கோலாலம்பூர் – மலேசியத் தமிழ்ப் பத்திரிக்கை உலகில் மற்றொரு புதிய நாளிதழ் “தினத்தந்தி” என்ற பெயரில் உதயமாகவிருக்கின்றது. இது குறித்த அதிகாரபூர்வத் தகவல்கள் இதுவரை வெளியிடப்படவில்லை என்றாலும், இந்தப் பத்திரிக்கையின் வெளியீடு குறித்த அறிவிப்புகள், வாட்ஸ்எப் போன்ற சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளப்பட்டு வருகின்றன.
மலேசியப் பத்திரிக்கை உலகில் நீண்ட காலம் பணியாற்றி அனுபவம் பெற்றுள்ள பி.ஆர்.இராஜன் ‘தினத்தந்தி’ பத்திரிக்கையின் ஆசிரியராக இருப்பார் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
பல்வேறு பத்திரிக்கைகளில் துணை ஆசிரியராகப் பணியாற்றி அனுபவம் பெற்றுள்ள பிஆர்.இராஜன், ஆகக் கடைசியாக “தினக்குரல்” பத்திரிக்கையின் ஆசிரியராகப் பணியாற்றினார். சில சட்டப் பிரச்சனைகளால் அந்தப் பத்திரிக்கை கடந்த ஆண்டில் நிறுத்தப்பட்டது.
தற்போது, மலேசியாவில் தமிழ் நேசன், மலேசிய நண்பன், மக்கள் ஓசை, தமிழ் மலர், தாய்மொழி என ஐந்து தமிழ்ப் பத்திரிக்கைகள் வெளிவந்து கொண்டிருக்கின்றன.
அறிவிக்கப்பட்டபடி, ‘தினத்தந்தி’ எதிர்வரும் மார்ச் 11ஆம் தேதி வெளிவருமானால், இது மலேசியாவில் ஆறாவது தமிழ்ப் பத்திரிக்கையாகத் திகழும்.