கையில் தலை நிமிர்ந்து செல்ல முடியவில்லை என்றும் முக்ரிஸ் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், 2.6 பில்லியன் விவகாரத்தில் நஜிப்புக்கு எதிராக விமர்சனங்களை செய்ததால் தான் பதவியில் இருந்து வெளியேற்றப்பட்டேன் என்று கூறும் முக்ரிஸ், முன்பை விட தற்போது இன்னும் சுதந்திரமாக விமர்சனங்களை முன்வைக்கவுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

அரசியலை விட்டே வெளியேறுவீர்களா? என்ற கேள்விக்கு, “இல்லை அது என் இரத்தத்தில் கலந்து உள்ளது. மக்கள் நான் தேவை என்று நினைத்தால் தொடர்ந்து அரசியலில் இருப்பேன்” என்று முக்ரிஸ் தெரிவித்துள்ளார்.

இனி, கெடாவில் தனக்கு இருக்கும் மக்கள் செல்வாக்கின் மூலம் நஜிப்புக்கு எதிராக முக்ரிஸ் செயல்பட வாய்ப்புகள் ஏராளம் உள்ளது என்றும் கூறப்படுகின்றது.

ஏற்கனவே, இதே காரணத்தால் தான் முன்னாள் துணைப் பிரதமர் மொகிதினும் பதவியிலிருந்து வெளியேற்றப்பட்டார். இப்படியாக நஜிப்புக்கு எதிராகப் பேசி பதவி பறிக்கப்பட்ட செல்வாக்கு மிக்க தலைவர்களின் எண்ணிக்கை கூடிக் கொண்டே செல்கிறது.

இனி நடப்பதைப் பொறுத்திருந்து பார்ப்போம்.

தொகுப்பு – செல்லியல்