Home Featured கலையுலகம் திரைவிமர்சனம்: “விசாரணை” – இரண்டு கோணங்களில் இரண்டு விசாரணைகளின் விறுவிறுப்பான சங்கமம்!

திரைவிமர்சனம்: “விசாரணை” – இரண்டு கோணங்களில் இரண்டு விசாரணைகளின் விறுவிறுப்பான சங்கமம்!

1483
0
SHARE
Ad

Visaranai-movie-still“காக்கா முட்டை” பாணியில், குறுகிய காலத்தில் திரைக்கதைக்கும், இயக்கத்திற்கும் முக்கியத்துவம் கொடுத்து – சாதாரண நடிகர்களை வைத்து – எடுத்து முடிக்கப்பட்டு, பல திரைப்பட விழாக்களில் திரையிடப்பட்டு, வெனிஸ் திரைப்பட விழாவில் பரிசும் பெற்று, அந்த விமர்சனங்களால், இரசிகர்களை ஈர்த்திருக்கும் படம் “விசாரணை”.

வெற்றிமாறன் இயக்கத்தில், நடிகர் தனுஷ்-வெற்றி மாறன் கூட்டுத் தயாரிப்பில் வெளிவந்திருக்கும் படம். எந்தவித சமரசமுமின்றி ஒரு நல்ல சினிமாவைத் தர வேண்டும் என பாடுபட்டிருக்கும், முயற்சி எடுத்திருக்கும் அவர்களுக்கு உண்மையிலேயே தமிழ் இரசிகர்கள் நன்றி சொல்ல வேண்டும்.

இளம் வயதில் தான் எதிர்கொண்ட போலீஸ் அவஸ்தைகளையும், அவலங்களையும், “லாக்கப்” என்ற பெயரில் ஒரு சாதாரண ஆட்டோ டிரைவரான எம்.சந்திரகுமார், நாவலாக எழுத, அந்த சம்பவங்களுக்குத் திரைவடிவம் தந்திருக்கின்றார் வெற்றிமாறன்.

#TamilSchoolmychoice

கதை – திரைக்கதை

Visaranai-movie stillஆந்திரா, தமிழ் நாடு என இரண்டு தென்னக மாநிலங்களில் உள்ள போலீஸ்காரர்களின் விசாரணைகள்கள்தான் படத்தின் அடிப்படைக் கதை.

ஆந்திராவில் ஒரு திருட்டு குற்றத்திற்காக பிடித்து விசாரிக்கப்படும், வேலைக்காக அங்கு சென்ற நான்கு வாலிபர்கள் மீது நடத்தப்படும் முரட்டுத் தனமான ‘அடிதடி’ விசாரணைகளோடு படம் தொடங்குகின்றது.

ஒருவாறாக அங்கிருந்து, முத்துவேல் (சமுத்திரகனி) என்ற தமிழ்நாட்டு போலீஸ் அதிகாரியின் உதவியுடன் நீதிமன்றத்திலிருந்து விடுதலையாகின்றனர் அந்த வாலிபர்கள். நீதிமன்றத்திற்கு வெளியே அதே போலீஸ் அதிகாரி அவர்களைப் பயன்படுத்தி, மற்றொரு தமிழ் நாட்டு போலீஸ் வழக்கிற்காக தேடப்படும், கணக்காய்வாளர் (ஆடிட்டர்) ஒருவரைத் தமிழ் நாட்டுக்கு கடத்தி வருகின்றார் போலீஸ் விசாரணைக்காக!

சென்னை வந்து சேரும், அந்த வாலிபர்கள் அந்த உயர்மட்ட விசாரணையில் எப்படி தங்களையும் அறியாமல் சிக்கிக் கொள்கின்றார்கள் – அதனால் என்ன பாதிப்புகளுக்கு ஆளாகின்றார்கள் என்பதுதான் படம்.

visaranai-dhanush-vetrimaaran-விசாரணை படத் தயாரிப்பாளர்கள் தனுஷ்-வெற்றி மாறன்…

இரண்டு மாநிலங்களின் போலீஸ் அணுகுமுறைகள் ஒருபுறம்! சாதாரண திருட்டு குற்றம் எப்படி விசாரிக்கப்படுகின்றது – அதே சமயத்தில் அரசியல்வாதிகள் சம்பந்தப்பட்ட – உயர்மட்டத்தில் கோடிகள் இலஞ்சமாகப் புரளும் விசாரணை  எப்படி நடத்தப்படுகின்றது என்ற ஒப்பீடுகள் இன்னொரு புறம்!

இதனால் சாதாரண அடிமட்ட மக்கள் எப்படி பந்தாடப்படுகிறார்கள் என்பதோடு, உயர் போலீஸ் அதிகாரிகளுக்கிடையில் நடக்கும் அரசியல்தான் இந்த “விசாரணை”.

வெற்றிமாறன் – சமுத்திரகனியின் அற்புத இணைப்பு

படத்தை மிக நுணுக்கமாக, வலுவான திரைக்கதை அமைத்து இயக்கியிருக்கும் வெற்றிமாறன், படம் முடியும்போது இரசிகர்களின் கைத்தட்டல்களைப் பெறுகின்றார்.

கதையின் சில அம்சங்கள்- குறிப்பாக போலீஸ் விசாரணைகள் – ஏற்கனவே எத்தனையோ படங்களில் பார்த்ததுதான் என்றாலும், போலீஸ்காரர்கள் எவ்வாறு திட்டமிட்டு ஒன்றுமறியா அப்பாவிகளின் மீது பழிகளைச் சுமத்துகிறார்கள் என்பதை பகீரென நெஞ்சில் பதியும் வண்ணம் வெற்றி மாறன் சொல்லியிருக்கும் பாங்கு, தமிழுக்குப் புதியதுதான்.

visaaranai-dineshஆடுகளம் முருகதாஸ் – தினேஷ்….

படத்தில் பாடல்கள் இல்லை. கதாநாயகன்- நாயகி தழுவல்கள் – டூயட் பாடல்கள் – கிளைமாக்ஸ் நெருங்கும் நேரத்தில் குத்துப் பாட்டு – என வழக்கமான தமிழ்ப்பட மாயைகள் இல்லாத இயக்கத்திற்கு ஒரு பாராட்டு என்றால் – அதற்கு வழிவகுத்த, சுதந்திரம் தந்த, தயாரிப்பாளர் தனுஷ் தனியாகப் பாராட்டு பெறுகின்றார்.

வெற்றிமாறனின் திரைக்கதை வடிவத்தை – அவர் காட்ட நினைக்கும் போலீஸ் இன்ஸ்பெக்டர் கதாபாத்திரத்தை – நம் கண் முன்னே கொண்டு வந்து நிறுத்தி, பாதிப்படத்திற்கு மேல் தனி ஆளாக – அற்புதமாகப் படத்தைத் தாங்கிப் பிடிக்கின்றார் சமுத்திரகனி.

நீதிமன்றத்தில் அடிபட்ட தினேஷைக் காப்பாற்ற கம்பீரமாகப் பேசும் ஆங்கிலம் – பின்னர் தமிழ்நாட்டு போலீஸ் அதிகாரியாக காட்டும் கெத்து – அதே சமயம் தனது மேல் அதிகாரிகள் தனக்குப் பிடிக்காத விஷயங்களைச் செய்யச் சொல்லும்போது காட்டும் மனக் குமுறல் – மேல் அதிகாரிகளிடம் பணிந்து போவது – நல்லமுறையில் ஒரு குணாதிசயத்தோடு விசாரணை நடத்தி விட்டு பின்னர் போதையில் வந்து இன்னொரு ‘வகையான’ விசாரணை நடத்துவது –  இடையிடையே தனது காட்டத்தை கொட்டித் தீர்ப்பது – என அச்சு அசலாக ஒரு தமிழக போலீஸ் அதிகாரியைக் கண்முன்னே காட்டுகின்றார் சமுத்திரகனி.

மற்ற சிறப்பம்சங்கள் – மனதில் பதியும் தினேஷ்

Visaranai-movie still-1தான் செய்யாத குற்றத்திற்காக மாட்டிக் கொண்டு அல்லல்படும் தினேஷ்தான் கதாநாயகன், படத்தில் அந்தக் கதாபாத்திரமாகவே மாறியிருக்கின்றார் தினேஷ். ஆந்திராவில் அடிவாங்கி அவஸ்தைப் படுபவராக நெஞ்சில் சோகத்தை வரவழைப்பவர், பின்னர் தமிழ்நாட்டில் உயர்மட்ட போலீஸ் அதிகாரிகளின் வியூகங்களுக்கு இடையில் மாட்டிக் கொண்டு விழிப்பதை சிறப்பான நடிப்பால் வெளிப்படுத்தியிருக்கின்றார்.

வரிசையாகக் கிடைக்கின்ற பட வாய்ப்புகளை நல்ல முறையில் பயன்படுத்திக் கொண்டு வருகின்றார் தினேஷ். அவருடைய நண்பராக வந்து போலீஸ் அடியால், பற்கள் உடைபடும் கதாபாத்திரத்தில் ஆடுகளம் முருகதாசும் நடிப்பால் நம் மனங்களில் நிற்கின்றார்.

visaranai-samuthirakani-ஆடிட்டராக வரும் கிஷோரும் குறை சொல்ல முடியாத நடிப்பைத் தந்திருக்கின்றார்.

படத்தில் மறக்க முடியாத இன்னொரு நபர் படத் தொகுப்பைத் தந்த மறைந்த தொகுப்பாளர் (எடிட்டர்) கிஷோர். அவருக்காக – அவரை நினைவு கூர்ந்து – தனியாக திரையில் பெயர் போடுகின்றார்கள்.

அதே போலத்தான் எஸ்,இராமலிங்கத்தின் ஒளிப்பதிவும்! ஒரு சாதாரண கீழ்நிலை போலீஸ் ஸ்டேஷனின் எல்லா மூலை முடுக்குகளையும் அப்படியே தத்ரூபமாக கண் முன்னே கொண்டு வந்து காட்டுகின்றார்கள்.

அதே வேளையில் தமிழ்நாட்டு உயர் போலீஸ் அதிகாரிகளின்  குளிர்சாதன அலுவலக அறைகளையும், தடுப்புக் காவல் அறைகளையும் சுற்றி வரும் கேமரா – இருளில் குறைந்த பட்ச வெளிச்சத்தில் புதர்களுக்கிடையிலும் புகுந்து விளையாடுகின்றது.

இப்படியாக சொல்லிக் கொண்டே போகலாம்!

மொத்தத்தில் ‘விசாரணை’ தமிழ்த் திரைப்பட வரலாற்றில் குறை சொல்ல முடியாத, மிக முக்கிய பதிவு! பார்க்கவேண்டிய – மனதில் பதிய வைக்க வேண்டிய படைப்பு!

-இரா.முத்தரசன்