புதுடெல்லி – ஏர்செல்-மேக்சிஸ் வழக்கில் குற்றவாளிகள் யாராக இருந்தாலும் தப்ப விடமாட்டோம் என மத்திய அமைச்சர் அருண் ஜெட்லி கூறியுள்ளார்.
ஏர்செல்- மேக்சிஸ் ஒப்பந்தத்திற்கு, முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் அனுமதி வழங்கியதில் முறைகேடு நடந்துள்ளது என்றும், இந்த ஒப்பந்தத்திற்குப் பிறகே 14 நாடுகளிலும் கார்த்தி சிதம்பரத்துக்கு சொந்தமான நிறுவனங்கள் முதலீடு செய்துள்ளதாகவும், சிங்கப்பூரில் உள்ள துணை நிறுவனத்தின் மூலமே பணப் பரிவர்த்தனைகள் நடந்துள்ளன என்றும்,
இது தொடர்பாக 14 நாடுகளின் அரசுகளை அமலாக்கத்துறையும், வருமான வரித்துறையும் அணுக இருப்பதாகவும் ‘பயனீர்’ என்ற ஆங்கில பத்திரிகை செய்தி வெளியிட்டு இருந்தது.
இந்த செய்தியை அடிப்படையாகக் கொண்டு, ப.சிதம்பரம் மற்றும் அவரது மகன் கார்த்தி சிதம்பரம் ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்க கோரியும், இது குறித்து நாடாளுமன்றத்தில் விவாதிக்க வேண்டும் என்று வலியுறுத்தியும் நாடாளுமன்ற இரு அவைத்தலைவர்களிடமும் அ.தி.மு.க எம்.பி.க்கள் நோட்டீஸ் அளித்திருந்தனர்.
இந்த நிலையில், நாடாளுமன்ற இரு அவைகளும் நேற்று காலை கூடியதும், இப்பிரச்னையை எழுப்பிய அ.தி.மு.க எம்.பி.க்கள், முறைகேடாக சொத்துக் குவித்துள்ள ப.சிதம்பரம் மற்றும் கார்த்தி சிதம்பரம் ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்க கோரி அமளியில் ஈடுபட்டதால், இரு அவைகளும் முடங்கின.
இந்நிலையில், அ.தி.மு.க எம்.பி.க்களின் கேள்விக்கு மத்திய அமைச்சர் அருண் ஜெட்லி நேற்று நாடாளுமன்றத்தில் பதிலளித்தார். அப்போது, ”ஏர்செல்-மேக்சிஸ் வழக்கில் குற்றவாளிகள் யாராக இருந்தாலும் தப்ப விடமாட்டோம்.
இந்த வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டிருக்கிறது. விசாரணை தாமதம் என்பது உண்மையல்ல. அதேபோல், அமலாக்கத்துறை மற்றும் வருமானவரித்துறை சோதனையில் பல ஆவணங்களும் பறிமுதல் செய்யப்பட்டிருக்கிறது” என்றார்.