கோத்தபாரு – டான்ஸ்ரீ மொகிதின் யாசின், டத்தோஸ்ரீ ஷாபி அப்டால் ஆகிய இருவரையும் மீண்டும் பழையபடி கட்சி நடவடிக்கைகளில் பங்கேற்க வைப்பதற்கான முயற்சிகளில் ஈடுபட தாம் தயாராக இருப்பதாக அம்னோ தகவல் பிரிவுத் தலைவர் டான்ஸ்ரீ அனுவார் மூசா விருப்பம் தெரிவித்துள்ளார்.
இந்தப் பணி கடினமானது என்று குறிப்பிட்டுள்ள அவர், மாநிலத்தில் அம்னோவை வலுப்படுத்துவதற்காக கட்சியின் அனைத்து பிரிவினரையும் சந்திக்கும்போது, கட்சி ஒற்றுமையை வலுப்படுத்துவதற்காக மேற்குறிப்பிட்ட இருவரையும் சந்திக்க இருப்பதாகக் கூறினார்.
“இந்த விவகாரத்தில் நான் மத்தியஸ்தராக செயல்படவில்லை. எனினும் கட்சியில் ஓரங்கட்டப்பட்டதாக கருதக் கூடியவர்களின் மனக்குறையை தீர்க்கக்கூடிய கருவியாக இருக்க முடியும் என நம்புகிறேன்.”
“தற்போது ஷாபி அப்டால் குறைவாக பேசுகிறார் என்பது மகிழ்ச்சி தருகிறது. இது, அடுத்த மூன்று ஆண்டுகளில் நடைபெறவுள்ள 14ஆவது பொதுத் தேர்தலுக்கு முன் கட்சிக்கு கைகொடுக்கும். அண்மையில் ஷஃபியை சந்தித்துப் பேசினேன். அது ஆக்கப்பூர்வமான சந்திப்பாக இருந்தது,” என்று நேற்று திங்கட்கிழமை செய்தியாளர்களிடம் அனுவார் மூசா தெரிவித்தார்.
அம்னோ உறுப்பினர் என்ற வகையில் தமக்கும் கட்சியில் பல்வேறு ஏற்ற இறக்கங்கள் இருந்ததாக குறிப்பிட்ட அவர், அனைத்தையும் கடந்து தாம் இன்னும் அம்னோவிலேயே நீடிப்பதாகத் தெரிவித்தார்.
“கட்சியில் இறக்கங்களைச் சந்தித்தபோது என் மனநிலை எப்படி இருந்திருக்கும் என்று கற்பனை செய்து பாருங்கள். ஆனால் நான் இன்னும் அம்னோவில்தான் இருக்கிறேன். மொகிதினும் ஷாபியும் அதே போன்ற மனநிலையில்தான் இருப்பார்கள் என்பது என் கருத்து. இருவரும் பழையபடி கட்சி நடவடிக்கைகளில் பங்கேற்பது குறிப்பிட்ட காலத்திற்குள் நடக்கும்,” என்று நம்பிக்கை தெரிவித்தார் அனுவார் மூசா.