கோலாலம்பூர் – இங்குள்ள பிரபல தங்கும் விடுதி ஒன்றில் வியாழக்கிழமை ஜனவரி 31-ஆம் நாள் தமிழ் பத்திரிகைகளின் ஆசிரியர்கள் மற்றும் ஊடகவியலாளர்களுக்கு மதிய விருந்துபசரிப்பு வழங்கியதோடு, அவர்களுடனான கலந்துரையாடலிலும் பிரதமர் துறை அமைச்சர் பொன்.வேதமூர்த்தி கலந்து கொண்டார்.
அமைச்சரானது முதல், தமிழ்ப் பத்திரிக்கையாளர்களுக்கு விருந்துபசரிப்பு வழங்கி கௌரவிக்க வேண்டும் என்பது தனது நோக்கமாக இருந்ததாகவும், இருப்பினும் அமைச்சர் பதவியின் பணிப்பளு, நேரப் பற்றாக்குறை, தமது அமைச்சை அண்மையக் காலமாக ஆட்கொண்ட சில சமூகப் பிரச்சனைகள் ஆகியவற்றின் காரணமாக, பத்திரிக்கையாளர்களுடனான தனது சந்திப்பு தாமதமானது என்று வேதமூர்த்தி கூறினார்.
பத்திரிக்கையாளர்களிடையே உரையாற்றிய வேதமூர்த்தி, ஹிண்ட்ராப் இயக்கத்தின் வழி தமது அணியினர் தொடக்கிய போராட்டம் 15 ஆண்டுகாலப் பயணத்தை அடைந்திருக்கும் இந்த வேளையில் அடுத்த கட்டமாக தாங்கள் ஓர் அரசியல் இயக்கமாக உருவெடுக்க வேண்டிய அவசியத்தையும், கட்டாயத்தையும் உணர்ந்திருப்பதாகவும் கூறினார்.
இளைஞர்கள், அரசியல் ஆர்வம் கொண்டவர்கள் போன்றவர்களை இணைத்துக் கொண்டு இந்திய சமூகத்தின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றும் களமாக தாம் அமைக்கவிருக்கும் மலேசிய அட்வான்ஸ்மெண்ட் பார்ட்டி எனப்படும் மலேசிய முன்னேற்றக் கட்சி அமையும் என்றும் தெரிவித்த வேதமூர்த்தி, மற்ற கட்சிகளில் இருந்து இந்தப் புதிய கட்சியில் சேரவிரும்புபவர்களை எவ்வாறு அரவணைப்பது என்பது குறித்து தாம் ஆலோசித்து வருவதாகவும் தெரிவித்தார்.
இப்போதைக்கு, தமக்கு அமைச்சர் பதவி வழங்கப்பட்டிருந்தாலும், எதிர்காலத்தில் தமக்குப் பின்னர் மற்றவர்களுக்கும் இதுபோன்று அமைச்சர் பதவி வழங்கப்படும் என்பது நிச்சயமில்லை என்று சுட்டிக் காட்டிய வேதமூர்த்தி, ஓர் அரசியல் கட்சியின் மூலமாகத்தான் தமது போராட்டம் இன்னும் சிறக்க முடியும் என்ற முடிவுக்குத் தாம் வந்திருப்பதாகவும் குறிப்பிட்டார்.
தனது உரைக்குப் பின்னர் வந்திருந்த ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகள், பிரச்சனைகளுக்கு, வேதமூர்த்தி பதிலளித்தார். தனிப்பட்ட முறையிலும் பலரோடு சந்திப்புகள் நடத்தி அவர்களின் கருத்துகளை அவர் கேட்டறிந்தார்.