கோலாலம்பூர் – தலைநகரில் இரவு நேரங்களில் நடந்து வரும் ‘மாட் ரெம்பிட்’ என்றழைக்கப்படும் சட்டவிரோத மோட்டார் பந்தயங்களை கடும் சட்டங்களைக் கொண்டு தடுத்த நிறுத்த இயலாத அரசாங்கம், இறுதியாக ஒரு முடிவுக்கு வந்துள்ளது.
அதாவது, சில மணிநேரங்களுக்கு சாலைப் போக்குவரத்தை நிறுத்தி, அதற்குப் பதிலாக ‘மாட் ரெம்பிட்’ பந்தயத்தை முறையாக அனுமதிப்பது. என்ன வேடிக்கை?
அண்மையில் இத்திட்டம் பற்றி கூட்டரசுப் பிரதேச அமைச்சர் தெங்கு அட்னான் தெங்கு மான்சோர் அறிவித்தார்.
அதற்கு பொதுமக்களோடு சேர்ந்து, ஆளுங்கட்சி, எதிர்கட்சியைச் சேர்ந்த அரசியல் தலைவர்களும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
தலைநகரில் தற்போது காலை நேரங்களில் நிலவி வரும் கடும் போக்குவரத்து நெரிசலை கருத்தில் கொண்டு பலரும் வேலைக்குச் செல்வதற்கு அதிகாலை நேரங்களைத் தேர்ந்தெடுக்கின்றனர். ஒவ்வொரு நாளும் 5 மணி நேரங்களுக்கு குறைவாகத் தான் உறங்குகின்றனர்.
அதேவேளையில், மாலையில் வேலை முடிந்தால் கூட, அலுவலுகத்திலேயே ஒரு சில மணி நேரங்களைக் கழித்துவிட்டு, இரவு 8 மணியளவில் தான் வீட்டிற்கு செல்லவே முடிவெடுக்கின்றனர்.
நிலமை இப்படி இருக்கையில், சாலைப் போக்குவரத்தைக் கட்டுப்படுத்தி வேலைக்குச் செல்வோருக்கு உதவ வேண்டிய அரசாங்கம், சாலையின் நடுவே வாகனத்தை நிறுத்திவிட்டு செல்வோரைத் தடுத்து முறையான வாகன நிறுத்தும் (பார்க்கிங்) வசதிகளைச் செய்து கொடுக்க வேண்டிய அரசாங்கம், இப்படி சட்டவிரோதமாக மோட்டார் பந்தயம் நடத்துபவர்களுக்கு மேலும் வசதிகளை செய்து கொடுக்க முன்வந்துள்ளது குறித்து மலேசியர்கள் கடும் அதிருப்தியடைந்துள்ளனர்.
மலேசியாவில் போக்குவரத்து நெரிசல் காரணமாக பலரும் கடும் மன அழுத்தத்திற்கு உள்ளாகின்றனர். இதனால் ஆத்திரமடையும் அவர்கள் அதிவேகமாக காரையோ அல்லது மோட்டாரையோ ஓட்டி விபத்தில் சிக்கி உயிரிழக்கின்றனர் அல்லது பிறரின் உயிரிழப்பிற்கு காரணமாகின்றனர்.
ஒரு நிகழ்ச்சிக்கு குறிப்பிட்ட நேரத்திற்குள் செல்லவேண்டுமென்றால், குறைந்தது 1 மணி நேரங்களுக்கு முன்பாக தயாராக வேண்டும். அப்போது தான் அவ்விடத்தை சரியான நேரத்தில் அடைய முடியும். அப்படியே, அவ்விடத்தை அடைந்துவிட்டாலும், வாகனத்தை நிறுத்த படும் பாடு இருக்கிறதே? அப்பப்பா..
மொத்தத்தில், சாலைப் போக்குவரத்தை சீரமைக்கும் திட்டங்களை செயல்படுத்தி மக்களுக்கு முறையான வசதிகளை அரசாங்கம் செய்து கொடுக்க வேண்டும் என்பதே பெரும்பாலான மக்களின் கருத்தாக உள்ளது.
அவ்வாறு மோட்டார் பந்தயத்தை முறைப்படுத்த வேண்டும் என்றால், பத்து தீகா, ஷா ஆலம் அல்லது செப்பாங் ஆகியவற்றில் இருக்கும் பந்தய சாலைகளை பயன்படுத்திக் கொள்ள அவர்களுக்கு அரசாங்கம் அனுமதியளிக்கட்டும் என்கின்றனர் சில அரசியல் தலைவர்கள்.
தொகுப்பு: செல்லியல்