Home Featured தமிழ் நாடு ‘பிரியங்காவுடனான சந்திப்பு’ – சுயசரிதையில் நளினி விளக்கம்!

‘பிரியங்காவுடனான சந்திப்பு’ – சுயசரிதையில் நளினி விளக்கம்!

278
0
SHARE

nalini84-600சென்னை – முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி படுகொலை வழக்கில், கடந்த 25 ஆண்டுகளாக சிறைத் தண்டனை அனுபவித்து வரும் நளினி எழுதிய, ‘ராஜிவ் கொலையில் மறைக்கப்பட்ட உண்மைகளும், பிரியங்கா சந்திப்பும்’ என்ற சுயசரிதை நூல் நேற்று வெள்ளிக்கிழமை சென்னையில் வெளியிடப்பட்டது.

மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, விடுதலைச் சிறுத்தைக் கட்சித் தலைவர் திருமாவளவன், நளினியின் தாயார் ஆகியோர் அப்புத்தகத்தைப் பெற்றுக் கொண்டனர்.

அப்புத்தகத்தில், கடந்த 2008-ம் தேதி, ராஜீவ் காந்தியின் மகள் பிரியங்கா காந்தி, சிறையில் தன்னை சந்தித்தது குறித்து நளினி விவரித்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-

“19.3.2008 அன்று காலை 11 மணிக்கு சிறை ஊழியர்கள் மற்றும் அதிகாரிகள் பரபரப்பாக இங்கும் அங்கும் ஓடிக் கொண்டிருந்தனர். வெளியில் இருந்த கைதிகள் அனைவரையும் உடனடியாக அவரவர் அறைக்கு செல்லும்படி கூறப்பட்டது.”

“ஆனால், நான் தனிமைச் சிறையில் அடைக்கப்பட்டு இருந்ததால் என்னிடம் யாரும் எதுவும் கூறவில்லை. அப்போது, என் அறைக்குள் நுழைந்த ஒருவர் என் முன்னே இருந்த நாற்காலியில் அமர்ந்தார். அது எனக்கு குழப்பத்தையும், பயத்தையும் ஏற்படுத்தியது.”

“அவர் ராஜீவ் காந்தியின் மகள் பிரியங்கா காந்தி என்பது உணர்ந்ததும் எனக்கு நாடி நரம்புகள் தளர்ந்து போய்விட்டன. அதிர்ச்சியில் சிலை போல் நின்றிருந்தேன்.”

“அவர் என்னைப் பார்த்து ஏன் அப்படி செய்தீர்கள்? என் தந்தை மிகவும் மென்மையானர், நல்லவர், எதுவாக இருந்தாலும் பேசித் தீர்த்துக் கொண்டிருக்கலாமே? எனக் கேட்டார். அப்போது அவரது கண்களில் கண்ணீர் குளம் போல் தேங்கியிருந்தது.”

“அந்தக் கண்ணீரை நான் எதிர்பார்க்கவில்லை. எனக்கு எதுவும் தெரியாது மேடம். நான் யாருக்கும் தீங்கு நினைக்காதவள். என் சூழ்நிலை இப்படி என்னை குற்றவாளியாக மாற்றிவிட்டது. என்னை தவறாக நினைக்காதீர்கள் என்று கதறி அழுதேன்.”

“ஆனால் அவர் அழுது கொண்டே இருந்தார். என்னால் அதை தாங்கிக் கொள்ளவே முடியவில்லை. ஒரு கட்டத்தில், என்னைக் குற்றவாளி என்று நீங்கள் நம்பினால், நான் உங்கள் முன்னால் இப்போதே உயிரை விட்டு விடுகிறேன் என்று கூறினேன்.”

“அவரது பார்வையில் நான் குற்றவாளி. என்னுடைய பார்வையில் அவர் பாதிக்கப்பட்ட அப்பாவி. அப்போது நடந்த அனைத்தையும் அவரிடம் கூறினேன். என் கணவர் மற்றும் மற்றவர்கள் பக்கமும் உள்ள நியாத்தை எடுத்துக் கூறினேன்.”

“அதனால் அவர் கோபம் அடைந்தார். உன்னையும், உன் கணவர் பற்றியும் பேசுவதில் ஒரு நியாயம் உண்டு. மற்றவர்களை பற்றி ஏன் பேசுகிறாய்? அவர்கள் மீது உனக்கென்ன அக்கறை? என்று கோபமாக கேட்டார். அதை நான் எதிர்பாக்கவில்லை.”

“அவர்கள் அனைவரும் அப்பாவி என்று சொல்ல முயன்ற போது, “அப்படியெனில் நீங்கள் அனைவரும் நிரபராதிகளா? உங்கள் யாருக்கும் இதில் தொடர்பே இல்லையே? விசாரணை, சிபிஐ சாட்சிகள், ஆவணங்கள், தீர்ப்புகள் அனைத்துமே பொய்யா?” எனக் கோபமாக கேட்டார்.”

“இதனால் நான் ஸ்தம்பித்து நின்றேன். அனைத்துமே ஜோடிக்கப்பட்டவை என்பதை அவருக்கு எப்படி புரிய வைப்பேன்?. அப்படிச் சொன்னால் அவரது குடும்பம் ஏமாற்றப்பட்டிருக்கிறது என்பதை தெரிந்தால், அதை அவர் ஏற்பது சிரமம் என்று நினைத்து அமைதியாக இருந்தேன்.”

“75 நிமிடங்களில் இருந்து 85 நிமிடங்கள் எங்கள் உரையாடல் நீண்டது. நான் சொன்ன விளக்கத்தை எல்லாம் அமைதியாக கேட்டார். முகத்தில் அதிருப்தி, வெறுப்பு, ஆச்சர்யம், வியப்பு ஆகிய உணர்வுகள் அவரிடம் வெளிப்பட்டன.”

“இந்த வழக்கு விசாரணையே ஒட்டு மொத்தமாக தவறு என்று நான் கூறியதை, சோகத்தில் இருக்கும் அவரின் மனம் ஏற்கத் தயாராக இல்லை. அந்த நிராகரிப்பு கோபமாக வெளிப்பட்டது. அந்த கோபம் எனக்கு பயத்தை ஏற்படுத்தியால் நான் அமைதியாக இருந்தேன்” என்று நளினி அப்புத்தகத்தில் தெரிவித்துள்ளார்.

 

Comments