கடந்த ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 1.50 மணியளவில் பாங்காக்கில் இருந்து மணிலா நோக்கிப் புறப்பட வேண்டிய பிலிப்பைன்ஸ் ஏர்லைன்ஸ் விமானம் பிஆர் -371, தொழில்நுட்பக் கோளாறு காரணமாக மாலை 5 மணியளவில் தான் புறப்பட்டது.
அதுவரையில், பயணிகளோடு அவ்விமானம் விமான நிலையத்திலேயே நின்றுள்ளது. அதோடு விமானத்தில் ஒரே ஒரு குளிர்சாதனப் பெட்டி தான் வேலை செய்துள்ளது. இதனால் ஏற்பட்ட கடும் வெப்பம் காரணமாக சில பயணிகள் தங்களை விமானத்தில் இருந்து இறக்கி விடும்படி கேட்டுள்ளனர்.
ஆனால், விமானப் பணியாளர்கள் அதை காதில் வாங்கிக் கொள்ளாமல் பயணிகளை அமர வைப்பதிலேயே முனைப்பு காட்டியுள்ளனர்.
இந்நிலையில், சில பயணிகள் கூச்சல் போடவே, அங்கு வந்த விமானி கேப்டன் பிலெமோன் தாக்கான், உங்களது உயிரை விட எனது உயிர் தான் எனக்கு மிகவும் முக்கியம் என்று பயணிகளிடம் கூறியுள்ளார்.
விமானியே இப்படி கூறியதால், பயணிகள் அனைவரும் கதிகலங்கிப் போயுள்ளனர். விமானத்தை விட்டு கீழேயும் இறங்க வழியில்லாமல், வியர்வையில் சுமார் 3 மணி நேரம் அவதிப்பட்டதோடு, மணிலா போய் சேரும் வரை கேப்டனின் பொறுப்பில்லாத பதிலை எண்ணி அச்சமடைந்துள்ளனர்.
30 ஆண்டுகளுக்கும் மேலாக விமானியாகப் பணியாற்றி வரும் தாக்கானின், பொறுப்பில்லாத பதிலை அறிந்து அவருக்கு எதிராக விசாரணை மேற்கொண்டு வருகின்றது பிலிப்பைன்ஸ் ஏர்லைன்ஸ் நிறுவனம்.