Home Featured நாடு ‘அங் பாவ்’ பணத்திற்காக 87 வயது முதியவர் கொலை – எதை நோக்கிப் போகிறது இந்த...

‘அங் பாவ்’ பணத்திற்காக 87 வயது முதியவர் கொலை – எதை நோக்கிப் போகிறது இந்த நாடு?

530
0
SHARE
Ad

ang-pau-murder-110216கிள்ளான் – சீனப் புத்தாண்டிற்கு உறவினர்கள் அளித்த 1000 ரிங்கிட் ‘அங் பாவ்’ பணத்தை வைத்திருந்த 87 வயது முதியவரை, சில மர்ம நபர்கள் கொலை செய்து, அப்பணத்தை அவரிடமிருந்து கைப்பற்றிச் சென்றுள்ளனர்.

நேற்று புதன்கிழமை காலை 8 மணியளவில் தாமான் செந்தோசாவிலுள்ள இரண்டு மாடி வீடு ஒன்றில் படிக்கட்டு அருகே, 6 பிள்ளைகளுக்குத் தந்தையான ஆங் சோக் மெங் பிணமாய் கிடந்தார்.

அவ்வீட்டின் முதன்மை இரும்பு நுழைவு வாயில் வெட்டப்பட்டு, முன்புறக்கதவு வலுக்கட்டாயமாகத் திறக்கப்பட்டது போல் காணப்பட்டதாக தெற்கு கிள்ளான் ஓசிபிடி துணை ஆணையர் அஸ்மான் அப்துல் ரசாக் தெரிவித்துள்ளார்.

#TamilSchoolmychoice

கொலை நடந்த வீட்டில் 5 வகையான கைரேகைகளும், இரண்டு இடங்களில் வியர்வைத் துளிகளையும் தடவியல் நிபுணர்கள் கண்டறிந்துள்ளதாகவும் அஸ்மான் குறிப்பிட்டுள்ளார்.

முதியவரின் முகத்திலும், தலையிலும் சிராய்ப்புக் காயங்கள் இருந்ததாகவும், ஆனால் இரத்தம் இல்லையென்றும் அஸ்மான் தெரிவித்துள்ளார்.

மேலும், அங்கு 23 செமீ நீளமுடைய கத்தி ஒன்றும், மற்றுமொரு ஆயுதமும் கைப்பற்றப்பட்டுள்ளது.

கடந்த 16 ஆண்டுகளாக அவ்வீட்டில் ஆங் தனியாக வசித்து வருகின்றார் என்று கூறப்படுகின்றது.

சீனப் புத்தாண்டின் இரண்டாவது நாளன்று அவரது வீட்டிற்கு வருகை புரிந்த அவரது பிள்ளைகளும், உறவினர்களும், அவருக்கு 1000 ரிங்கிட்டிற்கும் மேல் ‘அங் பாவ்’ கொடுத்துள்ளனர்.

அவரிடமிருந்த அப்பணமும், அவரது கைப்பேசியையும் கொள்ளையர்கள் திருடிச் சென்றிருப்பதாக ஆங்கின் மகன் தெரிவித்துள்ளார்.

கடைசியாக ஆங்கை செவ்வாய்கிழமை இரவு 9 மணியளவில் கண்டுள்ளனர் அண்டை வீட்டுக்காரர்கள். ஆனால் மறுநாள் காலை 7 மணியளவில் வீட்டின் கதவு உடைக்கப்பட்டுள்ளதை அறிந்தவுடன் உடனடியாக அவரது பிள்ளைகளுக்குத் தகவல் அளித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

 

படம்: த ஸ்டார்