கோலாலம்பூர் – உலகின் முதல் ஸாம்பி பற்றிய தமிழ்த் திரைப்படம் என்றால் அது மலேசியாவில் உருவாக்கப்பட்ட ‘வேற வழி இல்ல’ என்பதை ஆவணப்படுத்தும் நோக்கில் இந்த செய்தி வெளியிடப்படுகின்றது.
தற்போது, தமிழ்நாட்டில் மிக பரபரப்பாக எதிர்பார்க்கப்படும் திரைப்படம் ஜெயம்ரவி நடிப்பில் உருவாகி வரும் ‘மிருதன்’.
அதற்கு காரணம், அப்படத்தின் போஸ்டரும் அதைத் தொடர்ந்து வெளியான அப்படத்தின் கதைக் களமும் தான். மனிதச் சதைகளை வேட்டையாடும் கொடூர மனித மிருகங்களான ‘ஸாம்பிக்கள்’ பற்றிய கதைக்களம் தான் மிருதன் என்கிறார் அதன் இயக்குநர் சக்தி சௌந்தர் ராஜன்.
இந்தப் படத்திற்கான விளம்பரப் பணிகள் தற்போது நடைபெற்று வரும் நிலையில், பிரபல வார இதழ் ஒன்றிற்கு சக்தி சௌந்தர் ராஜன் அளித்துள்ள பேட்டியில், இம்மாதிரியான கதைகள் “தமிழ் சினிமாவுக்குப் புதுசு. சொல்லப்போனா இந்திய சினிமாவிலேயே இதுதான் முதல் முறை” என்று கூறியிருந்தார். அந்த வார இதழும், அந்த பேட்டிக்கான தலைப்பாக ‘தமிழின் முதல் ஸோம்பி’ என குறிப்பிட்டு இருந்தது.
இயக்குனர் சக்தி சௌந்தர் ராஜன் கூறியபடி, இந்த கதைக் களம் இந்திய சினிமாவிற்கு புதிது தான் என்றாலும், தமிழ் சினிமாவிற்கு புதிது அல்ல. காரணம், உலக அளவில் முதன் முதலாக தமிழ் சினிமாவிற்கு இந்த கதைக் களத்தை அறிமுகப்படுத்தியவர் மலேசிய இயக்குனர் பிரேம் நாத் தான். முழுக்க முழுக்க மலேசியாவில் எடுக்கப்பட்ட தமிழ்த் திரைப்படமான ‘வேற வழி இல்ல’ தான், தமிழின் முதல் ஸாம்பி திரைப்படம் என்பதற்கான சான்றுகள் உள்ளன.
ஒருவேளை, இந்த செய்தி வெளியாவதைத் தொடர்ந்து, உலகில் தமிழர்கள் அதிகம் வாழும் வேறு நாடுகளில் அது போன்ற ஸாம்பி பற்றிய படம் ஏற்கனவே வெளியாகியுள்ளதா? என்பது தெரியவரலாம்.
எனினும், கடந்த ஜூலை மாதமே மலேசியாவில் வெளியாகி மிகவும் பரபரப்பாக பேசப்பட்ட ‘வேற வழி இல்ல’ திரைப்படத்தை, அப்போதே செல்லியல் உட்பட மற்ற தமிழ்ப் பத்திரிக்கைகள் தமிழின் முதல் ஸாம்பி திரைப்படமாக அறிவித்துள்ளன. அது தான் இப்போதைக்கு இருக்கும் சான்று.
தற்போது, மிருதனை தமிழின் முதல் ஸாம்பி திரைப்படமாக விளம்பரப்படுத்தி வருவது இங்குள்ள ரசிகர்கள் மத்தியில் ஆச்சர்யத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
ஸாம்பி கதைக்களம் என்பது ஆங்கிலப் படங்களில் ஏற்கனவே பலமுறை காட்டப்பட்டுவிட்ட கதைக்களம் தான். அதை யார் வேண்டுமானாலும் திரைப்படமாக எடுப்பதற்கு உரிமை உண்டு.
ஆனால், உலக அளவில் தமிழின் முதல் ஸாம்பி திரைப்படம் என்பது மலேசியாவில் வெளிவந்த ‘வேற வழி இல்ல’ என்பது தான் என்ற பெருமை அப்பட இயக்குநர் பிரேம்நாத்தையும், அதன் தயாரிப்பாளரான வீடு புரொடக்சன்சையுமே சேரும் என்பது குறிப்பிடத்தக்கது.