Home Featured நாடு காலியாகுமா அம்னோ கூடாரம்? மகாதீர் தலைமையில் புதிய கூட்டணி உருவாகுமா?

காலியாகுமா அம்னோ கூடாரம்? மகாதீர் தலைமையில் புதிய கூட்டணி உருவாகுமா?

495
0
SHARE
Ad

najib mahathirகோலாலம்பூர் – இன்று எதிர்பாராத திருப்பமாக முன்னாள் பிரதமர் துன் மகாதீர் முகமட், தானே முன்வந்து அம்னோவிலிருந்து விலகியிருப்பதாக அறிவித்திருப்பதைத் தொடர்ந்து, ஒரு புதிய அரசியல் சூழலுக்கு நாடு திரும்பியிருக்கின்றது.

முன்பு படாவிக்கு எதிராக அம்னோவிலிருந்து விலகி, தொடர்ந்து அவரது தலைமைத்துவத்திற்கு நெருக்குதல் கொடுத்து, அவரைப் பதவியிலிருந்து வீழ்த்துவதற்கு முனைப்புடன் செயல்பட்ட மகாதீர் இப்போதும் அதே போன்றதொரு வியூகத்தை வகுத்திருப்பதாகத் தெரிகின்றது.

படாவியை வீழ்த்தி, அந்த இடத்தில் நஜிப்பைக் கொண்டுவந்த மகாதீர், இப்போது அதே நஜிப்பை வீழ்த்துவதற்கு அரசியல் சதுரங்க ஆட்டத்தைத் தொடக்கியிருப்பதுதான் சுவாரசியம்.

#TamilSchoolmychoice

Shafie - Apdal - Muhyiddin - Yassinஇந்த முறை அவருக்குத் துணையாக நிற்பது, அம்னோவின் முன்னாள் துணைத் தலைவர் டான்ஸ்ரீ மொகிதின் யாசின் மற்றும் உதவித் தலைவர்களுள் ஒருவரான ஷாபி அப்டால் ஆகிய இரண்டு முன்னணித் தலைவர்கள்! கூடுதலாக பதவி விலக்கப்பட்ட அவரது மகன் முக்ரிஸ் மகாதீர்!

ஆனால், இவர்களும் மகாதீரைப் பின்பற்றி அம்னோவிலிருந்து விலகுவார்களா அல்லது கட்சியிலிருந்தே தங்களின் போராட்டத்தைத் தொடர்வார்களா என்பதுதான் அடுத்து எழுகின்ற கேள்வி!

இவர்களைத் தவிர அம்னோவில் ஏராளமான விசுவாசிகளையும், ஆதரவாளர்களையும், முன்னணித் தலைவர்களின் ஆதரவையும் பெற்றிருப்பவர் மகாதீர். இவர்களில் கணிசமானப் பிரிவினர் அம்னோவிலிருந்து விலகி, மகாதீரின் பின்னால் அணிவகுத்து நிற்பர் என எதிர்பார்க்கப்படும் வேளையில், இன்னொரு கணிசமானப் பிரிவினர், தொடர்ந்து அம்னோவிலேயே இருந்து தங்களின் போராட்டங்களை நஜிப்புக்கு எதிராகத் தொடர்ந்து வருவர் என எதிர்பார்க்கப்படுகின்றது.

மொகிதினும் விலகுவாரா?

Mukhriz-Mahathir-Feature-2மகாதீரைத் தொடர்ந்து மொகிதின் யாசினும் அம்னோவிலிருந்து விலகி மகாதீருடன் இணைந்து நஜிப்புக்கு எதிரானப் போராட்டத்தைத் தொடர்வாரா அல்லது இன்னும் பாகோ அம்னோ தொகுதித் தலைவராக இருந்து கொண்டே நஜிப்புக்கு எதிரானத் தனது உட்கட்சிப் போராட்டத்தைத் தொடர்வாரா என்பது இனிமேல்தான் தெரியும்.

அரசியல் வியூகங்களை வகுப்பதில் – செயல்படுத்துவதில் – கில்லாடியான மகாதீர், தெளிவான சிந்தனையுடனேயே அம்னோவிலிருந்து விலகும் முடிவை எடுத்துள்ளார்.

நாடு முழுவதும் மக்களிடையே நஜிப்புக்கு எதிராக ஏற்பட்டிருக்கும் கொந்தளிப்பு – எதிர்க்கட்சிகள் நஜிப்புக்கு எதிராக எடுத்திருக்கும் நிலைப்பாடு – முன்னாள் அமைச்சர் டத்தோ சைட் இப்ராகிம் துணிந்து முன்னெடுத்திருக்கும் நஜிப்புக்கு எதிரான அரசியல், சமூக சக்திகளை ஒருங்கிணைக்கும் முயற்சிகள் – என பல முனைகளும் தனக்கு சாதகமாக இருப்பதைக் கணக்கில் எடுத்துக் கொண்டுதான் மகாதீர் தனது பதவி விலகலை அறிவித்திருக்கின்றார்.

அனைத்துலக அரங்கில் நஜிப்புக்கு நெருக்குதல்

najib-அவரது அறிவிப்பால் அனைத்துலக அரசாங்கங்களும் மலேசியாவை நோக்கித் தங்களின் பார்வைகளைத் திருப்பும் என்பதும் மகாதீரின் மற்றொரு வியூகமாகும்.

இனி அம்னோ உறுப்பினர் என்ற கட்டுப்பாடுகள் எதுவும் இல்லாமல் சுதந்திரமாக தனது தாக்குதல் அம்புகளை மகாதீர் நஜிப்பை நோக்கி விடுக்க முடியும். அதற்குத் துணையாகத்தான் மொகிதின் யாசினும் அம்னோவிலிருந்து விலகுவார் என எதிர்பார்ப்பதாக மகாதீர் தெரிவித்திருக்கின்றார்.

அம்னோவிலிருந்து தான் வெளியானதற்கு, தனது மகன் முக்ரிஸ் மகாதீரின் அரசியல் விவகாரம் காரணமல்ல என்றும் மகாதீர் தெளிவுபடுத்தியுள்ளார்.

அதே வேளையில் மகாதீரின் விலகலால் அம்னோவுக்குப் பாதிப்பில்லை என்றும் நஜிப்புக்கு ஆதரவான சில அம்னோ தலைவர்கள் கூறியுள்ளனர். இத்தகைய கருத்துகள் நஜிப்பைத் தாங்கிப் பிடிப்பதற்கும், அவரது கண்ஜாடையைப் பெறுவதற்குமான அறிவிப்புகள் தானே தவிர, மலாய் வாக்காளர்களிடத்தில், குறிப்பாக படித்த மலாய்க்காரர்களிடத்தில் மகாதீரின் மீதான அனுதாபமும், நஜிப் மீதான வெறுப்பும் மகாதீரின் பதவி விலகலால் மேலும் கூடுதலாகும் என்பதில் ஐயமில்லை.

உடல்நலமும், ஆயுளும் ஒத்துழைத்தால், சிறையில் இருக்கும் அன்வார் இப்ராகிமின் அரசியல் ஸ்தானத்தை மகாதீர் ஒருவரால் மட்டுமே இன்றைய நிலையில் நிரப்ப முடியும்.

அடுத்துவரும் சில மாதங்களில் மலேசிய அரசியல் போகப்போகும் திசையை நிர்ணயிக்கப் போகும் சக்தியாக –

இன்றைய நிலையில் நஜிப்புக்கு எதிரான அணிகளை ஒரே முனையில்- ஒரே வரிசையில் கொண்டு வந்து சேர்க்கும் ஆளுமையும், தலைமைத்துவ ஆற்றலும் கொண்டவராக –

மகாதீர் ஒருவரே நம் கண் முன்னால் தெரிகின்றார் என்பதுதான் நிதர்சனமான உண்மை!

-இரா.முத்தரசன்