Home Featured நாடு பேங்க் நெகாரா ஆளுநர் பதவியிலிருந்து விலகுகிறார் சேத்தி அக்தார்! அடுத்தது யார்?

பேங்க் நெகாரா ஆளுநர் பதவியிலிருந்து விலகுகிறார் சேத்தி அக்தார்! அடுத்தது யார்?

1250
0
SHARE
Ad

Zetiகோலாலம்பூர் – கடந்த 16 ஆண்டுகளாக நாட்டின் மத்திய வங்கியான பேங்க் நெகாராவை திறம்பட வழிநடத்திய டான்ஸ்ரீ டாக்டர் சேத்தி அக்தார் அசிஸ் (படம்) எதிர்வரும் ஏப்ரல் மாதத்தோடு, தனது பதவிக் காலத்தை நிறைவு செய்கின்றார்.

கடந்த 2000ஆம் ஆண்டில், துன் மகாதீர் பிரதமராக இருந்தபோது, நாடு மிக மோசமான பொருளாதார சீரழிவிலிருந்து மீண்டு கொண்டிருந்த தருணத்தில், பேங்க் நெகாராவின் கவர்னர் பொறுப்பை ஏற்றார் சேத்தி. இவர் மலாயாப் பல்கலைக் கழகத்தின் முன்னாள் துணை வேந்தரான பேராசிரியர் உங்கு அசிசின் புதல்வியாவார்.

அவருக்கு அடுத்ததாக யார் அவரது பதவியை நிறைவு செய்வார்கள் என்ற கேள்வி தற்போது எழுந்துள்ளது.

#TamilSchoolmychoice

தனது பதவிக் காலம் முடிவடைந்த பின்னர் மற்றொருவரை நியமிக்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன என்றும் தன்னை தொடர்ந்து அந்தப் பதவியில் நீடிக்க வேண்டுகோள் எதுவும் விடுக்கப்படவில்லை என்றும் சேத்தி கூறியுள்ளார்.

bank-negaraகடந்த ஓராண்டாக பிரதமர் நஜிப் தொடர்பான 1எம்டிபி விவகாரங்களில் சேத்தியின் நடவடிக்கைகளும், பேங்க் நெகாராவின் சட்டதிட்டங்களும் அனைவரின் கவனத்திற்கும் உள்ளானது.

இதற்கிடையில், பேங்க் நெகாராவின் தலைமைப் பொறுப்பை ஏற்பவர்கள் அரசியல்வாதிகளாக இருக்கக் கூடாது என்றும், பேங்க் நெகாரா அரசியலுக்கு அப்பாற்பட்டு இயங்க வேண்டும் என்றும் 68 வயதான சேத்தி தெரிவித்துள்ளார்.

சேத்திக்கு முன்னர் பேங்க் நெகாரா ஆளுநர் பதவியை வகித்த ஆறு பேரும் சேத்தியைப் போலவே அரசியல் ஈடுபாடு கொண்டவர்களாக இருந்ததில்லை.

ஆனால், புதிதாக நியமிக்கப்படுபவர் பிரதமர் நஜிப்புக்கு வேண்டப்பட்டவராகவும், அரசியல் தொடர்புடையவராகவும் இருக்கலாம் என்ற ஆரூடங்கள் நிலவுகின்றன.

அடுத்த பேங்க் நெகாரா ஆளுநர் யார்?

Muhammad Ibrahim-Deputy Governor-Bank Negaraஅடுத்த பேங்க் நெகாரா ஆளுநராக வரக் கூடியவர்கள் பட்டியலில் இருப்பவர்களில் பேங்க் நெகாராவின் நடப்பு துணை ஆளுநர் முகமட் இப்ராகிம் (படம்) முதலிடம் வகிக்கிறார். 56 வயதான இவர் மலாயாப் பல்கலைக் கழகத்தின் கணக்கியல் பட்டதாரியாவார். ஹார்வார்ட் பல்கலைக் கழகத்தின் முதுகலைப் பட்டத்தையும், மலேசியாவின் அனைத்துலக இஸ்லாமியப் பல்கலைக் கழகத்தின் வங்கி, நிதித் துறைக்கான டிப்ளமாவையும் பெற்றுள்ளார்.

மலேசிய அரசாங்கத்தின் பொருளாதாரத் திட்டப் பிரிவின் பொறுப்பை ஏற்றுள்ள 51 வயதான அப்துல் வாஹிட் ஓமாரும் பேங்க் நெகாராவின் கவர்னர் பொறுப்பை ஏற்கக் கூடும் என எதிர்பார்க்கப்படுகின்றது. மலாயன் வங்கியின் தலைமைப் பொறுப்பை வகித்திருந்த இவர், பின்னர் அம்னோ சார்பாக செனட்டராகவும், அமைச்சராகவும் பணியாற்றியிருக்கின்றார்.

தற்போது அமெரிக்காவுக்கான மலேசியத் தூதராகப் பணியாற்றி வரும் 60 வயதான அவாங் அடெக் ஹூசேன், பட்டியலில் இடம் பெற்றிருக்கும் மற்றொருவராவார். கிளந்தான் மாநிலத்தில் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்துள்ள அவர் ஏற்கனவே பேங்க் நெகாராவின் துணை ஆளுநராகப் பதவி வகித்துள்ளார்.

பேங்க் நெகாராவின் ஆளுநர் பதவிக்குப் பொருத்தமானவர் எனப் பார்க்கப்படும் மற்றொருவர் நிதி அமைச்சின் தலைமைச் செயலாளரான, 58 வயது, முகமட் இர்வான் செரிகார் அப்துல்லா ஆவார்.

இவர் பொருளாதாரத் துறையில் டாக்டர் பட்டம் பெற்றிருக்கின்றார்.

மேற்குறிப்பிடப்பட்ட நால்வரில் வாஹிட் ஓமார், அவாங் அடெக் ஹூசேன் இருவரும் அரசியல் தொடர்புடையவர்களாகப் பார்க்கப்படுகின்றார்கள்.

-செல்லியல் தொகுப்பு