Home Featured தமிழ் நாடு “கலைஞருக்கு வணக்கம் சொன்னதற்காக ஒரு கட்சியில் இருந்து நீக்கப்பட்டேன்” – எஸ்.வி.சேகருடன் பிரத்யேக நேர்காணல்!

“கலைஞருக்கு வணக்கம் சொன்னதற்காக ஒரு கட்சியில் இருந்து நீக்கப்பட்டேன்” – எஸ்.வி.சேகருடன் பிரத்யேக நேர்காணல்!

1041
0
SHARE
Ad

IMG-20160224-WA0019கோலாலம்பூர் – நடிகர், இயக்குநர், தயாரிப்பாளர், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் என பன்முகங்களைக் கொண்டவர் எஸ்.வி.சேகர். அதிமுக-வில் இணைந்து, 2006-ல் மயிலாப்பூர் சட்டமன்றத்தில் வெற்றி பெற்று, எம்எல்ஏ-வாக தீவிரமாக இயங்கி வந்தவர் திடீரென அக்கட்சியில் இருந்து விலகினார்.

பின்னர் காங்கிரசில் சில காலம் இருந்தார். அதிலிருந்தும் விலகிய பின்னர் எந்தக் கட்சியிலும் சேராமல் இருந்த அவர், இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு குஜராத்தில் நரேந்திரமோடியைச் சந்தித்து அவரது ஆசியுடன் பாஜக-வில் தன்னை இணைத்துக் கொண்டார்.

தமிழ்நாட்டில் தற்போது சட்டமன்ற தேர்தல் ஜூரம் வந்துவிட்டது. விஜயகாந்த் எதிர்கட்சித் தலைவர் பதவியை இழந்தார், சரத்குமார் அதிமுக-வில் இருந்து விலகினார் என தமிழக சட்டமன்ற தேர்தலை முன்வைத்து தினமும் பரபரப்பான தகவல்கள் வந்து கொண்டிருக்கும் இவ்வேளையில், தனிப்பட்ட அலுவல் காரணமாக தற்போது கோலாலம்பூர் வந்திருக்கும் எஸ்.வி.சேகர் நேற்று செய்தியாளர்களைச் சந்தித்தார்.

#TamilSchoolmychoice

அச்சந்திப்பில் அவருகே உரிய ‘கலகல’ப்பான பாணியில் சினிமாவோடு, தமிழக அரசியல் பற்றியும் பேசினார்.

எதிர்வரும் தமிழக சட்டமன்ற தேர்தலில் எந்தக் கட்சி ஆட்சியைப் பிடிக்கும் என செய்தியாளர் ஒருவர் கேட்க, “யார் அதிக ஓட்டு வாங்குவார்களோ அவர்கள்” என்று முதல் அரசியல் கேள்வியே நகைச்சுவையாகப் பதிலளித்தார்.

மேலும் அவர் கூறுகையில், “சார்.. இது அரசியல் கூட்டணி. கூட்டணியில் ஓட்டு எண்ணிக்கை தான் கணக்கு. ஒரு ஓட்டில் ஜெயிச்சாலும் ஜெயிச்சது தான். ஒரு ஓட்டில் தோத்தாலும் தோத்தது தான். காரண காரியங்கள் எல்லாம் அவசியமே இல்லை. அதற்குப் பிறகு எல்லாருமே சொல்லுவாங்க.. “அன்னிக்கே சொன்னேன்… இந்த எலக்ட்ரானிக் பட்டன அழுத்தும் போது தில்லுமுல்லு பண்ணும்னு” அப்படிம்பாங்க. அப்புறம் “இந்தத் தொகுதியில் இல்லாதவங்களெல்லாம் ஓட்டுப் போட்டுட்டாங்கன்னு” சொல்லுவாங்க. இது எல்லா இடத்துலையும் இருக்குற விசயம் தான்”

“ஆனா இதையெல்லாம் தாண்டி, இதுவரைக்கும் எம்ஜிஆருக்குப் பிறகு யாரும் தொடர்ந்து ஆட்சியில் இல்லை. ஆகையால இப்போதைக்கு எதுவும் சொல்ல முடியாது. ஆனால் பாரதிய ஜனதா ஆட்சியை அமைக்கக் கூடிய ஒரு முக்கியமான எடத்துல இருக்கும்” என்றார்.

செல்லியல்: தேர்தல் பிரச்சாரத்திற்கு இந்த முறை சோஷியல் மீடியா (நட்பு ஊடகங்கள்) பெரிதும் பயன்படும் போல் தெரிகிறதே?

எஸ்.வி.சேகர்: சோஷியல் மீடியா ஓரளவுக்கு தான் சார் பயன்படும். ஏன்னா.. சோஷியல் மீடியாவில் இருப்பவர்கள் மலேசியாவில் இருப்பார்கள், தென்னாப்பிரிக்காவில் கூட இருப்பார்கள். ஆனால் அவர்களுக்கு தமிழ்நாட்டில் ஓட்டு இருக்காது. அதனால் ஓட்டு இல்லாதவர்கள் என்ன வேண்டுமென்றாலும் பேசலாம். ஆனால் அது பலன் அளிக்காது.”

“யாரு ஓட்டுப் போடுவாங்கன்னா காலையில் கடகடனு எழுந்து குளிச்சிட்டு கியூல நின்னு ஓட்டுப் போடுறவங்க தான் தமிழ்நாட்டுல ஜாஸ்தி. ரொம்ப படிச்சவன் வெயிலு அடங்கட்டும் நாலு மணிக்கு மேல போய் ஓட்டு போடலாம்பாங்க.. ஆனா அவங்க போறதுக்குள்ள அவங்க ஓட்ட யாராவது போட்டுட்டு போயிடுவாங்க. தவிர அவங்க ஓட்டு அவங்களுக்கு இருக்கான்னு பார்க்க கூட நேரம் இல்லாம ஆபீஸ் போவாங்க. ஓட்டு போடுவது நமது கடமை. அப்ப தான் நமது உரிமைகளை அரசாங்கத்திடம் கேட்க முடியும்.”

“கல்யாணத்துக்கு போறோம் சார். ஒரு நானூறு ரூபாய் மொய் எழுதிட்டு முக்கால்மணி நேரம் கியுல நின்னு சாப்பிட்டு வர்றோம். அதையே ஏன் நமது உரிமையை பயன்படுத்தி ஒரு தலைவரைத் தேர்ந்தெடுக்க ஒரு அரைநாள் லீவு எடுத்து ஓட்டுப் போட போவதில்லை? நமக்கென்று ஒரு அடையாள அட்டையை வாங்கி வைத்து இதையெல்லாம் ஏன் பண்ணக்கூடாது? அந்த விசயங்களில் எல்லாம் மாற்றங்கள் கொண்டு வர வேண்டும்.”

செல்லியல்: திமுக-வின் ‘என்னம்ம்ம்மா இப்படி பண்றீங்களேம்மா’ ஹேஸ்டேக், நாளிதழ்களில் முதல் பக்க விளம்பரம்?

எஸ்.வி.சேகர்: கட்சி விளம்பரம் தாங்க.. ரெண்டு விசயம் இருக்குங்க. டென்னிஸ் மேட்ச் பார்த்திருப்பீங்க. நாம ஏஸ் போட்டு ஜெயிக்கிறது ஒன்னு. எதிராளியோட தப்புல ஜெயிக்கறது ஒன்னு. அதான் மேட்ச். அது போல தான் இதுவும். கவனத்தை திசை திருப்பும் உத்தி தான்.

செல்லியல்: சோஷியல் மீடியாவை பிரதமர் மோடி அவர்கள் கையாண்ட விதம் வேறு மாதிரியாக இருந்ததே?

எஸ்.வி.சேகர்: மோடி வித்தியாசமான ஒரு அரசியல்வாதி. அவர் கீழ்த்தரமான அரசியல் பண்றதுக்கெல்லாம் வரவேயில்லை. மோடி எனக்கு ஆறு வருடங்களாகப் பழக்கம். சோ தான் எனக்கு அறிமுகம் செய்து வைத்தார். அவருடைய நோக்கம் பார்வை எல்லாமே வேற. ஆனால் எல்லாரும் வேற மாதிரி இருக்குறதுனால தான் மோடிக்கு இவ்வளவு பெரிய பெயர். எல்லாரும் மோடி மாதிரி இருந்திட முடியாது.

IMG-20160224-WA0021செல்லியல்: இன்றைய சூழலில் தமிழக அரசியலில் ஒரு கண்ணியமே இல்லாதது போல் உள்ளதே?

எஸ்.வி.சேகர்: கண்ணியமே இல்லங்க. என்னை ஒரு கட்சியில் இருந்து தூக்கினதுக்குக் காரணமே கலைஞருக்கு வணக்கம் சொன்னது தான். தயாநிதி மாறனோட ஒரே மேடையில நின்னது தான். அதுக்காக ராஜாத்தியம்மா கோயிலுக்கு போனா அந்தக் கோயிலுக்கு நான் போமாட்டேன்னு திராவிடக் கழகத்துல சேர்ந்திட முடியுமா? கட்சி வேற கொள்கை வேற. நான் என்ன 24 மணிநேரத்துலையும் கட்சி மாஸ்க்கையா (முகமூடி) போட்டுட்டு அலைய முடியும். வீட்டுக்கு எம்எல்ஏ-வா போன என் பொண்டாட்டி சாப்பாடு போடுவாளா? புருஷனா போனா தான் சாப்பாடு போடுவா. எல்லாருக்கும் பல முகங்கள் உண்டு.”

“என் மனைவியிடம் புருஷனாகவும், பெற்றோரிடம் பிள்ளையாகவும், பிள்ளைகளிடம் தகப்பனாகவும் தான் இருக்க முடியும். அதாவது சம்பாதிப்பதை மட்டுமே குறிக்கோளாகக் கொண்டவர்களுக்கு தலைவரோட கால் எப்போதும் தெரிந்து கொண்டே இருக்கும். எப்ப விழலாம் எப்ப விழலாம்னு அவங்க பார்த்துக் கொண்டிருப்பார்கள். அதிமுக-வில் நாலு வருஷம் இருந்தேனே ஜெயலலிதாவை 35 முறை சந்தித்திருக்கேன் ஒருதடவை கூட காலில் விழவில்லையே. எதுக்கு விழணும்? நான் யாரா இருந்தாலும் கண்ணப் பார்த்து தான் பேசுவேன். நம்மக்கிட்ட என்ன தப்பு இருக்கு. கலைஞர் என்னை கையைப் பிடித்து தான் பேசுவார். பெருமை தான் எனக்கு. கலைஞர் என் வீட்டிற்கு வந்து எம் பொண்ணு கல்யாணத்துக்கு அட்சதை போட்டார். பையன் கல்யாணத்திற்கு வந்து அட்சதை போட்டார். என் 60-ம் கல்யாணத்திற்கு வந்து அட்சதை போட்டார். காலில் விழுந்து கும்பிட்டேன். அது வந்து என்னை விட வயது மூத்தவர் ஒருவர் எங்களை ஆசீர்வதிக்கும் போது நான் செய்யும் பதில் மரியாதை. ஆனால் எனக்கு சீட்டு வேணும்னு என்னிக்குமே காலில் விழ மாட்டேன்.”

“எம்எல்ஏ பதவிக்காக நான் வாங்கிய சம்பளம் எனது நாடகத்தின் இடைவேளை வரை நான் வாங்கிய சம்பளம். இப்படி இருக்கும் போது நான் எதற்கு அவ்வளவு கஷ்டப்பட வேண்டும். இன்னைக்கு இந்திய சரித்திரத்துல தமிழ்நாட்டின் 13-வது சட்டமன்றத்தில் இருக்கும் எனது பெயரை யாருமே எடுக்க முடியாது. அதுவும் ரெண்டு சட்டமன்றத்துலையும் தனியாக உட்கார்ந்து எந்தக் கட்சியையும் சாராத எம்எல்ஏ-வாக இருந்திருக்கேன். ஆனால் கட்சியை விட்டு தூக்கிவிட்டால் உடனே அவர்களை அசிங்கமாகப் பேசுவது போன்றவற்றை செய்ததே இல்லை. நான் ஜெயலலிதா அழைத்த போது தான் அதிமுக-வில் சேர்ந்தேன். ராகுல் அழைத்த போது தான் காங்கிரசில் சேர்ந்தேன். மோடி அழைத்த போது தான் பாரதிய ஜனதாவில் சேர்ந்தேன். நான் வட்டச்செயலாளர் வண்டுமுருகன் மாதிரியான ஆள் கிடையாது. அது நிறைய பேருக்குப் பிடிக்காது. தனிமனித துதி பாடணும்னு நெனக்கிறாங்க பாருங்க அவங்களுக்கு நான் சரிப்பட்டு வரமாட்டேன். ஒரு கட்சிக் கூட்டத்திற்கு 3 லட்சம் செலவழிச்சா தான் ஒரு நானூறு பேராவது வந்து உட்காருவாங்க. ஆனா என்னோட நாடகத்திற்கு 2000 ரூபாய்க்கு டிக்கெட் வாங்கிட்டு எல்லா கட்சிக்காரங்களும் வந்து உட்காருவாங்க அது தான் எனக்குப் பெருமை.”

செல்லியல்: ரஜினிகாந்த் அவர்களை பாஜக-வில் இணைக்க முயற்சிகள் நடப்பதாக பேச்சுகள் நிலவுகிறதே?

எஸ்.வி.சேகர்: எனக்குத் தெரிஞ்சு ரஜினி அரசியலுக்கு வரமாட்டார். ஏன்னா ரஜினியின் வாழ்க்கை முறை வேற. அவருடைய ஆன்மீகத் தேடலும், அரசியலும் வேறு. இது என்னுடைய கருத்து. அவர் எல்லாருக்கும் நல்லவராக இருக்க வேண்டும் என்று நினைக்கலாம். கலைஞருக்கு நெருக்கமானவர், ஜெயலலிதாவிற்கு நெருக்கமானவர், மோடிக்கும் நெருக்கமானவர். அவர் தனியாக ஒன்னு ஆரம்பித்தால் எல்லோருக்கும் எதிரியாகக் கூடிய வாய்ப்பும் இருக்கிறது. ரஜினி என்ன நினைக்கிறார் என்று சொல்லமுடியாது. ரஜினி என்ன செய்வார் என்று வேண்டுமானால் சொல்லலாம். ஆனால் அதை அவர் செய்வாரா என்று எனக்குத் தெரியாது.

இப்படியாக பேச்சு அப்படியே விஜயகாந்த் எதிர்கட்சி தலைவர் பதவியை இழந்தது பற்றி திரும்ப..

IMG-20160224-WA0020எஸ்.வி.சேகர் சொல்கிறார்:-

“வேண்டாம் என்று தூக்கி வீசிய சட்டையை யாரு எடுத்துக் கொண்டு போனா தான் என்ன சார். அவரே சிவப்பு லைட்டு வச்ச கார்ல போறதே இல்லயே. ஆனால் அவருக்கு இந்தத் தேர்தலில் ஒரு முக்கியத்துவம் உள்ளது. அதனால தான் அவர் ஒரு தவிர்க்க முடியாது சக்தியா இருக்காரு. கோயம்பேடுக்கு கறிகாய் வாங்கப் போனாங்க. இப்ப விஜயகாந்த பார்க்கப் போறாங்க. அவரைப் பார்த்துட்டு வர்ற வழியில வேணா கறிகாய் வாங்கிட்டு வர்றாங்க. என்னைப் பொறுத்தவரைக்கும் விஜயகாந்த் ஒரு நேர்மையான அரசியல்வாதி. நல்ல ஆட்சி வரணும்னு விரும்புறாங்க. அவரை சோஷியல் மீடியாவுல கேலி பேசுறது எல்லாம் நாகரீகமான ஒரு செயலே அல்ல. அவர் தண்ணியடிக்கிறத திடீர்னு நிறுத்தும் போது அதற்கு உண்டான சில பக்க விளைவுகள் வரும். ஒருவரின் உடல் உபாதைகளையும், உடல் கோளாறுகளையும் கேலி செய்பவர்கள் தான் மட்டமானவர்கள். அதனால விஜயகாந்தை கேலி செய்வது ஒரு தவறுதலான விசயம். அந்தக் கேலியை செய்பவர்கள் தில்லு இருந்தா அவர் முன் நேரடியாக கேலி செய்யச் சொல்லுங்கள் பார்க்கலாம்.

இப்படியாக அவருடனான கலந்துரையாடல் நடைபெற்றது.

செய்தி: ஃபீனிக்ஸ்தாசன்

படங்கள் – யோகி சந்துரு (நன்றி)