சென்னை – சென்னை பேரிடர் தமிழக மக்களை மட்டுமல்ல மொழி தாண்டி பல்வேறு மக்களையும் இணைத்துள்ளது. கர்நாடகா, கேரளா, ஆந்திரா என பல்வேறு மாநில மக்களும் களத்தில் இறங்கி சென்னைக்காக உழைத்துக் கொண்டிருக்கின்றனர். குறிப்பாக நடிகர்கள் பலரும் மொழி பேதம் இன்றி தங்களால் ஆன உதவிகளை செய்து வருகின்றனர்.
தெலுங்கு நடிகர் ராணா, சென்னை பாதிப்பை உடனடியாக தெரிந்து கொண்டு, ‘மன மெட்ராஸ் கோசம்’ என்ற பெயரில் தெலுங்கு நடிகர்களை ஒன்றிணைத்து பல்வேறு உதவிகளை செய்து வருகிறார். இந்நிலையில் அவர் பிரபல ஊடகம் ஒன்றிற்கு அளித்துள்ள பேட்டியில், “சென்னை வெள்ளம்னு கேள்விபட்டதும், எல்லாருக்குமே அதிர்ச்சி. யாருக்குமே வேலை நடக்கல. சென்னைக்கு பாதிப்புனா எங்களுக்கும் பாதிப்புதான். சென்னை நல்லா இருந்தா தான் நாங்க நல்லா இருக்க முடியும்” என்று உருக்கமாக கூறியுள்ளார்.
மேலும் அவர், சென்னை பழைய நிலைக்கு திரும்பும் வரை இந்த பணி தொடரும் என்றும் உறுதி அளித்துள்ளார்.
மன மெட்ராஸ் கோசம் அமைப்பின் மூலம் இதுவரை 9 பெரிய லாரிகள் மூலம் சென்னைக்கு நிவாரணப் பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.