புதுடெல்லி – சியாச்சின் பனிச்சரிவில் சிக்கி 6 நாட்களுக்குப் பின் மீட்கப்பட்ட இராணுவ வீரர் ஹனுமந்தப்பா தொடர்ந்து கவலைக்கிடமான நிலையில் உள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
கடுங்குளிரில் சிக்கி அவரது சிறுநீரகங்களும், நுரையீரலும் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், அவரைப் பிழைக்க வைக்க மருத்துவர்கள் தொடர்ந்து போராடி வருகின்றனர்.
இந்நிலையில், உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த நிதி பாண்டே என்ற பெண்ணும், மகாராஷ்ராவைச் சேர்ந்த கடற்படை முன்னாள் வீரர் எஸ்.எஸ். ராஜூ என்பவரும் தங்களது சிறுநீரகத்தை தானமாகத் தர முன்வந்துள்ளனர்.
எனினும், ஹனுமந்தப்பாவின் உடல்நிலை தொடர்ந்து அபாயக்கட்டத்தில் உள்ளதாகவே மருத்துவர்கள் கூறியுள்ளனர்.
ஹனுமந்தப்பா உயிர் பிழைக்க இந்தியா முழுவதும் சாதி, மத பேதமின்றி ஆங்காங்கே பிரார்த்தனைகள் நடைபெற்று வருகின்றன.
ஹனுமந்தப்பா ராணுவத்தில் 13 ஆண்டுகள் பணிபுரிந்தாலும் அதில், 10 ஆண்டுகளை தன் விருப்பப்படி மிக சவாலான இடங்களிலேயே பணிபுரிந்துள்ளார் என தெரியவந்துள்ளது.
மிக துணிச்சலான வீரர்
இராணுவத்தில் கடந்த 13 ஆண்டுகளாக மிகக் கடினமான பணிகளையே தேர்வு செய்து வந்துள்ள ஹனுமந்தப்பா குறித்து இராணுவ அதிகாரி ஒருவர் செய்தியாளர்களிடம் கூறுகையில்,
“33 வயதாகும் ஹனுமந்தப்பா கடந்த 2002 அக்டோபர் 25-ம் தேதி மெட்ராஸ் ரெஜிமென்ட்டில் 19-வது பட்டாலியனில் சேர்ந்தார்.”
“முழு உடற்தகுதி கொண்டிருந்த ஹனுமந்தப்பா தொடக்கத்திலிருந்தே சவாலான களங்களில் பணிபுரிய விரும்பினார்.”
“கடந்த 2003- 06 காலகட்டத்தில் ஜம்மு-காஷ்மீரின் மாஹோர் பகுதியில், தீவிரவாத ஊடுருவலைத் தடுக்கும் பிரிவில் துணிச்சலுடன் பணியாற்றினார்.”
“அதனைத் தொடர்ந்து மெட்ராஸ் ராஷ்ட்ரீய ரைபிள் பிரிவில், கடந்த 2008 முதல் 2010 வரையில் பணிபுரிந்து, தீவிரவாதத்திற்கு எதிரான நடவடிக்கைகளில் ஈடுபட்டார்.”
“பின்னர், வடகிழக்கு மாநிலங்களில், போடோலாந்து தேசிய ஜனநாயக முன்னணி, ஐக்கிய அசாம் விடுதலை முன்னணி அமைப்புகளுக்கு எதிராக தானாக முன்வந்து பணிபுரிந்தார்.”
“கடந்த 2015 ஆகஸ்ட் முதல் சியாச்சின் பனிமுகட்டில் பணிபுரிந்த அவர் எப்போதும் தனது சக வீரர்களுடன் அன்பாகப் பழகி வந்தார்” என்று அந்த இராணுவ அதிகாரி தெரிவித்துள்ளார்.