Home Featured நாடு சீனர்களின் சிங்காய் விழாவில் பங்கேற்பு: வரலாறு படைத்தார் ஜோகூர் சுல்தான்

சீனர்களின் சிங்காய் விழாவில் பங்கேற்பு: வரலாறு படைத்தார் ஜோகூர் சுல்தான்

637
0
SHARE
Ad

ஜோகூர் பாரு – சீனர்களின் சிங்காய் விழாவில் பங்கேற்ற வகையில் புதிய வரலாறு படைத்துள்ளார் ஜோகூர் சுல்தான் இப்ராகிம் சுல்தான் இஸ்கந்தர். இந்த விழாவில் பங்கேற்ற முதல் ஜோகூர் ஆட்சியாளர் இவர்தான்.

sultan-johor-chinese festivalஞாயிற்றுக்கிழமையன்று இவ்விழாவில் பங்கேற்க வருகை புரிந்த சுல்தானுக்கு திரளாகக் கூடியிருந்த சீனர்கள் அன்புடன் வரவேற்பு நல்கினர். “டாவுலாட் துவாங்கு” என்று உரக்கச் சொல்லி தங்கள் அன்பை வெளிப்படுத்தியதுடன், சிங்காய் விழாவுக்கே உரிய மேளச் சத்தமும் காதைப் பிளக்கும் வகையில் அபாரமாக இருந்தது எனப் பார்வையாளர்கள் தெரிவித்திருக்கின்றனர்.

இதையடுத்து மிகப்பெரிய சீன மேளத்தை (டிரம்) தன் கையால் இசைத்து, நிகழ்வைத் தொடங்கி வைத்தார் சுல்தான். இதன் வழி வரலாற்றுப் பக்கங்களில் தமது பெயர் இடம்பெறவும் அவர் வழிவகுத்தார்.

#TamilSchoolmychoice

சிங்காய் விழாவில் ஜோகூர் மந்திரி பெசார் முகமட் காலிட் நோர்டின், மசீச துணைத் தலைவர் டத்தோஸ்ரீ வீ கா சியோங் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இதே போன்று பத்து ஆண்டுகளுக்கு முன்னர், ஜோகூரின் துங்கு மக்கோத்தாவாக (இளவரசராக) இருந்தபோதும் இத்தகைய விழா ஒன்றில் சுல்தான் பங்கேற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

சிங்காய் விழா பேரணி சுமார் 10 கிலோ மீட்டர் தூரத்துக்கு நிகழ்ந்தது. இதைக் காண சாலையோரங்களில் ஏறத்தாழ 3 லட்சம் பேர் ஆர்வத்துடன் கூடியிருந்து, பேரணியை ரசித்தனர்.

“அனைவரையும் ஒரே குடும்பமாக மதிக்கும் தனிப்பட்ட கலாச்சாரம் ஜோகூருக்கு உண்டு. பிறரது விழாக்களையும் மதித்து, அவற்றைக் கொண்டாட வேண்டுமென ஜோகூர் மக்களைக் கேட்டுக் கொள்கிறேன்” என்று இந்நிகழ்வில் பேசிய சுல்தான் இப்ராகிம் சுல்தான் இஸ்கந்தர் கேட்டுக் கொண்டார்.

ஜோகூர் சுல்தானின் சீன விழா பங்கேற்பு குறித்த காணொளி அவரது அதிகாரத்துவ முகநூல் பக்கத்தில் வெளியிடப்பட்ட பின்னர், நாடு முழுமையிலுமிருந்து 3 இலட்சத்துக்கும் அதிகமானோர் இந்த காணொளியைக் காண முகநூல் பக்கத்தை அணுகினர். இதிலிருந்து ஜோகூர் சுல்தான் மீதான மக்களின் அபிமானமும் வெளிப்பட்டிருக்கின்றது.