ஆப்கானிஸ்தானின் கிழக்கு பகுதியில் உள்ள ஜலாலாபாத்தில் இருக்கும் இந்திய தூதரகம் அருகே இன்று குண்டுவெடிப்பு சம்பவம் நடந்துள்ளது. குறைந்தது இரண்டு குண்டுகள் வெடிக்கும் சப்தம் கேட்டுள்ளது.
மேலும் சிலர் துப்பாக்கிகளால் சுட்டுள்ளனர். குண்டுவெடிப்பு சம்பவம் இந்திய தூதரகத்தை குறி வைத்தே நடத்தப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்த தாக்குதல் சம்பவத்தில் தூதரக கதவுகள், ஜன்னல்கள் சேதம் அடைந்துள்ளன.
மேலும் 8 கார்களும் சேதம் அடைந்துள்ளன. இந்த தாக்குதலுக்கு எந்த ஒரு தீவிரவாத அமைப்பும் இதுவரை பொறுப்பேற்கவில்லை. இன்றைய தாக்குதலில் 10 பேர் காயம் அடைந்துள்ளதாக கூறப்படுகிறது.
இது குறித்து மத்திய வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் விகாஸ் ஸ்வரூப் கூறுகையில், ஜலாலாபாத்தில் உள்ள நம் தூதரகத்தை குறி வைத்து தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. அங்கிருந்த அனைவரும் பத்திரமாக உள்ளனர் என்றார்.
முன்னதாக கடந்த ஜனவரி மாதம் தான் இந்திய தூதரகம் அருகில் உள்ள பாகிஸ்தான் தூதரகத்தில் தற்கொலைப்படை தாக்குதல் நடத்தப்பட்டது. அந்த தாக்குதலுக்கு ஐஎஸ்ஐஎஸ் அமைப்பு பொறுப்பேற்றது.