Home Featured நாடு புலியின் பல்லைப் பிடுங்க ஒருவர் முயற்சி செய்தார் – திரெங்கானு ஓட்டுநர் தகவல்!

புலியின் பல்லைப் பிடுங்க ஒருவர் முயற்சி செய்தார் – திரெங்கானு ஓட்டுநர் தகவல்!

726
0
SHARE
Ad

Tigerகோலாலம்பூர் – கடந்த வாரம் சனிக்கிழமை, தனது காரில் மோதி விபத்திற்குள்ளாகி புலி ஒன்று இறந்தது குறித்து ஓட்டுநரான மொகமட் ஷாரின் அப்துல் அசிஸ் மிகவும் வருத்தமடைந்துள்ளார்.

“மிருகக்காட்சி சாலைகளில் புலிகளின் நலனுக்கான திட்டங்களுக்கு நிதியுதவி செய்யும் படி எனது நண்பர்கள் பரிந்துரைத்துள்ளார்கள் நான் அதைப் பரிசீலித்து வருகின்றேன்” என்று மலேசியாகினிக்கு அளித்த பேட்டி ஒன்றில் மொகமட் ஷாரின் தெரிவித்துள்ளார்.

புகைப்படக் கலைஞரான மொகமட் ஷாரின் புலிகள் இனம் அழிந்து வருவதை நன்கு உணர்ந்தவர் என்றாலும் துரதிருஷ்டவசமாக தனது வாகனத்தில் மோதி புலி இறந்ததை எண்ணி வருந்தி வருகின்றார்.

#TamilSchoolmychoice

இந்தச் சம்பவம் சமூகத்தில் ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்தும் எனத் தான் நம்புவதாகவும் மொகமட் சாரின் குறிப்பிட்டுள்ளார்.

இதனிடையே, சம்பவம் நடந்த அன்று இரவு, திடீரென விபத்து நடந்த இடத்திற்கு வந்த ஒருவர், இறந்த புலியை காரின் அடியிலிருந்து மீட்க முயற்சி செய்தார் என்றும், அப்புலியின் வாயிலிருந்து பல்லைப் பிடுங்க முயற்சி செய்தார் என்றும் ஷாரின் சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளார்.

அதனையடுத்து, திரெங்காணு வனவிலங்குத் துறை இயக்குநர் மொகமட் ஹாஸ்டி ஹுசின் வெளியிட்டுள்ள தகவலில், இந்தச் சம்பவத்தின் போது அங்கிருந்த அனைவரையும் விசாரணை செய்யவுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

அவர்கள் அனைவரும் வனவிலங்குப் பாதுகாப்புச் சட்டம் 2000-ன் கீழ் விசாரணை செய்யப்படவுள்ளார்கள் என்றும், அதில் யாராவது தவறு செய்திருப்பதாகக் கண்டறியப்பட்டால் அபராதமும், சிறைத் தண்டனையும் வழங்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

கடந்த சனிக்கிழமை அதிகாலை 1 மணியளவில் கெமாமன் கிழக்குக் கடற்கரை விரைவுச்சாலையில் கிலோமீட்டர் 321.2 2 அருகே, சுற்றித் திரிந்த புலி ஒன்று, அவ்வழியே வீடு திரும்பிக் கொண்டிருந்த ஷாரினின் காரில் மோதி விபத்திற்குள்ளானது.

பின்னர் அப்புலியின் உடலைப் பரிசோதனை செய்து பார்த்த அதிகாரிகள், அப்புலி கருவுற்றிருந்ததைக் கண்டறிந்தனர்.

 

 

கெமாமன் பகுதி சுற்றுலாத் தளமாகச் செயல்பட்டு வருகின்றது. அங்கு வனவிலங்குப் பூங்கா ஒன்றும் அமைந்துள்ளது.

இதனிடையே, கடந்த ஜனவரி 21-ம் தேதி, கெமாமன் அருகே வீட்டில் புலித் தோலைப் பதுக்கி வைத்திருந்த சிலரைக் காவல்துறையினர் கைது செய்திருப்பதாகவும் என்எஸ்டி உட்பட பல முக்கிய செய்தி இணையதளங்கள் தெரிவித்துள்ளன.

எனவே, ஷாரின் வெளியிட்டிருக்கும் சந்தேகத்தை வைத்துப் பார்க்கையில், இந்தப் புலி சாலைக்கு வந்த விவகாரத்தில் ஏதேணும் சில மறைமுக விசயங்கள் இருக்கலாம் என தற்போது சந்தேகம் எழுந்துள்ளது.

எனினும், வனவிலங்கு இலாகா மற்றும் காவல்துறையினரின் விசாரணைக்குப் பின்பே உண்மை நிலவரம் தெரியவரும் என்பது குறிப்பிடத்தக்கது.