சென்னை-கடந்த இருபத்து ஐந்து ஆண்டுகளாக சிறைவாசம் அனுபவித்து வரும் ராஜீவ் கொலை வழக்கு குற்றவாளி நளினி, முதன் முறையாக பேட்டி அளித்துள்ளார். இந்த வழக்கில் தண்டனை பெற்றுள்ள தன்னையும் இதர ஆறு பேரையும் தமிழக முதல்வர் ஜெயலலிதா விடுதலை செய்வார் எனத் தாம் நம்புவதாக அவர் கூறியுள்ளார்.
கடந்த 25 ஆண்டுகளில் நளினி (படம்) ஒருமுறை கூட ஊடகங்களுக்குப் பேட்டி அளித்ததில்லை. அதேபோல் முதன் முறையாக அவர் புதன்கிழமை பரோலில் சிறையை விட்டு வெளியே வந்தார்.
சென்னையில் நடைபெற்ற தனது தந்தையின் இறுதிச்சடங்கு நிகழ்வில் கலந்து கொண்ட அவர், பின்னர் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது, ராஜீவ் கொலை வழக்கில் சிக்கி சிறைவாசம் அனுபவித்து வரும் ஏழு பேருமே அப்பாவிகள் என்று அவர் கூறினார்.
“நாங்கள் எந்தக் குற்றமும் செய்யாதவர்கள். இதை நம்புவதும் நம்பாமல் இருப்பதும் உங்கள் விருப்பம். நான், என் கணவர் மற்றும் 5 சகோதரர்கள் சிறையில் இருக்கிறோம்.
எங்களில் ஒருவரது கை கூட, பிறரது ரத்தத்தால் நனைக்கப்பட்டது அல்ல. ராஜிவ் காந்தி குள்ளமா, கருப்பா, சிவப்பா என்று கூட தெரியாத அப்பாவிகள் நாங்கள்” என்று நளினி கூறியுள்ளார்.
தனது மகளுக்கு தற்போது இருபத்து நான்கு வயதாகிவிட்டதாகக் குறிப்பிட்ட அவர், தன் மகள் தங்களை விட்டு ஏன் பிரிந்திருக்க வேண்டும்? என ஆதங்கத்துடனும் வேதனையுடனும் கேள்வி எழுப்பினார்.
தமிழக முதல்வர் தங்களை விடுதலை செய்வார் என்றும் அந்த நம்பிக்கையுடன் சிறையில் வாழ்ந்து வருவதாகவும் நளினி மேலும் தெரிவித்தார்.