கோலாலம்பூர் – தான் செய்த தவறை எண்ணி சிறையில் இருக்கும் காலத்தில் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம் வருந்த வேண்டும் என சைபுல் புகாரி அஸ்லான் (படம்) தெரிவித்துள்ளார்.
இதன் பொருட்டு சிறைவாசம் அனுபவிக்கும் காலத்தை அன்வார் முழுமையாக நிறைவு செய்ய வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.
அன்வார் நலமாக இருக்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ள அவர், முன்னாள் எதிர்க்கட்சித் தலைவர் சிறையில் ஆரோக்கியமாகவும் நிம்மதியாகவும் இருப்பார் எனத் தாம் நம்புவதாகத் தெரிவித்தார்.
“தவறு செய்தவர்களை இறைவன் மன்னிப்பார். அவர் (அன்வார்) என்னை முன்பு பணிக்கு அமர்த்தியவர் (முதலாளி). எனவே அவருக்காக நான் பிரார்த்தனை செய்கிறேன்,” என்று நேற்று புதன்கிழமை சைபுல் கூறினார்.
அன்வாருக்கு ஆதரவாக கடந்த ஆண்டு நடைபெற்ற அனைத்து வகையான பிரச்சாரங்களையும் இயக்கங்களையும் தாம் கவனித்து வந்ததாகக் குறிப்பிட்ட அவர், அவை குறித்து கருத்துரைக்க மறுத்துவிட்டார்.
“அன்வாருக்கு 50 மில்லியன் ரிங்கிட் செலவு வைக்கக்கூடிய அவதூறு வழக்கை நான் திரும்பப் பெற்றுக் கொள்கிறேன். இது முழுக்க மனிதநேய அடிப்படையிலான முடிவு.”
“எனது புகார்கள் கூட்டரசு நீதிமன்றம் வரை எடுத்துச் செல்லப்பட்டதும் அன்வார் மீது குற்றம்சாட்டப்பட்டதுமே எனக்குப் போதுமானது. எனவே அந்த அத்தியாயத்தை மறந்துவிட்டு என் வாழ்க்கையைக் கவனிக்கப் போகிறேன்.
“முன்பு பலரும் பலவிதமாகப் பேசினர். எனது குற்றச்சாட்டுகள் அனைத்தும் பொய்யானவை என்றும் அரசியல் தூண்டுதல் காரணமாக சொல்லப்பட்டது என்றும் கூட பலர் கருதினர்.
“மலேசியர்கள் மத்தியில் மட்டுமல்லாமல் உலகம் முழுவதும் இத்தகைய பொய்கள் பரப்பப்பட்டன. உலகின் மிகப்பெரிய சக்தியாக விளங்கும் தரப்புகளும் கூட இத்தகைய பொய்களை நம்பியதுடன், அன்வாரின் விடுதலைக்காக மேற்கொள்ளப்பட்ட பிரச்சாரங்களுக்குப் பல மில்லியன்களை நன்கொடையாக அளித்தது வெட்கக்கேடானது,” என்று சைபுல் மேலும் கூறியுள்ளார்.