Home Featured நாடு கேமரன் மலை நாடாளுமன்றத்தில் அடுத்த பொதுத் தேர்தலில் போட்டியிட குறி வைக்கின்றாரா கேவியஸ்?

கேமரன் மலை நாடாளுமன்றத்தில் அடுத்த பொதுத் தேர்தலில் போட்டியிட குறி வைக்கின்றாரா கேவியஸ்?

719
0
SHARE
Ad

Kayveasகோலாலம்பூர் – அடுத்த பொதுத் தேர்தலுக்கு இன்னும் ஏறத்தாழ இரண்டு ஆண்டுகளே இருக்கும் நிலையில், கடந்த பொதுத் தேர்தல்களில் ஒரே ஒரு நாடாளுமன்றத் தொகுதி ஒதுக்கப்பட்டு போட்டியிட்டு வந்துள்ள மைபிபிபி கட்சி, இந்த முறை எந்தத் தொகுதியில் போட்டியிடுவது என்பது குறித்த ஆய்வுகளைத் தொடக்கியுள்ளதாக அந்தக் கட்சி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

மஇகா வசம் தற்போதுள்ள, கேமரன் மலை தொகுதியை மைபிபிபி கட்சிக்கு ஒதுக்க வேண்டுமென்றும், அவ்வாறு ஒதுக்கப்பட்டால் அந்தத் தொகுதியில் போட்டியிடலாம் என்ற எண்ணத்தையும் மைபிபிபி தேசியத் தலைவர் டான்ஸ்ரீ டத்தோஸ்ரீ கேவியஸ் கொண்டிருக்கின்றார் என்றும் அந்தக் கட்சி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

கேமரன் மலையில் தனக்கு நெருக்கமான மைபிபிபி தலைவர்களை அண்மையக் காலமாக அணுகியும், அங்குள்ள தனது தொடர்புகளின் மூலமாகவும், கேமரன் மலையில் தான் போட்டியிட்டால், வெற்றி வாய்ப்புகள் எப்படி இருக்கும் என்ற ஆய்வையும் கேவியஸ் தொடங்கி விட்டதாகவும் மைபிபிபி கட்சி வட்டாரங்கள் மேலும் தெரிவிக்கின்றன.

#TamilSchoolmychoice

பழனிவேலுவும் போட்டியிடுவதாக அறிவிப்பு

G-Palanivel1அண்மையில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய மஇகாவின் முன்னாள் தேசியத் தலைவர் டத்தோஸ்ரீ ஜி.பழனிவேலுவும் அடுத்த தேர்தலில் தான் மீண்டும் கேமரன் மலையில் போட்டியிடப் போவதாக அறிவித்துள்ளார்.

ஆனால், மஇகா கட்சியில் உறுப்பினராக இல்லாத அவர், எந்த அடிப்படையில் மீண்டும் அந்தத் தொகுதியில் போட்டியிடுவார் என்பது குறித்தோ, தேசிய முன்னணி சார்பில் போட்டியிடுவாரா அல்லது எதிர்க்கட்சிகள் சார்பில் போட்டியிடுவாரா என்பது குறித்தோ அவர் இன்னும் விளக்கவில்லை.

அண்மையக் காலமாக பழனிவேலுவுடன் நெருக்கம் பாராட்டி வருகின்றார் கேவியஸ். பழனிவேலுவுடன் கலந்து கொண்ட சில நிகழ்ச்சிகளில், பழனிவேலுவுக்கு ஆதரவாகப் பேசிவருவதோடு, பழனிவேலுவின் தலைமைத்துவத்திற்கு ஆதரவு தெரிவிப்பதாகவும் பகிரங்கமாகக் கூறி வருகின்றார் கேவியஸ்.

டத்தோஸ்ரீ சுப்ரமணியத்தின் தலைமையிலான மஇகாவின் நடப்பு தலைமைத்துவத்தை மைபிபிபி அங்கீகரிக்கவில்லை என்றும் கேவியஸ் அறிவித்திருந்தார்.

கேமரன் மலையின் நடப்பு நாடாளுமன்ற உறுப்பினரான பழனிவேலுவின் ஆதரவைப் பெறுவதும் கேவியசின் நோக்கங்களில் ஒன்று என்றும், அப்படியே கேமரன் மலையில் போட்டியிட்டால், பழனிவேலுவின் ஆதரவு தனக்குக் கிடைத்தால் அது கூடுதல் பலமாக இருக்கும் என கேவியஸ் நம்புவதாகவும் சில அரசியல் வட்டாரங்கள் தெரிவித்தன.

மைபிபிபியின் நாடாளுமன்றத் தொகுதி எங்கே கிடைக்கும்?

Kayveas-PPP assembly-2015கடந்த ஆண்டில் மைபிபிபி ஆண்டுப் பேரவையில் உரையாற்றும் கேவியஸ்….

கேவியஸ் தலைமையேற்ற பின், நீண்ட இடைவெளிக்குப் பின் முதன் முதலாக 2004ஆம் ஆண்டு பொதுத் தேர்தலில், (அப்போதைய) பிபிபி கட்சிக்கு தைப்பிங் தொகுதி ஒதுக்கப்பட்டது. அதுவரை கெராக்கான் போட்டியிட்ட தொகுதியாக இருந்து வந்த தைப்பிங் தொகுதியை முதன் முறையாக கெராக்கான், பிபிபி கட்சிக்காக விட்டுக் கொடுக்க, அங்கு போட்டியிட்டு வெற்றி பெற்றார் கேவியஸ்.

தொடர்ந்து அப்போதைய பிரதமர் துன் படாவி அமைச்சரவையில் துணையமைச்சராகப் பொறுப்பேற்றார்.

ஆனால், 2008ஆம் ஆண்டுப் பொதுத் தேர்தலில், அரசியல் சுனாமியால், தைப்பிங் தொகுதியில் தோல்வியடைந்தார் கேவியஸ்.

Chandrakumanan-Sliderபின்னர் 2013ஆம் ஆண்டு பொதுத் தேர்தலில், தைப்பிங் தொகுதி மீண்டும் கெராக்கான் வசம் சென்றது. அங்கு போட்டியிட்ட கெராக்கான் கட்சியின் டான் லியான் ஹோ ஜசெகவிடம் தோல்வியடைந்தார்.

அதே பொதுத் தேர்தலில், கெராக்கான் கட்சிக்கென ஒதுக்கப்பட்டிருந்த கூட்டரசுப் பிரதேசத்திலுள்ள கெப்போங் தொகுதி பிபிபி கட்சிக்கு ஒதுக்கப்பட்டது.

ஆனால், கேவியஸ் அந்தத் தேர்தலில் போட்டியிடாமல், அந்தத் தொகுதியில் டத்தோ சந்திரகுமணன் (படம்) போட்டியிட்டு, தோல்வியடைந்தார். ஆண்டாண்டு காலமாக, ஜசெக வென்று வந்துள்ள தொகுதி அது.

இந்த சூழலில்தான், அடுத்த பொதுத் தேர்தலில், மஇகாவிடமிருந்து கேமரன் தொகுதியைப் தொகுதிப் பரிமாற்றம் பெற்று, அங்கு கேவியஸ் போட்டியிட உத்தேசித்துள்ளார் என மைபிபிபி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

மஇகா சார்பில் மீண்டும் தேவமணி போட்டியா?

sk-devamany-jan17-300x202இதற்கிடையில், மஇகாவின் தேசியத் துணைத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள டத்தோஸ்ரீ எஸ்.கே.தேவமணி மீண்டும் கேமரன் மலை நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிட ஆர்வம் கொண்டுள்ளார் என்றும் மஇகா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

2004ஆம் ஆண்டு, 2008ஆம் ஆண்டு பொதுத் தேர்தல்களில் கேமரன் மலை நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிட்டு வென்று வந்துள்ள தேவமணி, அரசியல் சுனாமிக்கு இடையிலும் 2008 பொதுத் தேர்தலில் கேமரன் மலைத் தொகுதியில் 3,117 வாக்குகள் வித்தியாசத்தில் வென்று காட்டினார் என்பது குறிப்பிடத்தக்கது.

2013ஆம் ஆண்டு பொதுத் தேர்தலில், அப்போதைய தேசியத் தலைவர் பழனிவேலு கேமரன் மலை நாடாளுமன்றத் தொகுதியைத் தேர்ந்தெடுக்க, சுங்கை சிப்புட் நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிட அனுப்பி வைக்கப்பட்ட தேவமணி அங்கு தோல்வியடைந்தார்.

2013 பொதுத் தேர்தலில் கேமரன் மலையில் முதன் முறையாகப் போட்டியிட்ட பழனிவேல் 462 வாக்குகள் வித்தியாசத்திலேயே வென்றுவர முடிந்தது.

அதன்பின்னர், கடந்த ஆண்டு மஇகா தேர்தலில் எதிர்பாராதவிதமாக, டத்தோ சரவணனைத் தோற்கடித்து கட்சியின் துணைத் தலைவர் பதவியைக் கைப்பற்றினார் தேவமணி.

எனவே, அடுத்த பொதுத் தேர்தலில் கூர்ந்து கவனிக்கப்படும் நாடாளுமன்றத் தொகுதிகளில் ஒன்றாக கேமரன் மலை திகழக் கூடும்!

-இரா.முத்தரசன்