Home One Line P2 “விகடன் தடம்” உள்ளிட்ட விகடன் குழுமத்தின் சில இதழ்கள் நிறுத்தப்படுகின்றன

“விகடன் தடம்” உள்ளிட்ட விகடன் குழுமத்தின் சில இதழ்கள் நிறுத்தப்படுகின்றன

3086
0
SHARE
Ad
கலைஞரை அட்டைப் படமாகக் கொண்ட தடம் இதழ்

சென்னை – பத்திரிக்கைத் துறை, சினிமா, திரைப்பட இயக்கம், தயாரிப்பு என பல முனைகளிலும் சாதனை படைத்த அமரர் எஸ்.எஸ்.வாசன் அவர்களால் வாங்கப்பட்டு, பின்னர் அவரது புதுமையான கருத்துகளைப் புகுத்தியதாலும், கடுமையான உழைப்பாலும் உலகின் முன்னணி தமிழ் வார இதழாக இன்று வரை உலா வந்து கொண்டிருக்கும் இதழ் ஆனந்த விகடன்.

1926-ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட ஆனந்த விகடன் 93 ஆண்டுகளைக் கடந்து இன்றும் வார இதழாக வெற்றி நடைபோடுகின்றது. அதன் கருத்துகள் இன்றளவும், தமிழகத்தின் பொதுவெளியிலும், தமிழக அரசியலிலும் முக்கிய இடத்தை வகித்து அனைவராலும் கவனிக்கப்படுகின்றன.

தமிழகத்தில் இருந்து வெளியாகும், ஆனந்த விகடன், குமுதம் போன்ற இதழ்கள் உலகம் எங்கும் உள்ள தமிழர்களைச் சென்றடைந்து, தமிழைப் பரப்புவதிலும் வளர்ப்பதிலும் முன்னணி வகித்திருக்கின்றன. இன்றைக்கு இணையம் வழி தமிழ் இலக்கியம் உலகம் முழுவதும் பரவியிருந்தாலும், அந்தக் காலத்தில் இணையம் இல்லாத ஒரு காலகட்டத்தில் மலேசியா, சிங்கப்பூர் போன்ற நாடுகளில் தமிழகத்தின் இலக்கியங்களைப் பிரதிபலிக்கும் கண்ணாடியாக ஆனந்த விகடன் திகழ்ந்திருக்கிறது.

#TamilSchoolmychoice

நாளடைவில் இணையம் வழியாக தனது பதிப்புகளை உலகம் முழுக்க விரிவுபடுத்திய விகடன் குழுமம், துறைக்கொரு இதழாக தனது பதிப்புகளின் எண்ணிக்கையை விரிவுபடுத்தியது.

எனினும் தற்போது தான் வெளியிட்டு வரும் சில இதழ்களை நிறுத்துவதாக விகடன் குழுமம் அறிவித்திருக்கிறது.

தவிர்க்க முடியாத காரணங்களால் விகடன் வெளியீடான சுட்டி விகடன், விகடன் தடம், அவள் மணமகள், டாக்டர் விகடன் ஆகிய இதழ்கள் நிறுத்தப்படுவதாக விகடன் குழுமம் அறிவித்திருக்கிறது.

நிறுத்தப்படும் இதழ்களில் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டிய படைப்பு ‘விகடன் தடம்’ ஆகும். அதிகமான பக்கங்களில் அருமையான சிறுகதைகள், கட்டுரைகள், கவிதைகள், நேர்காணல்கள் என அற்புதமான, அழகான இலக்கியப் படைப்புகளோடு வெளிவந்த ‘விகடன் தடம்’ தமிழ் இலக்கியவாதிகளை மிகவும் கவர்ந்த மாத இதழாகும்.

சுட்டி விகடன் சிறுவர், சிறுமியர்களுக்காக வெளியிடப்படும் இதழாகும்.