Home Featured தமிழ் நாடு 68வது பிறந்த நாள் : ஜெயலலிதா வாழ்க்கையை மாற்றியமைத்த – மறக்க முடியாத 8 சம்பவங்கள்!

68வது பிறந்த நாள் : ஜெயலலிதா வாழ்க்கையை மாற்றியமைத்த – மறக்க முடியாத 8 சம்பவங்கள்!

917
0
SHARE
Ad

24 பிப்ரவரி 2016 – இன்று தனது 68வது பிறந்த நாளைக் கொண்டாடுகிறார் தமிழக முதல்வர் ஜெயலலிதா. அவரே சட்டமன்றத்தில் கூறியபடி, 68 வயது முடிந்து 69வது அகவையில் அடியெடுத்து வைக்கின்றார் அவர்.

அவர் கொண்டாடுகின்றார் என்பதைவிட தமிழக அரசும், அதிமுக தொண்டர்களும் அவரது பிறந்த நாளைக் கொண்டாடி மகிழ்கின்றார்கள் என்பதே பொருத்தமாக இருக்கும்.

புதுடில்லியில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் சொத்துக் குவிப்பு வழக்கு ஒருபுறம் – எந்த நேரத்திலும் அறிவிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படும் தமிழக சட்டமன்றத் தேர்தல் – அந்தத் தேர்தலில் அவரைத் தோற்கடிக்க கங்கணம் கட்டிக் கொண்டு கூட்டணி சேர்க்க முற்பட்டுள்ள திமுக, விஜயகாந்த், மக்கள் நலக் கூட்டணி போன்ற அரசியல் சக்திகள் இன்னொரு புறம் –

#TamilSchoolmychoice

இவற்றுக்கிடையில்தான் தனது பிறந்த நாளைக் கொண்டாடுகின்றார் ஜெயலலிதா!

ஜெயலலிதாவின் கடந்த காலத்தைத் திரும்பிப் பார்த்தால் 8 முக்கிய சம்பவங்கள் அவரது வாழ்க்கையையே புரட்டிப் போட்டு – அவரது வாழ்க்கைத் திசைகளை மாற்றியமைத்தன என்பதைக் காண முடியும்.

அந்த சம்பவங்களை மீண்டும் ஒருமுறை திரும்பிப் பார்ப்போமா?

சம்பவம் # 1- ‘வெண்ணிற ஆடை’ திரைப்படத்தில் முதன் முதலாக அறிமுகம்

27-jaya-nirmala-600-jpg‘வெண்ணிற ஆடை’ தமிழ்ப்படத்தில் திரைப்பட இரசிகர்களின் கொள்ளை கொள்ளும் விதத்தில் புகழ்பெற்ற இயக்குநர் ஸ்ரீதரால் ஜெயலலிதா அறிமுகம் செய்யப்பட்டிருக்கவில்லை என்றால், தமிழ்ப்பட இரசிகர்களும் அவருக்கு வரவேற்பு கொடுத்து அவரைக் கதாநாயகியாக ஏற்றுக் கொள்ளவில்லையென்றால், அவருக்கு இன்றைய இந்த வாழ்வு ஏது?

அந்த வகையில் தமிழ்த் திரைப்பட இரசிகர்களின் உள்ளங்களில் நுழைவதற்கு வாயிலாக அமைந்த வெண்ணிற ஆடை படத்தின் அறிமுகச் சம்பவம்தான் ஜெயலலிதாவின் இன்றைய உயர்வுக்குப் பிள்ளையார் சுழி போட்டது.

சம்பவம் # 2 ‘ஆயிரத்தில் ஒருவன்’ படத்தின் மூலம் எம்.ஜி.ஆருடன் சந்திப்பு

கதாநாயகியாக அறிமுகமானாலும், பல படங்களில் கதாநாயகியாக நடித்தாலும், எம்ஜிஆருக்கு இணையாக நடிப்பது என்பதும், அதிலும் 28 படங்களில் தொடர்ந்து நடித்து இரசிகர்களின் மனங்களில் ஆழப் பதிவதும் என்ன சாதாரண காரியமா?

Ayirathil-Oruvan-Movie-poster

ஆனால் அதிலும் வெற்றி கண்டார் ஜெயலலிதா.

“நான் ஒரு நாள் தமிழக முதல்வராக வருவேன்” என எம்ஜிஆரே நினைத்துப் பார்த்திருக்க மாட்டார் என்ற சூழ்நிலையில் அவருடன் நடித்த ஜெயலலிதா மட்டும் எப்படித் தமிழக முதல்வராகத் தான் வரக் கூடும் என நினைத்துப் பார்த்திருக்க முடியும்?

ஆனால், அதற்குரிய வாய்ப்பை ஜெயலலிதாவுக்குப் பின்னாளில் ஏற்படுத்தித் தந்தது எம்ஜிஆருடன் நடிக்க அவருக்குக் கிடைத்த வாய்ப்பு. அதற்குக் காரணம் ‘ஆயிரத்தில் ஒருவன்’ திரைப்படம்.

அந்த வகையில் ஆயிரத்தில் ஒருவன் படத்தின் மூலம் ஜெயலலிதா எம்ஜிஆரைச் சந்தித்ததுதான் – அவரது மனதில் இடம் பிடித்ததுதான் – கால ஓட்டத்தில் ஜெயலலிதாவின் வாழ்க்கையை மாற்றியமைத்த மற்றொரு முக்கியச் சம்பவம்.

சம்பவம் # 3 : அதிமுக கொள்கை பரப்புச் செயலாளராக நியமனம்

Jayalalitha MGR ADMK propoganda chief

அதிமுக கொள்கை பரப்பு செயலாளராக எம்ஜிஆருடன்…

எம்ஜிஆருடன் 28 படங்களில் நடித்தாலும், அதன்பின்னர் சில காரணங்களால் அவருடனான தொடர்பை ஜெயலலிதா இழந்தார். எம்ஜிஆரும் லதா, மஞ்சுளா, ராதா சலூஜா என இளம் நடிகைகளுடன் ஜோடி சேர்ந்தார்.

பின்னர் அதிமுக ஆரம்பித்து தமிழக முதல்வரானார் எம்ஜிஆர். அப்போதெல்லாம் அவருக்கும் ஜெயலலிதாவுக்கும் இடையில் பகிரங்க தொடர்புகள் ஏதும் இருந்ததில்லை.

ஆனால், 1981ஆம் ஆண்டில் மதுரையில்  எம்ஜிஆரின் ஏற்பாட்டில் நடைபெற்ற 5வது உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டில் ஜெயலலிதா படைத்த நாட்டிய நாடகம் எம்ஜிஆருக்கும்-ஜெயலலிதாவுக்கும் இடையில் மீண்டும் தொடர்பை ஏற்படுத்தித் தந்தது.

தலைவரின் பழைய கதாநாயகியுடன் ஏற்பட்ட சாதாரண சந்திப்புதானே எனக் கட்சியினர் நினைத்திருக்க, 1982இல் ஜெயலலிதா அதிமுக உறுப்பினராகச் சேர்ந்து கொள்ள, யாரும் எதிர்பாராத விதமாக அடுத்த ஆண்டில் (1983) ஜெயலலிதாவைக் கட்சியின் கொள்கை பரப்புச் செயலாளராக நியமித்தார் எம்ஜிஆர்.

அதுதான் ஜெயலலிதாவின் வாழ்க்கையில் நிகழ்ந்த மற்றொரு முக்கியச் சம்பவம்.

அன்றைய கட்சித் தலைவர்களுக்கு இந்த நியமனம் நெருடலாக இருந்தாலும், சாதாரண அடிமட்ட தொண்டர்கள், தலைவரும், தலைவியும் இணைந்து விட்டார்களே என்று குதூகலித்தனர்.

ஜெயலலிதா கட்சியின் பிரச்சாரக் கூட்டங்களில் கொள்கை பரப்புச் செயலாளராகக் கலந்து கொண்டு, அடிமட்டத் தொண்டன் முதல் கட்சியின் மேல்மட்டத் தலைவர்கள் வரை ஊடுருவக் காரணம் அவருக்குக் கிடைத்த இந்த கொ.ப.செ நியமனம்!

சம்பவம் # 4: எம்ஜிஆரின் இறுதி ஊர்வலத்தில் நிகழ்ந்த அவமானம்

Jayalalitha-MGR Funeral-

எம்ஜிஆர் உடலுக்கு அருகில் சோகமே உருவாய் ஜெயலலிதா….

1987 டிசம்பர் 24ஆம் தேதி எம்ஜிஆரின் எதிர்பாராத மரணம் நிகழ, அவரது உடல் கிடத்தப்பட்டிருந்த வண்டியில் அமர்ந்திருந்த ஜெயலலிதா வலுக்கட்டாயமாகக் கீழே இறக்கப்பட்டார் அல்லது தள்ளிவிடப்பட்டார்.

மக்களின் முன்னிலையில் அவருக்கு நேர்ந்த அந்த அவமான சம்பவம்தான் நாடு முழுவதும் தொலைக்காட்சிகளில் திரும்பத் திரும்ப ஒளிபரப்பப்பட்டு, தகவல் ஊடகங்களில் இடம்பெற்று அவருக்கு மாபெரும் அனுதாப அலையை ஏற்படுத்தித் தந்தது.

அரசியலில் எம்ஜிஆர் விட்ட இடத்தைத் தொடர்வதற்கு அவருக்குள் நெஞ்சுரத்தையும், துணிச்சலையும் விதைத்ததும் இந்தச் சம்பவம்தான் .

சம்பவம் # 5: சட்டமன்றத்தில் ஜெயலலிதா துகிலுரியப்பட்டதால் அனுதாபம்

எம்ஜிஆரின் மனைவி வி.என்.ஜானகி அம்மையாருடன் ஏற்பட்ட மோதலில், அதிமுகவின் இரட்டைஇலைச் சின்னத்தைக் கைப்பற்றினார் ஜெயலலிதா. 1988ஆம் ஆண்டு தமிழகச் சட்டமன்றத் தேர்தலில் 27 சட்டமன்ற உறுப்பினர்களுடன் அதிமுக எதிர்க்கட்சியாக, வீற்றிருக்க, தமிழகச் சட்டமன்றத்தின் முதல் பெண் எதிர்க்கட்சித் தலைவியாக  ஜெயலலிதா அதிமுகவை வழிநடத்திய காலம்.

Jayalalitha-opposition leader-swearing ceremony

1989 – கருணாநிதி முதல்வராக இருந்த போது எதிர்க்கட்சித் தலைவராக ஜெயலலிதா….

1989ஆம் ஆண்டு மார்ச் 25ஆம் தேதி – தமிழகச் சட்டமன்றத்தில் நடந்த அமளியில் ஜெயலலிதா துகிலுரியப்பட்டதாகவும், உடல் ரீதியாகத் தாக்கப்பட்டதாகவும் புகார்கள் எழுந்தன.

தலைவிரி கோலமாக, கிழிந்த சேலையுடன் ஜெயலலிதா சட்டமன்றத்தை விட்டு வெளியே வந்த அந்தச் சம்பவத்தின் காட்சிகள் தமிழக மக்களிடையே குறிப்பாகத் தமிழ்நாட்டுப் பெண் வாக்காளர்களிடையே ஜெயலலிதாவுக்கு அனுதாபத்தை ஏற்படுத்தியது.

அடுத்து வந்த சட்டமன்றத் தேர்தலில் அவருக்குத் தமிழக முதல்வராகும் வெற்றி வாய்ப்பை ஏற்படுத்தித் தந்த காரணங்களில் இந்தச் சம்பவமும் முக்கிய இடம் வகித்தது என்பது அரசியல் ஆய்வாளர்களின் கணிப்பு.

சம்பவம் # 6 : 1996இல் கைதும் சிறை வாசமும்

1996ஆம் ஆண்டு தேர்தலில் மோசமான முறையில் தோல்வியடைந்தார் ஜெயலலிதா. 7 டிசம்பர் 1996இல் ஊழல் வழக்கிற்காக அவர் கைது செய்யப்பட்டுச் சிறையில் அடைக்கப்பட்டதும், தொடர்ந்து சில வாரங்கள் அவர் சிறைவாசத்தை அனுபவித்ததும்தான் அவருடைய வாழ்க்கையை மாற்றிப் போட்ட மற்றொரு சம்பவம்.

Jayalalitha arrested in 1996

1996 – காவல் படை புடைசூழக் கைது செய்யப்பட்ட ஜெயலலிதா…

அதன் காரணமாக, கருணாநிதி மீது அவரும் அவரது கட்சியினரும் கொண்டிருந்த வன்மமும், வஞ்சமும் இன்று வரை அணையாத தீயாகத் தொடர்ந்து எரிந்து கொண்டிருக்கின்றது.

ஜெயலலிதாவின் அந்தக் கைது-சிறைவாசச் சம்பவம்தான் அவருக்குள் மிகப் பெரிய மனமாற்றங்களை ஏற்படுத்தி, மீண்டும் அரசியலில் விட்ட இடத்தைப் பிடிக்கவேண்டும் என்ற வைராக்கியத்தை, மனோபலத்தை அவருக்கு ஏற்படுத்தியது.

சம்பவம் # 7 : சொத்துக் குவிப்பு வழக்கில் கைதும் பெங்களூர் சிறை வாசமும்

2011இல் தமிழகச் சட்டமன்றத் தேர்தலில் மாபெரும் வெற்றி பெற்று மீண்டும் தமிழக முதல்வராக அரியணையில் அமர்ந்தார் ஜெயலலிதா.

jayalalithaaஎல்லாம் சரியாகப் போய்க்கொண்டிருக்க, 27 செப்டம்பர் 2014இல் பெங்களூர் நீதிமன்றம் 18 ஆண்டு கால இழுபறியாக நீடித்துக் கொண்டிருந்த சொத்துக் குவிப்பு வழக்கில் அவருக்குச் சிறைத் தண்டனை விதித்தது. பிணையும் மறுக்கப்பட்டது. பெங்களூர் சிறைச்சாலையில் தமிழக முதல்வராக இருந்தும் அவர் சில நாட்கள் கழிக்க வேண்டிய நிலைமையை உருவாக்கிய அந்தச் செப்டம்பர் 27 சம்பவம்தான் அவரது வாழ்க்கையின் மற்றொரு முக்கியமான சம்பவமாகக் கொள்ளலாம்.

இந்த நாளில் அவருக்குக் கிடைத்த தீர்ப்புதான் அவர் தனது தமிழக முதல்வர் பதவியையும் சட்டமன்ற உறுப்பினர் பதவியையும் இழப்பதற்குக் காரணமாக அமைந்தது.

சம்பவம் # 8; மீண்டும் தமிழக முதல்வராக….

ஜெயலலிதா கதை இத்தோடு முடிந்தது – அவரது அரசியல் எதிர்காலத்திற்கு இனி முற்றுப் புள்ளிதான் எனக் கருணாநிதி முதல் அவரது அனைத்து அரசியல் எதிரிகளும் கொக்கரித்துக் கொண்டிருந்தார்கள்.

jayalalithaaஜெயலலிதாவும், பிணை பெற்று, சிறைச்சாலையில் இருந்து தனது போயஸ் கார்டன் வீட்டுக்கு வந்தவர், எந்த நிகழ்ச்சிகளிலும் கலந்து கொள்ளாமல், வீட்டிலேயே கடந்த சில மாதங்களாக முடங்கிக் கிடந்தார்.

மீண்டும் வழக்கில் சாதகமான தீர்ப்பு கிடைக்க, அதனைத் தொடர்ந்து இந்த ஆண்டு மே 23ஆம் தேதி தமிழக முதல்வராகப் பதவியேற்றார் ஜெயலலிதா.

மீண்டும் முதல்வராக முடியுமா என்ற சந்தேகம் ஜெயலலிதாவுக்கே நிச்சயம் இருந்திருக்கும்.

அந்த வகையில் மே 23ஆம் நாள் அவர் மீண்டும் தமிழக முதல்வராகப் பதவியேற்ற சம்பவம் அவரது வாழ்க்கையில் ஆக இறுதியாக நிகழ்ந்த மறக்க முடியாத சம்பவமாகும்.

சம்பவம் # 9 – எதுவாக இருக்கும்?

மே மாதம் நடைபெறவிருக்கும் தமிழக சட்டமன்றத் தேர்தல்களின் முடிவு அறிவிக்கப்படும் நாள்தான் ஜெயலலிதாவின் வாழ்க்கையில் அடுத்து நடக்கப் போகும் மறக்க முடியாத சம்பவமாக அமையும். அவர் தமிழகத்தின் முதல்வராக மீண்டும் தொடர்வாரா? அல்லது பதவி விலகுவாரா? என்பதை நிர்ணயிக்கப் போகும் நாள் அது!

அதே சமயத்தில் அதற்கு முன்பாக புதுடில்லி உச்ச நீதிமன்றத்தில் நடந்து கொண்டிருக்கும் அவரது சொத்துக் குவிப்பு வழக்கின் தீர்ப்பு வந்து விடும் என்றால் – அந்தத் தீர்ப்பு வழங்கப்படும் நாளே அவரது வாழ்க்கையின் 9வது முக்கிய சம்பவமாக அமைந்து விடும்!

-இரா.முத்தரசன்