Home Featured கலையுலகம் திரைவிமர்சனம்: கணிதன் – அரசாங்கத்திற்கே சவாலான பிரச்சனையை ‘தனி ஒருவனாக’ அழிக்கிறார் ஹீரோ!

திரைவிமர்சனம்: கணிதன் – அரசாங்கத்திற்கே சவாலான பிரச்சனையை ‘தனி ஒருவனாக’ அழிக்கிறார் ஹீரோ!

869
0
SHARE
Ad

CcHFhuFUkAAFP6Iகோலாலம்பூர் – போலி சான்றிதழ் தயாரிப்பு தான் படத்தின் மையக்கரு.. அந்த போலி சான்றிதழ் தயாரிக்கும் கும்பலின் மோசடியில் பலிகடாவாகிறார் ஸ்கை டிவி நிருபர் கௌதம் (அதர்வா முரளி).

அதிலிருந்து மீளுவதற்கான வழியைத் தேடும் அவர், அப்படியே அந்தக் கும்பலையும், அவர்களது சதிச் செயலையும் தனி ஆளாகத் திட்டமிட்டு நண்பர்களின் உதவியோடு ஒட்டுமொத்தமாக அழிக்கிறார்.

இது தான் டி.எஸ்.சந்தோஷ் இயக்கத்தில் ஆதர்வா நடிப்பில் வெளிவந்துள்ள ‘கணிதன்’ படத்தின் கதைச்சுருக்கம்.

#TamilSchoolmychoice

நடிப்பு

கிராமத்து இளைஞராக சண்டிவீரன் படத்தில் முஷ்டி முறுக்கினார். விளையாட்டாளராக ஈட்டி படத்தில் நல்ல பெயர் வாங்கினார். அடுத்ததாக இந்தப் படத்தில் தனியார் தொலைக்காட்சி நிருபராக நடித்துள்ளார் அதர்வா.

முதல் பாதியில் , காதல் காட்சிகளில் ஈர்க்காத அதர்வாவின் நடிப்பு, இரண்டாம் பாதியில் கிளைமாக்சை நெருங்கும் போது மட்டும் ரசிக்க வைக்கின்றது.

குரலே அப்படித்தானா இல்லை வசன உச்சரிப்பில் இன்னும் கவனம் செலுத்த வேண்டுமா என்பது தெரியவில்லை. காரணம் பேசும் வசனத்தில் ஒருவித குழந்தைத்தனம் ஒட்டிக் கொண்டே இருக்கின்றது. மற்றபடி கட்டுமஸ்தான உடலமைப்பும், குறுந்தாடி சகிதமாக மார்டன் இளைஞராக ஈர்க்கிறார் அதர்வா.

proxyகேத்தரின் தெரசா … எதுக்காக படத்தில் அவரது கதாப்பாத்திரம் என்றே தெரியவில்லை. ரெண்டு பாடலுக்கு கவர்ச்சியாக ஆட்டம் போட்டிருக்கிறார். அவ்வப்போது ஹீரோவோடு இரண்டு காட்சிகளில் வந்து போகிறார். மற்றபடி அவருக்கு முக்கியத்துவமே வழங்கப்படவில்லை.

“ஆங்.. நீ தான் வோணும்.. கல்யாணம் பண்ணிக்கிறியா?” என்று ஆகாயத்தையே தீப்பிடிக்க வைத்தவரை, இப்படத்தில் ரசிகனை சூடேற்ற மட்டுமே பயன்படுத்தியுள்ளனர்.

வில்லனாக தருண் அரோரா என்ற வட இந்திய நடிகர் நடித்திருக்கிறார். பார்வையில் உருட்டல் மிரட்டல், உடல் மொழியில் கம்பீரம் என வில்லனுக்குச் சரியாகப் பொருந்தியிருக்கிறார்.

இவர்களோடு சுந்தர், கருணாகரன், கே.பாக்கியராஜ், நரேன் ஆகியோரும் தங்களது கதாப்பாத்திரங்களின் மூலமாக ரசிக்க வைக்கின்றனர்.

பாராட்டு பெறும் இடங்கள்

கதையின் மையக்கரு காலத்திற்கு ஏற்றது என்பதோடு விழிப்புணர்வை ஏற்படுத்துகின்றது. இந்தக் கதையில் வரும் சம்பவங்கள் ஒன்றும் தமிழ்நாட்டிற்குப் புதிதல்ல. ஒவ்வொரு நாளும் நாளிதழ்களின் வருவது தான்.

அப்படிப்பட்ட கதை ஒன்றை தேர்ந்தெடுத்து, அதைக் காட்சிபடுத்தியுள்ள இயக்குநரின் துணிச்சலுக்குப் பாராட்டுகள்.

80247_thumb_665எத்தனை டாக்டர்கள், காவல்துறை அதிகாரிகள், அரசாங்க ஊழியர்கள் போலிச் சான்றிதழ்களோடு பணியில் இருக்கிறார்களோ? என ஒரு நிமிடம் பதற வைக்கும் தகவல்களை வைத்திருப்பது, படித்தவர்களுக்கு வேலை கிடைக்காமல் போவதற்கு இது போன்ற போலி சான்றிதழ் மோசடி பேர்வழிகளும் ஒரு காரணம் என சுட்டிக் காட்டியிருப்பது போன்றவை விழிப்புணர்வை ஏற்படுத்துகின்றது.

சிவமணியின் பின்னணி இசை ஹீரோயிசத்திற்கு பக்கபலம் சேர்த்துள்ளது. ஆதர்வாவின் ஆக்சன் காட்சிகளில் அவரது நடிப்பையும் மீறி பின்னணி இசை தான் ரசிக்க வைக்கின்றது.

அரவிந்த் கிருஷ்ணாவின் ஒளிப்பதிவில் காட்சிகள் அனைத்தும் அழகு. குறிப்பாக இரவு நேர சென்னை சாலைகள், மேன்சன், பாடல் காட்சிகள் அனைத்தும் ஈர்க்கின்றது.

சொதப்பல்கள்

இரண்டாம் பாதியில் ஹீரோவிற்கு இத்தனை பெரிய பொறுப்பையும், நுட்பமான அறிவைப் பயன்படுத்தும் காட்சிகளை வைத்திருக்கும் இயக்குநர், முதல் பாதியில் அந்தக் கதாப்பாத்திரத்தை எப்படி காட்டியிருக்க வேண்டும்?

பிபிசி தொலைக்காட்சியில் சேர வேண்டும் என்ற எண்ணம் கொண்ட அந்த இளைஞனின் கதாப்பாத்திரத்தை எவ்வளவு கண்ணியமாக, மிடுக்கோடு காட்டியிருக்க வேண்டும்?

ஆனால் அதற்கு நேர்மாறாக ஆதர்வா அறிமுகமே கதாநாயகியின் (மார்பை) பார்த்த உடனேயே அவள் அழகில் மயங்கி விழும் சராசரி இளைஞனாகவும் (ஒரு அரைகுறை குத்துப் பாட்டு வேற), வீட்டில் தந்தையிடம் திட்டுவாங்கும் வாலிபன் போன்றும் காட்டியிருப்பதால், எடுத்த எடுப்பிலேயே அந்தக் கதாப்பாத்திரம் மீதான ஈர்ப்பு குறைந்துவிடுகின்றது. பின் எப்படி நம்மால் பிற்பாதியில் அந்த ஹீரோ செய்யும் ஆக்சன்களுடன் ஒன்ற முடியும்?

உதாரணமாக கோ, தெகிடி, தனி ஒருவன் போன்ற படங்களை எடுத்துக் கொண்டால், அதில் கதாநாயகனின் கதாப்பாத்திரத்திற்கு அவர்கள் முற்பாதியில் கொடுத்த கனம் தான், பிற்பாதியில் அந்தக் கதாப்பாத்திரம் அறிவுப்பூர்வமாக யோசித்து எதிரியை வீழ்த்துவது நம்பும்படியாக அமைந்தது.

சரி.. இரண்டாம் பாதியில் எடுத்துக் கொண்டால், போலி சான்றிதழ் என்பது தனிமனிதப் பிரச்சனையையும் தாண்டி அரசாங்கப் பிரச்சனையாக விஸ்வரூபம் எடுக்கும் போது, தனியாளாக ஆதர்வா போராடி எதிரியை வீழ்த்துவது வலிய திணிக்கபட்ட ஹீரோயிசமாகவே தோன்றுகிறது.

ஐயா.. ஆறிப் போன தோசைக் கல்லை சூடாக்கவே குறைந்தது சுமார் 10, 15 நிமிடம் ஆகும். ஆனால் நாலு அடியாட்களை வைத்துக் கொண்டு, “உனுக்கு இன்னா செர்டிபிக்கெட்டு வோணும்’ என்று ‘நொடியில் அண்ணா யுனிவெர்சிட்டி சர்டிபிக்கேட்டை’ அச்சடிப்பது எல்லாம் ரொம்ப ஓவர்.

CcHTmhXUsAA0PvN‘தனி ஒருவன்’ சித்தார்த் அபிமன்யூ போல் வில்லனை அவ்வளவு அறிவாளியாகக் காட்டிவிட்டு, வில்லனின் அலுவலகத்தின் உள்ளே ஒரு ஆபீஸ் பாய் நுழைந்து, பாஸ்வேர்டே இல்லாமல் இருக்கும் கம்யூட்டரில், முக்கிய டேட்டாவை எல்லாம் டிரான்ஸ்வர் செய்து எடுத்துச் செல்வது போல் காட்டியிருப்பது மிகப் பெரிய லாஜிக் ஓட்டை.

தடுக்கி விழுந்தாலே வீடியோ எடுத்து தலைப்புச் செய்தியாக வெளியிடும் இந்தக் காலத்தில், அதுவும் போலீஸ்காரரை பட்டென சுடுவது, பத்திரிக்கையாளர்களை கடத்திச் சென்று மிரட்டுவது, பத்திரிக்கை அலுவலகத்தின் உள்ளேயே புகுந்து அராஜகம் செய்வது என்று வில்லன் பல வித்தைகளைக் காட்டுகிறார்.

ஆனால் அரசாங்கம்? யாராவது இருக்கீங்களாப்பா? என்று போலீசையும், நீதித்துறையையும், அமைச்சர்களையும் பார்த்து கேட்கும் படியாக, ஒட்டுமொத்த மோசடி கும்பலையும் அழிக்கும் ஆப்பரேஷனில் ஹீரோவின் மூளை, உடல்பலத்தைத் தவிர வேற ஒரு அதிகாரத்தையும் பயன்படுத்தவில்லை இயக்குநர்.

இதில் அவ்வப்போது ‘தனி ஒருவன்’ பட சாயல் வேறு நினைவுக்கு வருகின்றது.

இப்படியாகப் பல உறுத்தல்களோடு தான் படத்தை பார்க்க முடிகின்றது.

மொத்தத்தில், கணிதன் – அரசாங்கத்திற்கே சவாலான பிரச்சனையை ‘தனி ஒருவனாக’ அழிக்கிறார் ஹீரோ!

– ஃபீனிக்ஸ்தாசன்