நியூயார்க் – நியூயார்க் நகரில் உலக வர்த்தக மையத்தின் இரட்டைக் கோபுரம் பல ஆண்டுகளுக்கு முன்னால் செப்டம்பர் 11ஆம் தேதி தீவிரவாதிகளால் தரைமட்டமாக்கப்பட்டதும், அதற்குப் பின்னர் தற்போது அந்த இடத்தில் புதிய இரட்டைக் கோபுரம் கட்டப்பட்டுள்ளதும் அனைவரும் அறிந்ததே!
புதிய இரயில் நிலையத்தில் பின்னணியில் தெரிவதுதான் தரைமட்டமாக்கப்பட்ட உலக வர்த்தக மையத்தின் புதிய இரட்டைக் கோபுரம்….
அந்த புதிய இரட்டைக் கோபுர வளாகத்தில் உலகிலேயே அதிக செலவில் கட்டப்பட்ட புதிய இரயில் நிலையம் வெள்ளிக்கிழமை (4 மார்ச்) திறந்து வைக்கப்பட்டது.
‘ஓக்கலுஸ்’ (Oculus) எனப் பெயர் சூட்டப்பட்டுள்ள இந்த இரயில் நிலையம் தொடக்கத்தில் 2 பில்லியன் அமெரிக்க டாலர் செலவினத்தில் கட்டப்பட முடிவு செய்யப்பட்டது.
ஆனால் தற்போது கட்டி முடிக்கப்பட்டபோது, 3.85 பில்லியன் அமெரிக்க டாலர்களை கட்டுமானச் செலவினங்களாக விழுங்கி விட்டது. இதை வைத்துப் பார்க்கும்போது இன்றைக்கு உலகிலேயே அதிக செலவினத்தில் கட்டப்பட்ட இரயில் நிலையம் இதுதான்!
“ஓக்கலுஸ்” எனப் பெயர் சூட்டப்பட்டுள்ள, புதிய இரயில் நிலையத்தின் முகப்புத் தோற்றம்…
ஸ்பெயின்-சுவிஸ் நாட்டு வடிவமைப்பாளர் நிறுவனம் வடிவமைத்த இந்த இரயில் நிலையம், இரண்டு சிறகுகளோடு வான் வெளியில் நீண்டு கொண்டிருப்பதுபோல் கட்டப்பட்டுள்ளது.
இரும்பும், கண்ணாடியும் இதன் கட்டுமானத்தில் பிரதானமாகப் பயன்படுத்தப்பட்டுள்ளன.
ஓக்கலுஸ் இரயில் நிலையத்தின் உட்புறத் தோற்றம்…
-செல்லியல் தொகுப்பு