கோலாலம்பூர் – சக்தி சௌந்தராஜன் இயக்கத்தில் ஜெயம்ரவி, லஷ்மிமேனன் நடிப்பில் உருவாகியுள்ள ‘மிருதன்’ திரைப்படம் நாளை வெளியாகவுள்ளது.
இப்படம் தமிழின் முதல் ஸோம்பி திரைப்படம் என்ற அடையாளத்துடன் ஊடகங்களில் விளம்பரப்படுத்தப்பட்டு வருகின்றது.
இது தமிழின் முதல் ஸோம்பி திரைப்படமா? என்றால், இல்லை என்பார்கள் மலேசியாவிலுள்ள தமிழர்கள்.
காரணம், கடந்த ஆண்டே மலேசியாவில் ஸோம்பிக்களை கதைக்கருவாக வைத்து, வீடு புரோடக்சன்ஸ் தயாரிப்பில் பிரேம்நாத் இயக்கத்தில், மலேசியாவின் முன்னணி நட்சத்திரங்கள் டேனிஸ், ஜாஸ்மின் நடிப்பில் “வேற வழி இல்ல” என்ற திரைப்படம் வெளியாகி, மக்கள் மத்தியில் அதிக வரவேற்பினைப் பெற்றுள்ளது.
மலேசியாவில் 27-க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் அதிகாரப்பூர்வமாக வெளியீடு செய்யப்பட்டது. குறிப்பாக இத்திரைப்படத்தில் தமிழ்நாட்டைச் சேர்ந்த கலைஞர்கள் கூட சிலர் நடித்திருக்கின்றனர்.
இந்நிலையில், தற்போது ‘மிருதனை’ தமிழின் முதல் ஸோம்பி திரைப்படமாக விளம்பரப்படுத்தி வருவது இங்குள்ள ரசிகர்கள் மத்தியில் ஆச்சர்யத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
ஹாலிவுட்டில் இது போன்ற ஸோம்பி திரைப்படங்கள் பல வெளிவந்துவிட்டாலும் கூட, தமிழுக்கு இந்த கதைக்கரு புதியது.
தமிழ் சினிமாவில் அப்படி ஒரு புதிய விசயத்தை அறிமுகப்படுத்தியது யார் என்று ஆவணப்படுத்தினால், அது மலேசிய இயக்குநர் பிரேம்நாத் தான் என்பதில் எந்த ஒரு சந்தேகமும் இல்லை.
வளர்ந்து வரும் மலேசியத் தமிழ் சினிமாவின் குரல் தற்போதைக்கு உலகமெங்கும் உரக்க கேட்காமல் இருக்கலாம். ஆனால் நிச்சயமாக தமிழின் முதல் ஸோம்பி திரைப்படம் என்ற அடைமொழி மலேசியத் தயாரிப்பான ‘வேற வழி இல்ல’ என்ற திரைப்படத்திற்கே உரியது.
‘வேற வழி இல்ல’ திரைப்படத்தின் விமர்சனத்தை கீழே உள்ள இணைப்பின் வழியாகப் படிக்கலாம்:-
http://www.selliyal.com/archives/99110
– ஃபீனிக்ஸ்தாசன்