சென்னை – நளினி மீதான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் இருப்பதால், அவரை முன்கூட்டியே விடுவிக்க முடியாது என தமிழக அரசு, சென்னை உயர்நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.
ராஜீவ் காந்தி படுகொலை வழக்கில், கடந்த 20 ஆண்டுகளாக சிறையில் இருக்கும் தன்னை மனிதாபிமான அடிப்படையில் முன்கூட்டியே விடுதலை செய்ய வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றத்தில் நளினி சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
அம்மனுவை, கடந்த ஜூன் 15-ம் தேதி, விசாரணை செய்த சென்னை உயர்நீதிமன்றம், வரும் ஜூன் 27-ம் தேதிக்குள் அதற்கு பதிலளிக்க வேண்டும் என உள்துறை செயலாளருக்கு உத்தரவிட்டிருந்தது.
இந்நிலையில், அதற்குப் பதிலளித்துள்ள தமிழக அரசின் உள்துறை துணை செயலாளர் டேனியல் தேவஆசீர்வாதம், நளினியை மனிதாபிமான அடிப்படையில் விடுவிக்க முடியாது. காரணம் அவரது வழக்கு உச்சநீதிமன்றத்தில் தொடர்வதால், உச்சநீதிமன்றம் உத்தவளிக்கும் வரை தமிழக அரசால் எந்த முடிவும் எடுக்க முடியாது என்று தெரிவித்துள்ளார்.
இதையடுத்து வழக்கு விசாரணை வரும் 27ம் தேதிக்கு உயர் நீதிமன்றம் ஒத்திவைத்தது.