மலாக்கா – வங்கிக் கொள்ளையர்கள் குறித்து தகவல் கொடுப்பவர்களுக்கு 20 ஆயிரம் ரிங்கிட் ரொக்கப் பரிசு வழங்கப்படும் என பாதுகாப்பு நிறுவனம் ஒன்று அறிவித்துள்ளது.
அலோர் காஜாவின், புலா செபாங் பகுதியில் கடந்த ஜனவரி 20ஆம் தேதி நிகழ்ந்த துணிகர கொள்ளைச் சம்பவம் தொடர்பிலேயே இத்தகைய அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
அன்றைய தினம் அக்குறிப்பிட்ட வங்கியில் பணியாற்றும் பாதுகாவலர் ஒருவர் 4 லட்சம் ரிங்கிட் தொகை கொண்ட பையை, பாதுகாப்பு நிறுவனத்தின் வாகனத்தில் ஏற்ற முற்பட்டபோது, கொள்ளையர்கள் தங்கள் கைவரிசையைக் காட்டினர்.
இதையடுத்து வங்கியில் பணியாற்றும் 6 பாதுகாவலர்களையும் காவல்துறையினர் ஒருவாரம் தடுத்து வைத்து விசாரணை மேற்கொண்டனர்.
“விசாரணைக்குப் பின்னர் காவல்துறையின் பிணையில் அவர்கள் விடுவிக்கப்பட்டுள்ளனர். இந்த வழக்கில் புதிதாக எந்தவித முன்னேற்றமும் ஏற்படவில்லை. எனினும் பரிசுத் தொகை அறிவிக்கப்பட்டதையடுத்து பொதுமக்களிடம் இருந்து கூடுதல் தகவல்கள் கிடைக்குமென எதிர்பார்க்கிறோம். கொள்ளையர்களைப் பிடிப்பதற்குக் கைகொடுக்கும் வகையில் புதிய தகவல்களுக்காக காத்திருக்கிறோம்” என மலாக்கா மாநில காவல்துறை தலைவர் டத்தோ சுவா கீ லை செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.