சிபு – வெள்ள நிலைமை மேலும் மோசமடையுமானால், சரவாக் தீயணைப்பு – மீட்புப்பணி வீரர்கள் இருபத்து நான்கு மணி நேரமும் பணியாற்ற வேண்டிய சூழல் ஏற்படக்கூடும்.
சரவாக் நடவடிக்கைத் துறையின் உதவி இயக்குநர் ஃபர்ஹான் சுஃபியான் போர்ஹான் இது தொடர்பாக நேற்று புதன்கிழமையன்று செய்தியாளர்களிடம் பேசுகையில், இத்துறையில் 990 பேர் பணியாற்றுவதாகவும் அவர்கள் அனைவரும் தினமும் 12 மணி நேரம் சுழற்சி முறையில் பணியாற்றி வருவதாகவும் தெரிவித்தார்.
“இரு ஹெலிகாப்டர்கள், நான்கு சக்கர வாகனங்கள், லோரிகள், வேன்கள் மற்றும் பேருந்துகள் ஆகியவை அடங்கிய 115 வாகனங்களும் 45 படகுகளும் வெள்ளத்தில் சிக்கியவர்களை பாதுகாப்பான இடங்களுக்கு கொண்டு செல்லும் பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளன.”
“தற்போது கடல் கொந்தளிப்புடன் காணப்படுகிறது. மிக உயரமான அலைகளும் எழும்புவதால் பொதுமக்கள் கடற்கரைக்குச் செல்லாமல் இருப்பது நல்லது. அதேபோல் ஆற்றுப் பகுதிகளில் இருந்தும் பொதுமக்கள் விலகி நிற்க வேண்டியது அவசியம்,” என ஃபர்ஹான் சுஃபியான் போர்ஹான் தெரிவித்துள்ளார்.