புதுடெல்லி – சொத்துக்குவிப்பு வழக்கில் முதல்வர் ஜெயலலிதாவுக்கு கர்நாடகா சிறப்பு நீதிமன்றம் அளித்த தீர்ப்பை நிலைநிறுத்த வேண்டும் என கர்நாடக அரசு உச்ச நீதிமன்றத்தில் வலியுறுத்தியுள்ளது.
செவ்வாய்க்கிழமை நடைபெற்ற வழக்கு விசாரணையின்போது கர்நாடக அரசின் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் துஷ்யந்த் தவே, சொத்துக்குவிப்பு விசாரணையை அம்மாநில உயர் நீதிமன்றம் மேலோட்டமாகவே விசாரித்ததாக அதிருப்தி வெளியிட்டார்.
சொத்துக்குவிப்பு வழக்கில் முதல்வர் ஜெயலலிதா விடுதலை செய்யப்பட்டதை எதிர்த்து கர்நாடகா அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளது. இந்த மனு மீதான இறுதி விசாரணை செவ்வாய்க்கிழமை தொடங்கியது.
இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட 4 பேரும் சதிச்செயலில் ஈடுபட்டதற்கான ஆதாரங்கள் உள்ளதாக குறிப்பிட்ட அவர், அவற்றை கர்நாடகா உயர்நீதிமன்றம் பரிசீலிக்கவில்லை என்றார்.
ஜெயலலிதாவின் சொத்து மதிப்பை கர்நாடகா உயர்நீதிமன்றம் மதிப்பீடு செய்ததில் அப்பட்டமான, வெளிப்படையான பிழைகள் இருப்பதாகக் கூறிய அவர், இந்த அம்சங்களால்தான் ஜெயலலிதா உள்ளிட்டோர் விடுதலை செய்யப்பட்டதாகத் தெரிவித்தார்.
“ஆகையால் ஜெயலலிதா உள்ளிட்டோரை விடுதலை செய்த கர்நாடகா உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பை ரத்து செய்து ஜெயலலிதா உள்ளிட்டோருக்கு சிறைத் தண்டனை விதித்த விசாரணை நீதிமன்றத்தின் தீர்ப்பை உச்சநீதிமன்றம் உறுதி செய்ய வேண்டும்” என்று துஷ்யந்த் தவே கர்நாடகா அரசுத் தரப்பின் சார்பில் தனது இறுதி வாதத்தை முன்வைத்தார்.
ஒத்திவைக்கக் கோரும் ஜெயலலிதாவின் மனு தள்ளுபடி
இதற்கிடையில் சொத்துக்குவிப்பு வழக்கின் மேல்முறையீட்டு மனு மீதான இறுதி விசாரணை செவ்வாய்க்கிழமை உச்ச நீதிமன்றத்தில் தொடங்குவதற்கு முன்பாக, இந்த வழக்கு விசாரணையை மேலும் ஒரு வார காலத்திற்கு ஒத்திவைக்க வேண்டும் என ஜெயலலிதா சார்பில் செய்யப்பட்டிருந்த மனு விசாரிக்கப்பட்டது.
செவ்வாய்க்கிழமை காலை ஜெயலலிதா தரப்பு மனுவை விசாரித்த நீதிபதிகள் அவரது கோரிக்கையை ஏற்க இயலாது என திட்டவட்டமாகத் தெரிவித்தனர். இதையடுத்து இறுதி வாதம் உடனடியாகத் தொடங்கும் என நீதிபதிகள் அறிவித்தனர்.
அதன் பேரில் கர்நாடகா அரசு சார்பில் வழக்கறிஞர் துஷ்யந்த் தவே தனது இறுதி வாதத்தை தொடங்கியுள்ளார். அவர் தமது வாதத்தை நிறைவு செய்ய 3 நாள் அவகாசம் கோரியுள்ளார்.