கோலாலம்பூர் – கோலாலம்பூரில் இருந்து ஆஸ்திரேலியாவின் மெல்பர்ன் நோக்கிச் சென்ற மலேசியா ஏர்லைன்ஸ் விமானம் எம்எச்149, நேற்று இரவு மாயமானதாக வெளிவந்த தகவலை உள்நாட்டு விமானப் போக்குவரத்து துறை (டிசிஏ) இன்று மறுத்துள்ளது.
மலேசிய நேரப்படி காலை 5.21 மணியளவில் (ஆஸ்திரேலிய நேரம் காலை 8.21) மெல்பர்ன் விமான நிலையத்தில் அது பாதுகாப்பாக தரையிறங்கியதாக டிசிஏ பொது இயக்குநர் டத்தோஸ்ரீ அசாருடின் அப்துல் ரஹ்மான் இன்று அறிவித்துள்ளார்.
அவ்விமானம் நேற்று இரவு 10.07 மணியளவில் கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையத்தில் இருந்து புறப்பட்டது குறிப்பிடத்தக்கது.
நேற்று நட்பு ஊடகங்களில் எம்எச்149 விமானம் ரேடார் தொடர்பில் இருந்து விடுபட்டுவிட்டதாக ஒரு செய்தி வலம் வந்தது.
மக்களிடம் அச்சத்தை ஏற்படுத்த சில விஷமிகள் அவ்வாறு பொய்யான செய்திகளைப் பரப்பி வருவதாக அசாருடின் பெர்னாமாவிடம் தெரிவித்துள்ளார்.