புத்ராஜெயா – நியூசிலாந்து நாட்டின் புகழ்பெற்ற ‘மனுகா’ (Manuka) தேன் இறக்குமதிக்கு மலேசிய சுகாதார அமைச்சு அண்மையில் திடீர் தடை விதித்துள்ளது. இத்தடை உடனடியாக அமலுக்கு வந்திருப்பதாகவும் அந்த அமைச்சு அறிவித்திருந்தது.
நியூசிலாந்தில் இருந்து இறக்குமதி செய்யப்படும் இந்தத் தேனில், தடை செய்யப்பட்ட பொருட்கள் கலக்கப்பட்டிருக்கலாம் என்ற ஐயத்தின் பேரில் இத்தடை விதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.
சுகாதார அமைச்சின் தலைமை இயக்குநர் டாக்டர் நூர் ஹிஷாம் அப்துல்லா (படம்), இதுகுறித்து கூறுகையில், எவர்கிரீன் லைஃப் என்ற நியூசிலாந்து நிறுவனத்தின் தயாரிப்பான மனுகா தேனில், டை ஹைட்ராக்சி அசிடோன் மற்றும் மீதைல் கிளையாக்சோல் ஆகிய இரு பொருட்கள் கலக்கப்பட்டிருக்கலாம் என சந்தேகிப்பதாகக் கூறினார்.
“இக்குறிப்பிட்ட தேனை வாங்கியவர்கள், அதை உட்கொள்ள வேண்டாம் என அறிவுறுத்துகிறோம். வாங்கிய தேனை உடனே சம்பந்தப்பட்ட கடைகளில் திருப்பி அளிக்க வேண்டும்,” என ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட அறிக்கையில் நூர் ஹிஷாம் அறிவுறுத்தி உள்ளார்.
“தேனை உட்கொண்டவர்களுக்கு ஆபத்து ஏதுமில்லை என்றாலும், தங்களின் உடல்நலம் குறித்த சந்தேகங்கள் எழுகிறது எனில், உடனடியாக மருத்துவர்களைச் சந்தித்த ஆலோசனை பெறுவது நல்லது. தேன் இறக்குமதி தடை செய்யப்பட்டுவிட்டாலும், அடுத்தக்கட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளோம்” என நூர் ஹிஷாம் தெரிவித்துள்ளார்.
புதிய முதலீட்டு நிறுவனம் மனுகா தேன் நிறுவனத்தை வாங்கியது
இதற்கிடையில் தனியார் முதலீட்டு நிறுவனமான பசிபிக் இக்குவிட்டி பார்ட்னர்ஸ் (Pacific Equity Partners) என்ற நிறுவனம் 110 மில்லியன் அமெரிக்க டாலர் செலுத்தி மனுகா தேன் நிறுவனத்தை வாங்கியுள்ளது. இதற்கான அனுமதியை நியூசிலாந்தின் வெளிநாட்டு முதலீட்டு அலுவலகம் வழங்கியுள்ளது.
மனுகா தேன் நிறுவனம் நியூசிலாந்தின் மிகப் பெரிய தேன் உற்பத்தித் தொழிற்சாலையைக் கொண்டிருக்கின்றது. உலகின் 50க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு இந்த தேன் ஏற்றுமதி செய்யப்படுகின்றது. அதில் மலேசியாவும் ஒன்றாகும்.
பசிபிக் இக்குவிட்டி பார்ட்னர்ஸ் நிறுவனம் ஆஸ்திரேலியா, நியூசிலாந்து வட்டாரத்தில் இயங்கும் மிகப் பெரிய தனியார் முதலீட்டு நிறுவனமாகும். இதன் நிர்வாகத்தின் கீழ் ஏறத்தாழ 6 பில்லியன் ஆஸ்திரேலிய டாலர் கொண்ட நிதி நிர்வாகம் கையாளப்படுகின்றது.