Home Featured தமிழ் நாடு “ராஜாஜி என்ற நினைப்பு போலும்” – ஜெயலலிதா கதை குறித்து கருணாநிதி கிண்டல்!

“ராஜாஜி என்ற நினைப்பு போலும்” – ஜெயலலிதா கதை குறித்து கருணாநிதி கிண்டல்!

1067
0
SHARE
Ad

10-1455104806-jayalalitha-marriage-function3-600சென்னை – நேற்று அதிமுக நிர்வாகிகள் 14 பேரின் இல்லத் திருமணங்களை நடத்தி வைத்த தமிழக முதல்வர் செல்வி. ஜெயலலிதா, தந்தை, மகன் பற்றிய அரசியல் கதை ஒன்றை கூறினார்.

அந்தக் கதை யாரைக் குறிக்கிறதோ? என்று நேற்று தமிழக ஊடகங்கள் அனைத்தும் கேள்விக் குறியோடு சூட்சமமாக செய்தி வெளியிட்டிருந்தன.

இந்நிலையில், அந்த குட்டிக் கதைக்கு பதிலடி கொடுக்கும் விதமாக இன்று தனது பேஸ்புக்கில் கருத்துத் தெரிவித்துள்ளார் திமுக தலைவர் கலைஞர் கருணாநிதி.

#TamilSchoolmychoice

அவர் கூறியிருப்பதாவது:-

karunanithi“அ.தி.மு.க. தலைவி வழக்கம் போல ‘குட்டிக் கதை’ களைப் படித்திருக்கிறார். அந்தக் காலத்தில் ஒவ்வொரு கூட்டத்திலும் இது போல குட்டிக் கதைகளைக் கூறும் மூதறிஞர் ராஜாஜி என்று இவருக்கு நினைப்பு போலும்!”

“அடுத்தவர் மகிழ்ச்சியில் தன் மகிழ்ச்சி அடங்கியிருக்கிறது என்று வாழ்வதே இனிய இல்லறம்” என்று பேச்சைத் தொடங்கிய ஜெயலலிதா, தனது ஆட்சிக் காலத்தில் எத்தனை பேரின் மகிழ்ச்சியைக் கெடுத்து, மன வருத்தத்தைக் கொடுத்து, அதிலே இன்பம் கண்டார் என்பதை; வேலையை இழந்த மக்கள் நலப் பணியாளர்களிடமும், சாலைப் பணியாளர்களிடமும், இன்றைக்கும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள அரசு அலுவலர்கள், ஆசிரியர்கள், சத்துணவு, அங்கன்வாடி பணியாளர்கள், வணிக வரித் துறை அலுவலர்கள், செவிலியர்கள் ஆகியோரைக் கேட்டால் அனுபவித்து வரும் துன்பங்களை விளக்கமாகக் கூறுவார்கள்!விடிய விடியக் கூறுவார்கள்!”

“அது மாத்திரமல்ல; மதுவிலக்குக் கொள்கைக்காக உயிரிழந்த சசிபெருமாள் அவர்களின் குடும்பத்தினரையும், தற்கொலை செய்து கொண்டு மாண்ட முத்துக்குமாரசாமி, விஷ்ணுப்ரியா போன்ற அரசு அதிகாரிகளின் குடும்பத்தினரையும் கேட்டால் பட்ட வேதனைகளை இன்னும் விரிவாகவே கூறுவார்கள்!” என்று தெரிவித்துள்ளார்.

நேற்று ஜெயலலிதா சொன்ன குட்டிக்கதை 

jaya08-600ஒரு சின்னப் பையன் தன் தந்தையிடம் சென்று அப்பா எனக்கு அரசியல் பாடம் கற்றுக் கொடு என்றான்.

உடனே தந்தை தனது மகனைப் பார்த்து மகனே அரசியல் பணி என்பது ஆபத்தானது. இதில் தந்தை, தனயன் என்றெல்லாம் உறவுகளுக்கு இடம் இல்லை.வலிமை உள்ளவரே வெல்ல முடியும். எனவே உனது அரசியல் பாடத்தை நீயே தான் கற்றுக்கொள்ள வேண்டும் என்றார்.

தந்தை சொல்லை மகன் கேட்கவில்லை. அரசியல் பாடம் கற்பதில் பிடிவாதமாக இருந்தான். மகன் தந்தையே உங்களைப் பார்த்தே நான் அரசியலில் நிறைய கற்றுக் கொண்டுள்ளேன். இருந்தாலும் எனக்கு நீங்கள் பாடம் கற்றுக் கொடுக்க வேண்டும்” என்றான். வேறு வழியின்றி தந்தையும் மகனுக்கு அரசியல் பாடம் கற்றுக் கொடுக்க சம்மதித்தார்.

மகனை அழைத்து ஓடிப்போய் ஒரு ஏணி எடுத்துக் கொண்டு வா என்றார்.

“எதற்கு ஏணி?” என்று கேட்டான் மகன்.

“இப்படியெல்லாம் கேட்கக் கூடாது நான் சொல்வதைச் செய்ய வேண்டும்” என்றார் தந்தை. மகன் ஏணியை எடுத்துக் கொண்டு வந்தான்.

“இந்த சுவற்றிலே ஏணியை சாத்தி வை. பிறகு ஏணியின் மீது ஏறி உச்சிக்கு செல்.மேலே பரணியில் நான் என்னென்ன ஏமாற்று வேலைகளைச் செய்து அரசியலில் நிலைத்து நிற்கிறேன் என்பது பற்றி நெஞ்சைத் திறந்து எழுதி வைத்துள்ளேன். அரசியல் பற்றிய அனைத்து பாடங்களும் அவற்றில் உள்ளன. அதை கற்றுத் தேர்ந்தால் நீயும் அரசியலில் பெரிய ஆளாக ஆகலாம்” என்றார்.

“அப்பா நான் ஏணியிலே ஏறி மேலே போகிறேன். நீ கீழே இருந்து ஏணியை கெட்டியாக பிடித்துக் கொள்” என்றான் மகன்.

“அதைப் பற்றி நீ கவலைப்படாதே. நான் பார்த்துக் கொள்கிறேன்” என்றார் தந்தையார். மகன் மெதுவாக ஏணியின் மேலே போனான். அவன் உச்சிக்குப் போனதும் தந்தை ஏணியின் மேல் இருந்த கையை எடுத்து விட்டார்.

ஏணி சரிந்து விழுந்தது. மகனும் கீழே விழுந்து விட்டான். வலி தாங்காமல் இடுப்பைப் பிடித்துக் கொண்டே எழுந்தான் மகன்.

“என்னப்பா இப்படி ஏணியிலிருந்து கையை எடுத்து விட்டாயே! உன்னால் தான் எனக்கு இடுப்பில் இப்போது அடிபட்டு இருக்கிறது” என்று கூச்சலிட்டான். தந்தை சிரித்துக் கொண்டே “எல்லாவற்றையும் நீ இப்போதே தெரிந்து கொண்டால் என்னை யார் மதிப்பார்கள்?” என்று கேட்டார். இது தான் அரசியலில் முதல் பாடம் என்று தெரிந்து கொண்ட மகன், “அப்பனாக இருந்தாலும் நம்பக் கூடாது!  நம்மை நாமே தான் வளர்த்துக் கொள்ள வேண்டும்” என்று முடிவெடுத்தான்.

சரி. எவ்வளவு தூரம் தான் இவன் தன்னை வளர்த்துக் கொள்கிறான் என்று பார்ப்போம் என நினைத்த தந்தை சிறிது விட்டுப் பிடித்து பின்னர் மகனுக்கு கடிவாளம் போட்டுவிட்டார்.

“அரசியல் எவ்வளவு ஆபத்தானது என்பதற்காகத் தான் நான் இந்தக் கதையை இங்கு கூறினேனே தவிர, நீங்கள் யாரையாவது கற்பனை செய்து கொண்டால் அதற்கு நான் பொறுப்பல்ல” என்று ஜெயலலிதா நேற்று அவ்விழாவில் கூறினார்.