சென்னை – முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம் மீது நிலுவையில் இருக்கும் ஐ.என்.எக்ஸ் மீடியா மற்றும் ஏர்செல், மேக்சிஸ் வழக்குகளில் அவருக்கு வழங்கப்பட்டிருந்த முன் ஜாமீனை டில்லி உயர்நீதிமன்றம் நேற்று செவ்வாய்க்கிழமை தள்ளுபடி செய்ததைத் தொடர்ந்து அவரைக் கைது செய்யும் பொருட்டு இந்திய அமுலாக்க அதிகாரிகளும் சிபிஐ எனப்படும் மத்திய புலனாய்வுத் துறை அதிகாரிகளும் அவரது புதுடில்லி வீட்டில் மாலை 6.45 மணியளவில் குவிந்தனர்.
எனினும் அவர் வீட்டில் இல்லை என்பதையும், அவரது கைத்தொலைபேசி தொடர்பு கிடைக்கவில்லை என்பதையும் கண்டறிந்த அதிகாரிகள் அவரைத் தேடும் பணியில் ஈடுபட்டிருக்கின்றனர்.
அதைத் தொடர்ந்து அடுத்த இரண்டு மணி நேரத்தில் சிதம்பரம் தங்களின் முன் வரவேண்டும் எனக் கோரிக்கை விடுக்கும் அறிவிப்பை சிபிஐ அதிகாரிகள் நேற்று செவ்வாய்க்கிழமை நள்ளிரவு வாக்கில் அவரது வீட்டின் முகப்பில் ஒட்டினர்.

இன்று புதன்கிழமை காலை வரை சிதம்பரம் சிபிஐ அதிகாரிகளிடம் தொடர்பு கொள்ளவில்லை என இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
எனினும், டில்லி உயர்நீதிமன்றத் தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் சிதம்பரத்தின் வழக்கறிஞர்கள் அவருக்கு முன் பிணை (ஜாமீன்) வழங்கப்பட வேண்டும் என தங்களின் மேல்முறையீட்டைச் சமர்ப்பிக்க உள்ளனர்.
இன்று புதன்கிழமை காலை 10.30 மணிக்கு உச்ச நீதிமன்றம் கூடும்போது, சிதம்பரத்தின் மேல்முறையீட்டை அவசர வழக்காக விசாரிக்கும்படி அவரது வழக்கறிஞர்கள் கோரிக்கை விடுப்பர் என எதிர்பார்க்கப்படுகிறது.