கோலாலம்பூர்-அல்தான் துயா கொலை வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள சைருல் அசார் உமாரை, ஆஸ்திரேலியாவில் இருந்து மலேசியாவுக்கு நாடு கடத்தும் விஷயத்தில் மலேசிய அரசு ஆர்வம் காட்டாதது ஏன்? என நாடாளுமன்ற உறுப்பினர் ராம்கர்ப்பால் சிங் கேள்வி எழுப்பியுள்ளார்.
சைருலை நாடு கடத்துவதற்கான நடவடிக்கைகளில் ஈடுபட்டிருப்பதாக நாடாளுமன்றத்தில் உள்துறை அமைச்சு எழுத்துப்பூர்வமான பதிலை அளித்துள்ளது என்று குறிப்பிட்ட அவர், அவ்வாறு தெரிவித்து ஓராண்டு நிறைவடைந்தும், இவ்விஷயத்தில் எந்தவித முன்னேற்றமும் இல்லை என அறிக்கை ஒன்றில் சுட்டிக் காட்டியுள்ளார்.
“சைருலை நாடு கடத்துவதற்கான நடவடிக்கையை மலேசியா தொடங்கியுள்ளதா என்பதே தெரியவில்லை. இது கவலை அளிக்கிறது. இது தொடர்பாக ஆஸ்திரேலிய மற்றும் மலேசிய அட்டர்னி ஜெனரல் அலுவலகங்களுக்கு நான் கடிதம் எழுதியுள்ளேன். எனினும் இதுவரை எந்தவித பதிலும் கிடைக்கவில்லை. எனது விசாரிப்புக்கு உரிய பதில் கிடைக்காத நிலையில், சைருலை நாடு கடத்துவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு இருப்பதாக உள்துறை அமைச்சு தெரிவித்ததற்கு நேர்மாறாக, அப்படியொரு முயற்சி மேற்கொள்ளப்படவே இல்லை என்று கருதுவதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளன” என்றும் அவர் கூறினார்.
“சைருலை நாடு கடத்துவது தொடர்பில் அரசாங்கம் அச்சத்தில் இருப்பதாகவும் எண்ணத் தோன்றுகிறது. இதற்கன காரணங்கள் அரசுக்கு மட்டுமே தெரியும்” என்று தமது அறிக்கையில் ராம்கர்ப்பால் சிங் மேலும் கூறியுள்ளார்.