கோலாலம்பூர் – இன்று தனது வலைப்பதிவு குறித்து காவல் துறையினர் நேரடியாக விசாரணை நடத்தியுள்ள நிலையில், தான் எதற்கும் தயார் என்றும், சிறை செல்லவும் அஞ்சவில்லை என்றும் கூறியுள்ள முன்னாள் பிரதமர் துன் மகாதீர் முகமட், நஜிப்புக்கு எதிரான தனது போராட்டத்தில் பின்வாங்கப் போவதில்லை என்றும் சூளுரைத்துள்ளார்.
“ஒரு போராட்டத்திற்காக, நீங்கள் தலையைக் கொடுத்தால், உங்களுக்கு கழுத்து வெட்டப்படும் என்பதை நீங்கள் உணர வேண்டும். அதற்கும் தயாராக இருக்க வேண்டும். நான் சிறைக்கு செல்லவும் தயாராக இருக்கின்றேன். எனது இறுதிக் காலம் சிறையில்தான் கழியும் என்றால் அப்படியே இருக்கட்டும்” என்றும் மகாதீர் உறுதியுடன் கூறியுள்ளார்.
அரசாங்கத் தலைமை வழக்கறிஞர் அபாண்டி அலி குறித்த தனது வலைப் பதிவு ஒன்று தொடர்பாக காவல் துறையினர் இன்று தன்னிடம் கேள்விகள் தொடுத்தனர் என்றும் கூறிய மகாதீர், அரசாங்கத் தலைமை வழக்கறிஞர் நஜிப்பைப் பாதுகாக்கிறார் என்ற தனது குற்றச்சாட்டுக்கு நீதிமன்றத்தில்தான் பதில் சொல்வேன் என்றும் தெரிவித்துள்ளார்.
“நான் நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்டால், அப்போதுதான் நீதிமன்றத்தில் எனது சார்பான உண்மைகளைச் சொல்வேன். அதற்கு ஏற்ப எனது சாட்சியங்களையும் சமர்ப்பிப்பேன்” என்றும் மகாதீர் தெளிவாகக் கூறியுள்ளார்.
“அன்வாருடன் ஒரே அறையில்….”
முன்னாள் துணைப் பிரதமர் அன்வார் இப்ராகிம் போன்று தானும் அதே சுங்கை பூலோ சிறையில் அடைபட வேண்டி வருமா என்ற கேள்விக்கு “யார் கண்டது! நாங்கள் இருவரும் ஒரே அறையைப் பகிர்ந்து கொள்ளவும் நேரலாம்” என சிரித்துக் கொண்டே கூறினார்.
கடந்த பிப்ரவரி 2ஆம் தேதி தனது வலைப் பதிவில் மகாதீர் வெளியிட்ட கட்டுரைக்காக அவரைக் காவல் துறை விசாரித்து வருகின்றது.
இன்று தன்னிடம் கேட்கப்பட்ட கேள்விகள் தன்னை அச்சுறுத்தும் பாணியில் இருந்ததாகக் குறிப்பிட்ட மகாதீர், தனக்கிருக்கும் பேச்சு சுதந்திரத்தை நிலை நிறுத்த தான் நீதிமன்றத்திற்கு உள்ளேயும், வெளியேயும் தொடர்ந்து, தான் எழுதியது சரிதான் என்ற நிலைப்பாட்டில் உறுதியுடன் இருந்து வரப் போவதாகவும் அறிவித்துள்ளார்.